கை.அறிவழகன் எழுதியவை | திசெம்பர் 31, 2009

புத்தாண்டு 2010.

a_ken_watanabe_sunset_in_memories_of_tomorrow___yoshikazu_kato-roar

காலம் தனது சக்கரங்களைச் சுழற்றியபடி ஓடிக்கொண்டே இருக்கிறது, வரலாறு சில மனிதர்களின்  சுவடுகளைத் தனது காலப் பெட்டகத்தில் இருத்திக் கொண்டு எச்சங்களை அழித்தபடி பயணிக்கும் பயணம் அழிவில்லாது நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது, இந்தப் பயணத்தில் 2009 ஆம் ஆண்டு விடை பெறுகிறது, வாழ்வின் முப்பத்து நான்கு ஆண்டுகளைக் கடந்து இந்தப் பயணத்தின் ஒரு அங்கமாக நானும் பயணித்திருக்கிறேன், 2008 நம்மைக் கடந்த போது நம்பிக்கையின் வேர்களைப் பற்றியபடி எம் தமிழ் மக்களின் ஈழ விடுதலை நெஞ்சில் நிறைந்து இருந்தது, புதிய நம்பிக்கைகளுடனும், ஒளி நிரம்பிய இதயத்துடனும் 2009 ஆம் ஆண்டை நாம் வரவேற்றோம், ஆனால் அது ஒரு துயரம் நிரம்பிய புழுதியாய், வலிகளை நிரப்பிய வன்முறையாய் எம் மக்களின் வாழ்வைச் சிதைத்தது. சொந்த வாழ்வின் மகிழ்வை எல்லாம் கடந்து வெறும் கவலைகள் மண்டிக் கிடந்த 2009 என் வாழ்க்கையின் துயரம் மிகுந்த ஒரு ஆண்டு, ஏனென்றால், தாயைத் தந்தையை இழந்த எம் குழந்தைகளின் மரணத்தை நாங்கள் எம் அழுக்கடைந்த கண்களால் பார்த்த வண்ணம் இருந்தோம், உறவுகளை இழந்து அனாதையாக்கப்பட்ட எம் சகோதரிகளின் கண்ணீர் எமது மண்ணில் முற்றுகை இட்டு வற்றிப் போயிருந்தது, எம் தாய்மாரின் காயங்களுக்கு மருந்திட முடியாமல் எங்கள் கைகள் இந்திய தேசம் என்னும் கயிற்றால் இருக்கக் கட்டப்பட்டிருந்தன, அழுகுரலின் மிச்சங்களை எங்களுக்கான இசையாக எல்லா ஊடகங்களும் இசைத்து மகிழ்ந்தபடி இருந்தன, சாவின் கரங்களில் நாங்கள் இளைப்பாறிக் கொண்டே எங்கள் விடுதலைக் கனவை மட்டும் அடை காக்கப் பழகி இருந்தோம்.
dont-forget

ஒரு இனத்தின் சாபங்கள் அடைந்து நிரம்பிய தீவாக உலக வரைபடத்தில் இலங்கை தனது இருப்பிடத்தை தக்க வைத்துக் கொண்டதாக அதன் ஆட்சியாளர்கள் வேண்டுமானால் பெருமிதம் அடையலாம், ஆனால், குருதியின் கறைகள் படிந்த அதன் எல்லைக் கோடுகள் மனித மனங்களில் இருந்து அகற்றப்பட்டு இருந்ததை அவர்கள் கவனிக்க மறந்து போயிருந்தார்கள், வாழ்க்கையின் உரிமைகளைத் தேடி அலைந்த தங்கள் மனித சகோதரர்களை அவர்கள் கொடும் ஆயுதங்களால் அழித்துக் கொண்டாடி மகிழ்ந்தார்கள், இருப்பினும் அவர்களில் மனிதர்கள் இருந்தார்கள், அவற்றில் சிலர் நமக்காக எழுதினார்கள், நமக்காக உயிர் இழக்கவும் உறுதியாய் நின்று மனித நேயத்தின் முகவரியை அழுத்தமாகப் பதிவு செய்தார்கள், அவற்றில் சிலர் நாங்கள் மருந்திட முடியாத காயங்களைக் கழுவிக் கொண்டிருந்தார்கள், இனங்களை மறந்து பிணங்களைச் சுமந்து புதைந்திருந்தார்கள், காலம் அவர்களின் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளவில்லை, ஏனென்றால் காலத்தின் எல்லைகளுக்குள் அடங்காத பேராற்றலாய் அவர்கள் இருந்தார்கள். அவர்களை நாம் நன்றியோடு நினைவு கூருகிறோம். மரணத்தின் பின்னரும் மரியாதையோடு எம் இனத்தின் பிணங்களை அடக்கம் செய்த அவர்கள் மாவீரர்கள், ஏனென்றால் உயிரின் பெருமையை, உயிரின் வலியை  அவர்கள் அறிந்திருந்தார்கள், பெயர் தெரியாத நாடுகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை அமைப்புகள் இன்னும் தன்னார்வலர்கள், தனி மனிதர்கள் என்று குருதி வெறி பிடித்த ஒரு கூட்டத்தின் இடையே குருதியைத் துடைக்கும் அளப்பரிய பணியை அவர்கள் ஓசையின்றிச் செய்து கொண்டே இருந்தார்கள்.Mostar%20-%20Dont%20forget%20-%20Alan%20Grant

  நாமும் எம்மால் இயன்ற பணியைச் செய்து கொண்டே இருந்தோம், போராடினோம், ஊடகங்களின் வழியாகக் கத்திக் கொண்டே இருந்தோம், அரசியல் நெருக்கடிகளைக் கொண்டு வர வேண்டும் என்று ஆளாய்ப் பறந்தோம், சாலைகளை மறித்தோம், அடிபட்டு சிறை சென்றோம், தொடர்ந்து இளைஞர்களை எம் மக்களின் விடுதலைக்காய் உசுப்பியபடி உலகை உலுக்கினோம், இருப்பினும் வல்லாதிக்கத்தின் கொடுங்கரங்களால் இறுக்கமாகக் கட்டப்பட்டிருந்த எங்கள் கைகள் உண்மையில் எம்மக்களுக்காக ஒன்றையும்  செய்ய  முடியாமல் துவண்டு போய் சுயநல அரசியல்வாதிகளின் கழுத்தில் மாலையிட்டுக் கொண்டிருந்தன, நாங்கள் எம்மக்களின் இந்த வேதனையில் பங்கு கொண்டிருந்தோம், ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் ஆளற்ற ஈழப்பரப்பில் இறந்து கிடந்த போது எங்கள் வீட்டு முற்றங்களில்  நாங்கள் அந்தப் பிணங்களை எங்கள் கண்ணீரால் குளிப்பாட்டிக் கொண்டிருந்தோம்.

memories

2010 ஆம் ஆண்டை வரவேற்பதை விடவும், உளவியல் வழியில் மிகுந்த உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக்கிய 2009 எம்மைக் கடந்து போகிறது என்பது ஒன்று தான் எம் மகிழ்ச்சிக்குரிய ஒரே நினைவு. இந்த வலி மிகுந்த தருணத்தில் கொண்டாட்டங்களில் திளைத்திருக்க உண்மையான தமிழன் ஒருவனுக்கும் மனமிருக்காது, அல்லது கொண்டாடித் திளைத்திருப்பவன் உண்மையான தமிழனாய் இருக்க இயலாது, வழமையான தங்கள் வாழ்க்கையை மறந்து ஒரு இனத்தின் விடுதலைக்காய் உயிர் துறந்த ஒவ்வொரு வீரனுக்கும் எம் நன்றியைச் செலுத்துகிறோம், வழமையான தங்கள் இன்பங்களை, இளைய வயதின் ஏக்கங்களை விடுத்து இனம், மொழி என்று தொடர்ந்து போராடிக் கொண்டே இருந்த எம் இனத்தின் இளையோரை நாம் நன்றியுடன் நினைவு கூறுகிறோம், தன் ஒரு பிள்ளையை இழந்தாலும், இன்னொரு பிள்ளையை போருக்கு அனுப்பித் தங்கள் இனமான இருப்பை இறுக்கப் பற்றியிருந்த எம் தாய்மாரை வணங்குகிறோம்.

Prabhagood

இவை அனைத்திற்கும் மேலாக வரலாற்றுப் பெருமை இழந்து, மொழியின் பேராற்றல் அறியாது திரை அரங்குகளின் வாயில்களில் உறங்கிக் கிடந்த எம் இனத்தின் இளைய தலைமுறை ஒன்றைத் தனி மனிதனாய், சமூகமாய், விடுதலை வேட்கையாய், வரலாறாய் நிறைந்து வழி நடத்தி, உலக அரங்கின் அரசியல் களங்களில் உள்ளீடு செய்த எம் இனத்தின் தலைமைப் போராளி மேதகு தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன்” அவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்து, அவர் காட்டிய பாதையில் இப்பேரினத்தின் விடுதலையை நகர்த்துவோம் என்ற உறுதியோடு உங்கள் அனைவருக்கும் வரும் புத்தாண்டு நல வாழ்வையும், இனமானத்தையும் ஊட்டி வளர்க்கட்டும்.

00038

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2010.


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்