"சைக்கிளில் உணவுப் பொருட்களைக் கொண்டு செல்பவனாகவே எனது வாழ்க்கை தொடராது", என்கிற மன எழுச்சியை எனக்கு "ஜி ஹே பார்க்" கொடுத்தார் என்றால் சிரிப்பீர்கள், வெளிறிப் போன சில சட்டைகளும், எந்த நேரத்திலும் தரைகளைத் தொட்டுப் பார்த்துவிடும் நிலையில் இருந்த பழைய காலணியும், மிச்சமிருந்த கொஞ்ச நம்பிக்கைகளும் தவிர வேறேதுமில்லாத நாட்களில் காலணியை விட நம்பிக்கை வேகமாகத் தேய்ந்து விடும் போலிருந்த காலம், "டக் யூங்" என்கிற மும்பையின் வால்கேஸ்வரில் வசித்த ஒரு கொரிய முதலாளி ஒரு கிறிஸ்துமஸ் நாளிரவில் "ஜி ஹே பார்க்" கின் இசைத்தட்டு ஒன்றைப் பரிசளித்தார்.
பசியில் காதடைத்துப் படுத்துக் கிடந்த அந்த இரவில் அவரது வயலின் கம்பிகளில் இருந்து நம்பிக்கையின் கற்றைகளை எனக்குள் செலுத்தினார். முதன்முதலில் "ஜி ஹே பார்க்"கின் இசைத் தொகுப்பைக் கேட்டபோது எனக்கு வயது 24, அவருக்கு வயது 14, ஆனால், அவர் உருவாக்கியதும், நினைவுபடுத்தியதும், பல்லாயிரமாண்டு கால மானுட வரலாற்றின் ஒப்பற்ற இசைக்குறிப்புகள். "ஜி ஹே பார்க்" கின் காற்றைக் கலைக்கும் ஒவ்வொரு துளி இசைக்குறிப்பும் வாழ்க்கையின் கணங்களை அளவற்ற வியப்பில் ஆழ்த்தி எனது நம்பிக்கையின் வேர்களை இன்னும் ஆழமாக இந்தப் புவிப் பந்தில் ஊன்றச் செய்தது. நெடு நாட்களுக்குப் பிறகு நேற்றைய இரவில் அவரது வயலின் இசையைக் கேட்டேன்.
"ஜி ஹே பார்க்"கின் வயலினை கேட்கும் போது எனக்கு என்ன நிகழ்கிறது என்றொரு கேள்வியை நேற்று இரவு படுக்கையில் சாய்வதற்கு முன்பாக என்னிடமே கேட்டேன், என்ன நிகழ்கிறது?, வயலினின் கம்பிகளோடு உரசும் அந்தக் குதிரையின் நீள முடிகளால் உங்கள் இருப்பை உணர்த்தும் நியூரான்களை முதலில் வலிக்காமல் உங்கள் ஹைப்போதலாமஸில் இருந்து பிடுங்கி எறிந்து விடுவார், பிறகு கம்பிகளுக்கும், உரசும் மெல்லிய நாரிழைகளுக்கும் இடையில் அவர் உருவாக்கும் காற்றுச் சங்கிலிகளை உங்கள் காதுகளுக்குள் செலுத்துவார், அதிரும் அந்தக் காற்றுச் சங்கிலிகள் உங்களுக்குள் உண்டாக்கும் மாற்றங்கள் வாழ்க்கையைக் குறித்த உங்கள் எள்ளலை அடித்து நொறுக்கும்.
வாழ்க்கை இத்தனை பிரம்மாண்டமானதா?, வெறும் புலன்களால் வீடுபேறடைய முடியுமா? என்றெல்லாம் உங்களுக்குள் குழப்பத்தை உண்டாக்குவார், பிறகு சலனங்கள் இல்லாத ஒரு இலைக்கும் அதன் மீது படிந்து கிடக்கும் காலைப் பனிக்கும் இடையில் கிடக்கும் அனிச்சையான இடைவெளியைப் போல உங்களை உணர வைப்பார், அப்போது ஒன்று நீங்கள் அவருடைய வயலினாக இருப்பீர்கள் அல்லது அதனுள்ளிருந்து பெருக்கெடுக்கும் இசையாக இருப்பீர்கள், அல்லது அவ்விரண்டாலும் நிரப்பப்பட்ட ஒரு மானுடத் துண்டமாய் மிதப்பீர்கள், நானில் இருந்து நாமுக்கும், நாமில் இருந்து ஏதுமின்மைக்கும் பிறகு ஏதுமின்மையில் இருந்து எல்லாவற்றுக்கும் உங்களை அழைத்துப் போவார்.
இருள் சூழ்ந்திருக்கும் எல்லைகளற்ற அகண்ட வெளிக்குள் உங்களைத் தள்ளி உங்கள் மனக் கதவுகளில் ஏதும் நுழைய முடியாதபடி அடைத்து விடுவார், பிறகு திரிக்கும் விளக்குக்கும் இடையில் தவிக்கும், தத்தளிக்கும் ஒளிப்பிழம்புகளை ஒவ்வொன்றாய் ஏற்றுவார், நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் முடிவுறாத விளக்கொளிப் பிழம்புகளை அவர் ஏற்றி முடிக்கும் ஒரு கணத்தில் உங்கள் முன்னாள் ஒரு மிக உயர்ந்த பனி படர்ந்த மலைச்சிகரம் விளக்குகளின் வெளிச்சத்தில் தகதகக்கும், அதன் பாதைகளில் மெல்ல ஒலிக்கும் சின்னச் சின்ன வெண்கல மனியோசைகளை அவர் உங்கள் உடலின் செல்களில் ஏற்றுவார், அப்போது காதுகள் மூச்சு விடப் பழகும், நாசிகளில் நீங்கள் இசை கேட்பீர்கள்.
Ji – Hae Park’s strings from Dokho Island
நீங்கள் வீட்டிலிருந்து வெளியே தூக்கி எறியப்பட்டு, ஒரு மிகப்பெரிய பலூனில் அடைக்கப்பட்டு உலகின் புராதான நகரங்களின், நதிக்கரைகளின், மேகங்களின் வழியாக உயர உயரப் பறப்பீர்கள், பிறகு அவரது எஞ்சிய இசையின் நினைவுகளைப் பற்றிக் கொண்டு வீடு திரும்புங்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்