ஐந்து மாநிலத் தேர்தலில் கொண்டாடப்படுவது காங்கிரஸ் கட்சியின் வெற்றி அல்ல, மாறாக பாரதீய ஜனதாக் கட்சியின் தோல்வி, பாரதீய ஜனதாக கட்சியின் செயல்திட்டங்களில் மிக முக்கியமான ஒன்று மதம் சார்ந்த பொய்யான உணர்வு அலைகளைத் தூண்டி விட்டு மக்களை ஒரு கும்பலில் கோவிந்தா (“Mob Mentality”) மனநிலைக்குக் கொண்டு வருவது. பிறகு அந்தப் பொய்க்கு அலங்காரம் செய்து வெகுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஊடாக ஒரு உண்மையைப் போல எடுத்துச் செல்வது, பிறகு அதன் மீது சமூக அரசியல் வண்ணம் பூசி அதிகார மையமாக உருமாற்றம் பெற வைப்பது. இந்தியாவைப் போன்றதொரு வளரும் ஏழை நாட்டில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய வெறுப்பு அல்லது அடிப்படை மதவாதம் என்கிற இரண்டு இணையான கோடுகளின் மூலமாக மேற்கண்ட செயல்திட்டங்கள் மூலமாகவே பாரதீய ஜனதா தன்னை வளர்த்து எடுத்துக் கொண்டது. பெருநகரங்களின் அரசு அலுவலகங்கள், பார்ப்பனீய பனியாக்களின் நிதி மற்றும் பங்குச் சந்தைப் பொருளாதாரம் சார்ந்த நிறுவனங்கள், நேரடிச் சங்கிகளான காக்கி டவுசர்கள் என்று தேங்கிக் கிடந்த ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பின் அரசியல் நிறுவனமான பாரதீய ஜனதாக் கட்சி இன்றைக்கு இந்தியாவின் ஒற்றைக் கட்சியாக மாற்றம் பெறுவோம் என்று கூக்குரல் இடுவதற்கு மேற்சொன்ன செயல்திட்டமே காரணம்.
ஒருவகையில் பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளும் தங்கள் வளர்ச்சிக்காக யாருக்கேனும் நன்றி சொல்ல வேண்டுமென்றால் முதலில் பாகிஸ்தானுக்குத் தான் சொல்ல வேண்டும், இஸ்லாமிய வெறுப்பின் மூலதனத்தைக் கொண்டு நாம் இந்துக்களாக இணைய வேண்டும் என்று பல நேரங்களில் பாகிஸ்தான் மீதான பகையுணர்ச்சியை புகை மூட்டம் போல காவிகள் வளர்த்தெடுத்தார்கள், இந்தியப் பொருளாதாரம் உலகச் சந்தைக்குத் திறந்து விடப்பட்ட நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலும் சரி, தொழில் நுட்ப வளர்ச்சியை நோக்கி இந்தியாவை நகர்த்த முயன்ற ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்திலும் சரி, காவிகள் இந்துத்துவ ஒற்றுமை ஓங்குக என்கிற முழக்கத்தை மெல்ல பெருநகர நடுத்தர மக்களிடம் எடுத்துச் சென்றார்கள்.
மந்தை ஆடுகளின் மனப்போக்குக் கொண்ட பெருநகர நடுத்தர மக்கள் காவிகளின் இந்த செயல்திட்டத்தை தங்களுக்கு வழங்கப்பட்ட பெருமைக்குரிய பரிசாகக் கருதி அடிப்படை இந்துத்துவத்தின் கோர முகத்தை இந்துக்களின் பெருமை என்கிற முகமூடியோடு ஊரகப் பகுதிகளுக்குக் கடத்தினார்கள். மிக நுட்பமான அரசியல் அறிவு வழங்கப்படாத கிராமங்கள் தேர்தல் நேரத்தில் வாஜ்பாய், மோடி போன்ற பிம்பங்களை நம்பும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். அவர்களிடம் வளர்ச்சி, ஊழலற்ற புனிதம், இந்துக்களின் பாதுகாப்பு போன்ற தங்களுக்குத் தொடர்பே இல்லாத வாக்குறுதிகளைக் காவிகள் உலவ விட்டார்கள். இறுதியில் பாரதீய ஜனதா என்கிற அடிப்படை இந்துத்துவ பயங்கரவாதிகளின் கட்சியாக மட்டுமில்லாமல் இந்தியாவில் ஊழலை ஒழிக்கவும், இந்துக்களைப் பாதுகாக்கவும் அவதாரமெடுத்த ஆபத்பாந்தவனாக வளர்ந்து கிளை பரப்பி ஆட்சி அதிகாரத்தை மட்டுமன்றி இந்தியாவின் இயற்கை வளங்களையும், சந்தைப் பொருளாதாரத்தையும் பெருமுதலைகளை நோக்கி மடைமாற்றியது காவிக் கூட்டம், அதற்கான கூலியாக பெரும் பொருளைப் பெற்றுக் கொண்டது மட்டுமில்லாமல் அதனைக் கொண்டு இந்தியாவில் ஆழமாக ஊடுருவி இருக்கும் வர்ண பேதங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்புகளை கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைகளில், சமூக நலத்துறைகளில் பல்வேறு சட்டத் திருத்தங்கள் மூலமாக நிலையாக வைத்திருப்பதற்கான திட்டங்களை உருவாக்கி வெற்றிகரமாக செயல்படுத்தத் துவங்கியது.
இத்தகைய திட்டங்களால் பெருமளவு நாம் தான் பாதிக்கப்படப் போகிறோம் என்கிற சூழ்ச்சியை அறியாத இந்திய மக்களின் பெரும்பான்மையான பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் காவிகளின் கூட்டத்தோடு ஐக்கியமாகி அவர்களின் வெற்றிக்குத் துணை நின்றார்கள்.
உச்சக்கட்டமாக கடந்த 2017 உத்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் சங்கிகள் ஊடகங்களின் மூலமாக செயல்படுத்திய உணர்வு மயமான இந்துத்துவ வெறியேற்றம் பெருவெற்றியை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்தது, 40 விழுக்காடு மக்கள் வாக்களிக்காத அந்தத் தேர்தலில் சங்கிகள் பெற்ற வெற்றி “ஸ்விங் வோட்டர்ஸ்” (Swing Voters) எனப்படுகிற புதிய தலைமுறை வாக்காளர்கள் மற்றும் அரசியல் குழப்பம் கொண்ட நடுத்தர மேல்தட்டு மக்களால் வழங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஸ்விங் வோட்டர்ஸ் வழங்கிய கொடை காவிகளை வெற்றி பெற வைத்தது, சமூக இணைய தளங்கள் மற்றும் அலைபேசி வழியான பரப்புரை வழிமுறைகளை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட பாரதீய ஜனதாக கட்சி, இந்துத்துவ வெறியேற்றம், இஸ்லாமிய வெறுப்புணர்வு போன்ற நுட்பமான உள்ளீடுகளை இந்தியாவெங்கும் பரப்பிய காவிகள் துவக்க நிலையில் இருந்த சமூக இணைய தளங்களின், அலைபேசி ஊடகங்களின் வாய்ப்பை நன்றாகக் பயன்படுத்திக் கொண்டார்கள்.
ஐந்தாண்டுகளில் கடும் நெருக்கடிகளுக்கும், துன்பங்களுக்கும் ஆளான இந்திய மக்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் பணமதிப்பிழப்பு மற்றும் GST குறித்த பொய்ப் பரப்புரைகள் காவிகளால் உருவாக்கப்பட்டு சுற்றுக்கு விடப்பட்டாலும் மக்கள் அவற்றை நம்பும் நிலையில் இல்லை, தாங்கள் ஏமாற்றப் பட்டதாக அவர்கள் நம்பத் துவங்கி விட்டார்கள். மோடி என்கிற பிம்பம் முதலாளிகளுக்காக உருவாக்கப்பட்ட பொய்யான வளர்ச்சியின் நிழல் என்று விவசாயிகளும், சிறு வணிகர்களும், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களும் கடைசியாக உணர்ந்த போதுதான் இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள். இந்த முறை தொழில் நுட்ப வளர்ச்சியும், இணையப் பயன்பாடும் பரவலாக்கப் பட்ட பின்பான சூழலில் காவிகளின் உணர்ச்சிப் பரப்புரைகளுக்கும், பொய்களுக்கும் எதிரான ஒரு மிகப்பெரிய கூட்டமே சமூக இணைய தளங்களில் தன்னியக்கமாக உருவாக்கியது, காவிகளின் பொய்களை உடைக்கும் உடனுக்குடனான பதில்கள், உண்மை என்ன என்கிற விளக்கங்கள் இந்தியா முழுவதும் பரவலாக உள்ளீடு செய்யப்பட்டது, கிராமப்புற வாக்காளர்களும், புதிய தலைமுறை வாக்காளர்களும் பொய்களுக்கும், உண்மைக்கும் இடையிலான வேறுபாடுகளை அறிந்து கொண்டார்கள்.
மத நல்லிணக்கத்தை விரும்புகிற முதல் நிலை இந்து வாக்காளர்கள் கூட இன்று காவிகளின் இந்துத்துவ அடிப்படை வாதத்தை வெறுக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள், பெரும்பாலான இந்தியர்கள் மிதமான மேட்டிமைத் தன்மை கொண்ட காங்கிரஸ் கட்சியைக் கடந்து ஒரு தீவிர இயக்கத்தைத் தேடும் சூழலில் தான் பாரதீய ஜனதாக கட்சி வேறு வழியற்ற ஒரு மாற்றாக உருவாக்கப்பட்டது. இப்போதும் காங்கிரஸ் கட்சி தன்னை ஒரு இந்துவாக நிரூபிக்க விரும்புகிற, “நான் ஒரு பூணூல் அணியும் காஷ்மீர் பார்ப்பனன்” என்று ராகுல் காந்தியைப் பேச வைக்கிற இடத்தில் தான் நின்று கொண்டிருக்கிறது.
ஆனாலும், பெரிய அளவில் படிக்காத, அரசியல் நுண்ணுணர்வு இல்லாத இந்தியன் அமைதியாக இருக்கிறான், தனக்கு என்ன வேண்டும் என்று உணர்ந்தவனாக, சித்தாந்தங்களை, தலைவர்களை நொடியில் தூக்கி அடிக்கும் வல்லமை கொண்டவனாக அடிப்படை அறம் கொண்டவனாக இந்த தேசத்தைப் பாதுகாக்கிறான். இந்தியா எப்போதும் அவனது கரங்களில் தான் தன்னுடைய நம்பிக்கையை ஒப்படைக்கிறது.
********
மறுமொழியொன்றை இடுங்கள்