கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 21, 2010

ஒரு கதையைப் புதைக்கிறேன் நான்.

4898277676_b001f337e1_b

அது ஒரு கனவு போலவே இருக்கிறது, ஒரு தார்ச் சாலையில் இருந்து பிரிகிற கிளைச் சாலை, பழுப்பு நிறத்தில் படிந்திருக்கும் மண் மீது வளைந்த கோடுகளைப் போலவே வரவேற்கிறது, இரு மருங்கிலும் பூத்துக் கிடக்கும் புளியமரங்கள், இடையிடையே சில புங்கை மரங்களும் அவற்றின் செந்நிற மலர்களும் குவியலாய்க் கொட்டிக்கிடக்கும், சுட்டெரிக்கும் வெய்யிலின் வட்ட வடிவங்கள் அந்த மலர்களின் மீது பட்டுத் தெறிக்கும். சில மலைக் குன்றுகளைக் கடந்து மேலேறுகையில் பாதையின் இரண்டு பக்கங்களிலும் சில்லென்று காற்று கொட்டிக் கிடக்கும் பச்சை நிறத்தில் நீர் நிரம்பிய ஒரு கண்மாய். அதன் கரைகளைச் சுற்றிலும் சதுர வயல்கள், சில பச்சை நிறத்தில் அலையலையாய்த் தலை அசைக்கும், சில பழுப்பு நிறத்தில் படுத்திருக்கும். படிக்கட்டுப் போலத் தாழ்ந்திருக்கும் சில பாறைகளில் இறங்கி நடக்கும் போது இடைப்படும் ஒரு மிகப்பெரிய புளியமரம், அது மண் பாதைப் பயணத்தின் நடுவே ஓய்வெடுக்கும் நந்தவனம் போலத் தன் கிளைகளை விரித்தபடி நிழலைப் பரப்பி இருக்கும், வெள்ளையும், கறுப்புமாய் எப்போதும் அமர்ந்திருக்கும் சில பறவைகள், மறக்காமல் அங்கே சில நேரம் நின்று விட்டுச் செல்வது எங்கள் வழக்கம். அந்த மரத்தின் அருகே முழு உலகமும் தெரியும் எனக்கு, சில மலைக் குன்றுகள், கடல் போலச் சூழ்ந்திருக்கும் கண்மாய், நீல நிற வானம், எப்போதும் பட்டாம்பூச்சிகள், எப்போதாவது ஒரு பாம்பு, நீருக்குள் முழுகி எழுந்து வளையங்களை உருவாக்கும் நீர்க்காக்கைகள், பக்கத்துத் தோட்டத்தில் காய்த்திருக்கும் மாங்காய், கல்லெறியும் சில சிறுவர்கள், எப்போதாவது எனக்கும் கிடைத்த மாங்கொட்டை, அரிதாய்க் கடக்கும் ஊசித் தட்டான் இப்படி நீளும் அந்தப் பயணம்.

  

historical-indian-village_9436

நடக்கும் போது கால்களில் இடரும் கற்களை நான் எப்போதும் கவனித்திருக்கிறேன், அவை வித விதமான வண்ணங்களில் கொட்டிக் கிடக்கும், சில வெண்ணிறத்தில் பளபளக்கும், சில பளிங்கு போல மினுமினுக்கும், துளைகள் நிரம்பிய கருங்கற்கள் சிலவும், மண்ணுக்குள் பொதிந்திருக்கும், சில கற்களைச் சேமித்துக் கொண்டதும் உண்டு, ஏனெனில் அவை அத்தனை அழகான கற்கள், புளிய மரத்தைக் கடந்து பின் ஒரு ஏற்றத்தில் மண்டிக் கிடக்கும் சப்பாத்திக் கள்ளி, அது ஒரு கள்ளி வகைத் தாவரம், முட்கள் நிரம்பிய உயரமாய் வளரும் அவற்றின் தண்டுகள் சப்பாத்தியை நினைவு படுத்துவதால் அந்தப் பெயர், அந்தக் கள்ளியின் பழங்கள் அத்தனை சுவையானவை. எப்போதாவது அவற்றைப் பறித்துக் கொடுக்கும் அப்பா, முட்களை நீக்கி அவற்றின் உள்ளே இருக்கும் சதைப் பகுதியை எனக்கு ஊட்டியது சிவப்பாய் நாக்கில் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறது பாருங்கள், பாதையின் இரண்டு புறமும் இப்போது வேலி வந்து விடுகிறது, அவை பிஞ்சைக் காடுகள் என்று சொல்லப்படும் புன்செய் நிலத் தோட்டங்கள், அவற்றின் உள்ளே பருத்தியும், கம்பும், கேழ்வரகும், தட்டைப்பயிரும், கடலையும் கொட்டிக் கிடக்கும், வேலிகளின் மீது படர்ந்து கிடக்கும் குன்றிமணி விதைகள், குன்றிமணிக் காய் என்பது சிவப்பும், கருப்பும் 70:30 விகிதத்தில் கலந்து கிடக்கும் சிறு உருண்டை, அவை மிக நேர்த்தியாக செய்யப்பட்டவை போலவே இருக்கும், குன்றிமணிகளைப் பைகளில் நிரப்பியபடி இடையில் கிடைக்கும் சூரங்காய், சூரங்காய் என்பது ஒரு வகைக் கொடியில் காய்க்கும் காய் அது பச்சை நிறத்திலும், அதன் பழம் கருப்பு நிறத்திலுமாய்க் காணக் கிடைக்கும், அதன் சுவை இனிப்பும் புளிப்பும் கலந்த ஒரு அற்புதமான கலவை.

 

 

beautiful_village-wide

இந்த வேலிகளைக் கடக்கும் போது சரியாய் வந்து விடும் மேட்டுப்பட்டி ஊருணி, மனிதர்களின் வசிப்பிடம் அருகில் இல்லாத காரணமோ என்னவோ இந்த ஊருணியின் சுவை அலாதியானது. சுற்றி இருக்கும் மூன்று நான்கு ஊர்களின் மக்களும் இங்கு தான் குடிக்கவும், சமைக்கவும் நீர் எடுத்துச் செல்வார்கள், தலையில் ஒன்றும், இடுப்பில் ஒன்றுமாய்க் குடங்களைச் சுமந்து செல்லும் பெண்கள், ஊருணிக் கரைகளில் நின்று பேசும் அவர்களின் ஊர் வம்புகள் இன்னும் அங்கு தான் உலவிக் கொண்டிருக்கும். நலம் விசாரிப்பு இங்கிருந்தே துவங்கி விடும்., “ஐயா, ராசா, வந்துட்டீகளா” என்று துவங்கி “ஊருக்குச் சரியாய் வருவதில்லை” என்று அப்பாவுக்குக் கிடைக்கும் வசைகள் வரை அவற்றில் அன்பு நிறைந்திருக்கும், அப்போது நான் ஒன்றைக் கவனிக்க எப்போதும் தவறுவதே இல்லை, அது எங்கள் ஊரில் முதிய பெண்கள் அணியும் ஒரு வகை அணிகலன், “தொங்கட்டான்” என்று சொல்லப்படும் அவை அளவில் மிகப்பெரியவை, நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் காதுகளில் அவை விழுந்து விடுவது போலத் தொங்கிக் கொண்டிருக்கும். அவர்கள் பேசும்போதும், என்னைக் கொஞ்சும் போதும் நான் அவற்றை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன்.அவை ஆடியபடி காற்றோடு பேசிக் கொண்டிருக்கும். கன்னத்தில் இரு கைகளாலும் வருடிப் பின் கைகளை நெற்றியில் முறித்துச் சொடுக்கெடுத்துப் பின் முத்தமிடுவது அவர்களின் நடைமுறை. அது நமது தமிழ்ச் சமூகத்தின் கிராமங்களில் இன்னும் விளைகிற அன்பின் அடையாளம், முத்தங்களை ஏற்றுக் கொண்ட பிறகு நடக்கத் தேவை இல்லை, யாரேனும் ஒருவர் தன மடியில் என்னை இருத்திக் கொள்வார்கள், கொஞ்சம் உயரமாக ஊரைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

 

 

Indian_Village_2

ஊருக்குத் திரும்பும் பாதை மூன்றாய்ப் பிரியும், அங்கு ஒரு பெட்டிக் கடையும், சில பெரியவர்களும் எப்போதும் நின்று கொண்டிருப்பார்கள், அனேகமாக அங்கிருந்து விடைபெறக் குறைந்தது ஐந்து நிமிடங்கள் பிடிக்கும், சூட மிட்டாய், ஜவ்வு மிட்டாய், பொரிவிளங்காய், கலர் என்று நாளுக்கு ஏற்றவாறும், ஆளுக்கு ஏற்றவாறும் ஏதாவது ஒன்று கிடைக்கும். பரப்பி வைக்கப்பட்டிருக்கும் வைக்கோல், பாதையை எப்போதும் நிரப்பி இருக்கும், வைக்கோலின் மீது ஓடுவதும், நடப்பதும் சுகமான அனுபவம், சில நேரங்களில் அப்படியே பெற்றோரை விட்டு விட்டு கொஞ்சம் முன்னகர்ந்து சில குட்டிக் காரணங்கள் அடிப்பதும் உண்டு. வைக்கோல் அரிப்பை உண்டாக்கும் என்பது தெரிந்தும் தேவைப்படுகிற குட்டிக்கரணம் அது. அனேகமாக ஊர் வந்து விட்டது. வாசலில் நிற்கும் உறவுகளை எதிர் கொள்வது என்பதே ஒரு அளப்பரிய அனுபவம், அப்பத்தாவும், ஐயாவும் எங்களை ஆரத்தழுவிக் கொஞ்சி மகிழ களைப்புத் தீர்ந்து விடும், எப்படி வந்தீர்கள், எப்போது கிளம்பினீர்கள், என்கிற பயணக் கேள்விகளை எல்லாம் முடித்து நிலைப்பதற்குள் தலை சுற்றி விடும் அளவுக்கு அம்மாவும் அப்பாவும் களைத்திருப்பார்கள்.அடுப்படியைச் சுற்றி இருக்கும் திண்ணை தான் இனிக் கொஞ்ச நேரத்திற்கு இருக்கை, அது உறவுகளின் அன்பும், பாசமும் கலந்து பிசையப்பட்ட மண்ணால் செய்யப்பட்டிருந்தது, மனிதர்களை இணைக்கும் பாலம் அது, பெரிய தாத்தா, ஆற்காட்டு அப்பத்தா, சிதம்பரம் பெரியப்பா, சின்ன வயது அண்ணன்கள், சப்பாத்துக்காரர், ஐயாவின் பயண அனுபவங்கள், பெரியார் குறித்த கதைகள், சீனர்களின் முரட்டுத் தனம், காரல் மார்க்ஸ் பற்றிய ஒரு கிழிந்த புத்தகம் என்று பலவற்றை நான் தெரிந்து கொண்டது இந்த மண் திண்ணையின் மேலமர்ந்து தான். அதன் மேல் அமர்ந்திருக்கும் போது உலகத்தின் உயர் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பது போன்ற ஒரு உணர்வு இருந்ததை மறக்க இயலாது.

 

 

Indian-Village

“சூரா” வைப் பற்றி உங்களுக்குச் சொல்ல வேண்டுமே, “சூரா” எங்கள் குடும்பத்தின் நாய், ஆயினும் அதை நாய் என்று அழைப்பவர்கள் குறைவு, “சூரா” எங்கள் வருகை தெரிந்தவுடன் திண்ணைக்கு வந்து விடும், என்னோடு முட்டி மோதி விளையாடுவது ஐயாவுக்குப் பிடிக்காது, ஆனால் எனக்குப் பிடிக்கும் என்பதால் ஐயா ஒன்றும் சொல்வதில்லை, சூராவை மீறி அந்தப் பகுதியில் புதியவர்கள் யாரும் வர முடியாது என்பதை நானே பல முறை பார்த்திருக்கிறேன், ஆனால், நாய்கள், உறவினர்களை அவர்களின் செய்கையை வைத்து மனிதர்களை அடையாளம் கண்டு கொள்கின்றன, வருடத்திற்கு ஒரு முறை வந்தாலும் எங்களில் யாரையும் சூரா ஒரு நாளும் தொல்லை செய்தது இல்லை, வால் ஒடுங்கி முழுதும் சரணடைந்த ஒரு மனிதனைப் போலவே அது பக்கத்தில் நின்றிருக்கும், இரவில் வெளியேறி நடந்தால் கூடவே நடக்கும் “சூரா”. திரும்ப வீட்டுக்குள் நுழைவது வரையில் வாசலில் சூராவைப் பார்க்க முடியும், யாரும் இல்லாத நேரங்களில் சூராவுக்கு முத்தம் கொடுப்பது எனக்குப் பிடித்த ஒன்று என்பதை சூராவும் அறிந்திருக்க வேண்டும், அது திருப்பித் தரும் முத்தங்களில் அப்படி உணர்ந்திருக்கிறேன் நான். நாய்கள் நமது சமூகத்தில் எப்போது கலந்தன என்று எனக்குத் தெரியாது, ஆயினும் நமது சமூகத்தில் நாய்களின் பங்கு மிக அதிகம், உறங்குகிற குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிற நாய்களையும், இரவில் குவிக்கப்பட்டிருக்கும் கதிருக்குப் பாதுகாப்பாய்க் கிடக்கும் நாய்களையும் நான் பார்த்திருக்கிறேன். பெயர் இல்லாத நாய்களை அங்கு நான் அறிந்திருக்கவில்லை.

 

 

அன்றைய இரவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளின் மீது ஏறி விளையாடுவதிலும், அப்பத்தாவிடம் இருந்து கதைகள் கேட்பதிலும் கழியும், அப்பத்தா தன் பக்கத்தில் வைத்திருக்கும் பனை ஓலை விசிறியின் காற்று இன்று வரை பல நாடுகளின் குளிரூட்டப்பட்ட அறைகளில் தேடியும் எனக்குக் கிடைக்கவில்லை. அப்பத்தாவின் இரவுக் கதைகள் மிகுந்த அழகு நிறைந்தவை, குறிப்பாக “ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி” என்கிற கதை முடிவுகள் இல்லாமலேயே பல நாட்கள் நீண்டு கிடந்தது. ஏழைக் குடும்பத்தில் பிறந்து தன் சாகசங்களால் ஒரு நாட்டுக்கு அரசனாகும் ஒரு மனிதனின் கதை அது, அரசனான பின் அவனுக்கு நிகழும் தடைகள் அவனது உறவுகளைச் சிறை பிடிக்கவும், அவர்களைச் சிறை மீட்க அவன் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி கூண்டுக் கிளியின் உடலில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் வைரக் கல்லைத் தேடித் பயணிக்கிற ஒரு சாகசக் கதை அது. இடையிடையே குறுக்கிடும் அனைவரும் கேட்கும் கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லியபடியே அவன் தன குதிரையில் பயணிக்கிறான், பாதாளக் குகை, ஆகாய மாளிகை என்று ஹாரி பாட்டருக்குச் சவால் விடும் அந்தக் கதையை கேட்பதற்காகவே நான் பிறந்து இருப்பது போல இருக்கும் அப்போதைய இரவுகள். கதை முடிவதற்கு முன் நிச்சயம் நான் உறங்கி இருப்பேன். உறங்கிய பின்னரும் கனவுகளில் அந்தச் சாகசங்கள், விவரிப்புகள் தனது கிளைகளைப் பரப்பியபடி கிடக்கும்.

 

 

AR5MNRLgiq5JlXsYkx

காலைப் பொழுதுகள் ஒரு கிராமத்தில் இருந்து தான் பிறந்து வருகின்றன, செம்பழுப்பு நிறத்தில் வானமும், நார்த்தை மரத்துக் குருவிகளும் துயில் எழுப்ப நாம் புதிதாய்ப் பிறந்திருப்போம், மலையடிக் குளியல் ஒரு தொலைதூரத்தில் நிகழ்ந்தாலும், ஐயாவின் கரம் பற்றிப் பிஞ்சைக் காடுகளின் வழியே அதன் பயணம் கால காலத்திற்கும் நிலைத்திருக்கும், வழியில் தட்டுப்படும் வெள்ளை நிற முயல்கள் ஏறத்தாழ இப்போது அழிந்திருக்கும் என்று நினைக்கிறேன், ஓரிதழ்த் தாமரையின் மருத்துவக் குணங்கள், வேலிகளில் படர்ந்திருக்கும் “ப்ளோரா மார்னிங்” பூக்கள் என்று அறிமுகம் செய்து கொண்டே வேப்பங்குச்சியோடு பல்துலக்கிக் கொண்டு வரும் ஐயாவைப் பின்தொடர்ந்து மலையடிக்குப் பயணப்படுவது வாழ்க்கையின் மிக அரிய பயணம். மலையடி என்பது வெட்டப்பட்ட பாறைகளின் பள்ளத்தின் தேங்கிக் கிடக்கும் மழை நீர், “மானசரோவர்” ஏரியைப் போன்ற தூய்மையும், குளிர்ச்சியும் நிரம்பிய அந்தப் பள்ளங்களில் குளிப்பது ஒரு புத்தம் புதிய அனுபவம், கைகளை நீட்டிப் படுக்க வைத்து எங்களை நீந்தப் பழக்கிய அந்தக் காலைகள் இன்னொருமுறை கிடைக்கப் போவதே இல்லை.வீட்டுக்குத் திரும்பியவுடன் வேப்பமரத்து மேடையில் அமர்ந்து குவித்துப் பரப்பப்பட்ட நெற்கதிர்களின் மீது சுற்றி வரும் மாடுகளை வேடிக்கை பார்ப்பது கிடைக்க இயலாத காட்சி ஆகிவிட்டதை எப்படி நான் நம்புவது. மாடுகள் அறுவடை செய்யப்பட நெற்கதிர்களின் மீது சுற்றி வரும் போது நெல்மணிகள் உதிர்ந்து பிரிக்கப்படும், அது போரடித்தல் என்று அழைக்கப்படும். ஆசையில் ஒருநாள் மாடுகளை ஓட்ட ஐயாவிடம் அனுமதி வாங்கி இணைக்கப்பட்ட கயிறுகளைக் கையில் பிடித்தபடி நடக்கையில் வலது கோடிக் காளை ஒன்று நெஞ்சில் விட்ட உதையும், அதன் வலியும் இன்னும் கொஞ்சம் மீதமிருக்கிறது, இழந்து போன அந்தக் கிராமத்தின் வாழ்க்கையைப் போலவே.

 

 

நீண்ட நாளுக்குப் பிறகு ஊருக்கு வருகிறேன் நான், அதே தார்ச் சாலை இன்னும் கொஞ்சம் தடிப்பாய் மாறி இருக்கிறது, கிளைச் சாலையில் இப்போது மண் இல்லை, மரங்களும் இல்லை, உயர்ந்து நிற்கும் கோவில் கோபுரங்களை மறைத்தபடி சாலையோரங்களில் மண்டிக் கிடக்கும் கடைகள், கூச்சலிடும் மனிதர்கள் என்று மாறிப் போயிருக்கிறது ஊர். வயல்கள் அப்படியே இருந்தாலும் அதில் பசுமை மருந்துக்கும் இல்லை, கண்மாயின் நடுவில் வற்றிக் கிடக்கும் சேறு, புளியமரத்தின் சுவடுகளே இல்லாமல் பொட்டல் காடாய் இருக்க அருகே பறவைகளுக்குப் பதிலாக வெறுமை கிளை பரப்பி இருக்கிறது. குன்றிமணிகளும், சூரங்காயும் அழிந்து அங்கே சில கருவை மரங்கள் வளர்ந்து கிடக்கிறது. ஊருணிக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மருத்துவமனை, இரண்டொரு உணவகங்கள். இங்கே தானே தொங்கட்டான் அணிந்த எமது மக்கள் என்னை வரவேற்று நிறைந்து வழிந்திருந்தார்கள், எப்படித் தொலைத்தோம் அவர்களை? எங்கே போனார்கள் அவர்கள்?

wai_village_menavali_ghat_temple_09

பண்பாட்டையும், நாகரீகத்தையும் வளர்த்தெடுத்த நமது கிராமங்களை, அதன் சுற்றுச் சூழலை நாம் இழந்து விட்டோம், அதில் ஊறிக் கிடந்த அன்பையும், உறவுகளையும் நாம் எதற்காகவோ இழந்து விட்டோம், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தக் கிராமத்தின் பொருட்களை நான் என் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய முடியாது. நம் இயந்திரத்தனமான வாழ்க்கையின் கீழே அவர்கள் நசுங்கிக் கொண்டிருக்கிறார்கள், நகரக் குப்பைகளில் அவர்கள் பள்ளிக்குச் செல்லும் மூட்டைகளைச் சுமந்து திரிகிறார்கள், எனது பொருள் தேடும் வாழ்க்கையின் பரிசாக எனது குழந்தை தனது வாழ்க்கையை அல்லவா இழந்திருக்கிறது. என் குழந்தையைச் சுற்றிலும் ஒரு போலியான நுகர்வு உலகம் மண்டிக் கிடக்கிறது, தங்கள் வருமானத்துக்குத் தேவையான பொருட்களைத் தொலைக்காட்சியும், விளம்பரங்களும் அவர்களுக்கு அறிமுகம் செய்கின்றன. இதயத்தில் இருந்து வரும் சிரிப்பை, அன்பை வீட்டுக்கு வெளியே யாரும் அவர்களுக்கு இப்போது வழங்குவதாய் இல்லை. இது எப்படி நிகழ்ந்தது, என் கண் முன்னே என் கிராமம் அழிந்து விட்டது, அதன் பொருட்கள் காணாமல் போய் விட்டன, நகரம் மெல்ல மெல்ல ஒவ்வொரு கிராமங்களுக்கும் அருகில் வந்து கொண்டிருக்கிறது, நகரத்தின் சாயல் படாத கிராமங்களை அரசுகளே அழித்து வருகின்றன. கதை சொன்ன அப்பத்தாக்களை எல்லாம் தொலைக்காட்சித் தொடர்கள் விழுங்கி ஏப்பம் விட்டு “எஎஈஎந்திரன்” என்று கூச்சலிடுகின்றன.

buried04

இருப்பினும் நான் தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஊருக்குத் திரும்பி விடுகிறேன், இப்போது மண்ணால் செய்யப்பட திண்ணைகள் அங்கு இல்லை, அது இருந்த இடமும், நினைவுகளும், வாழ்க்கையை எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும், அப்படி ஒரு வாழ்க்கை என் குழந்தைக்கு வாய்க்க வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். அந்தக் கனவு ஒரு கனவாகவே ஆகிவிடும் போலிருக்கிறது……

******************

 

 

 

 

 

 

 

 


மறுவினைகள்

  1. //*அப்படி ஒரு வாழ்க்கை என் குழந்தைக்கு வாய்க்க வேண்டும் என்று நான் கனவு காண்கிறேன். அந்தக் கனவு ஒரு கனவாகவே ஆகிவிடும் போலிருக்கிறது*/.

    U r correct 😦

  2. நன்றி சரவண வடிவேல்.


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்