கை.அறிவழகன் எழுதியவை | நவம்பர் 22, 2010

பரணில் கிடைத்த காலம். (சிறுகதை)

old_memories

மூன்று நாட்கள் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தோம், கார்த்திகைத் திருநாளுக்கு என்று கிடைத்த விடுமுறையில் குடும்ப சகிதமாக ஊருக்கு வந்ததில், கிராமத்து வீட்டுப் பரணில் ஏறும் ஒரு அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, கார்த்திகை விளக்கு எல்லாம் மேலே இருக்கும் பெட்டியில் இருக்கிறது என்று அம்மா மனைவியிடம் சொல்லி இருக்க வேண்டும், "என்னங்க, கொஞ்சம் பரண் மேலே ஏறி வெண்கல விளக்கை எல்லாம் எடுத்துக் கொடுங்களேன்" என்று பாதி கட்டளையாகவும், மீதிக் கெஞ்சலாகவும் கேட்டாள் மனைவி, அநேகமாக நான் பரணில் ஏறி பதினைந்து ஆண்டுகள் இருக்கும், என்னுடைய இருபத்தைந்து வயதுக்குப் பின்னர் பரணில் ஏறிப் பொருட்களை எடுக்கும் தகுதி தம்பிக்குக் கிடைத்து விட்டது, அவன் ஏறுவதைப் பார்த்துக் கொண்டிருந்ததோடு சரி,  கல்லூரிக் காலம் வரையில் எனக்குப் பரணில் அடிக்கடி ஏறிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது, விழாக் காலங்களில் ஒட்டடை அடிக்கவும், கூடுதல் விருந்தினர்கள் வரும்போது பாத்திரங்களை எடுக்கவும் என்று பரணில் காலடி எடுத்து வைத்து மேலே கட்டப்பட்டிருக்கும் பனைமரச் சட்டங்களைப் பிடித்துக் கொண்டு அடைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்கிடையில் அங்கும் இங்குமாய்த் தாவி தேவையான பொருளின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்கிறது,

old-memories-never-die-holly-kempe

அம்மாவின் பெயர் எழுதப்பட்டிருக்கும் ஒரு பச்சை நிறத் தகரப் பெட்டியைத் திறந்து அதற்குள் வைக்கப்பட்டிருக்கும் உலோகக் குவளைகளை எடுத்துத் தனியாக வைத்து அவர்கள் கையில் கொடுக்கும் போது அம்மாவின் கண்கள் மினுமினுக்கும், அம்மாவின் தந்தையாரும் எங்கள் தாத்தாவுமாகிய காளிமுத்து ஐயா தனது கைப்பட அம்மாவின் திருமணத்திற்கு வாங்கிக் கொடுத்தது என்று பரணில் இருந்து நான் இறங்கியவுடன் தவறாமல் அம்மா சொல்வார், தன்னிடம் இருக்கும் தடித்த வடம் மாதிரியான தங்கச் சங்கிலியை விடவும் இந்த தகரப் பெட்டியை அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும், அந்தப் பெட்டி எப்போதும் காலியாகாமல் இருக்கும்படி அம்மா தனிக் கவனம் செலுத்துவார்.

இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாகி, உடலில் ஊளைச் சதை பெருகி, வயதை நானாகவே ஏற்றிக் கொண்டபோதிலும், பரணில் இன்று எப்படியும் ஏறி விடுவது என்று முடிவு செய்து மகன் முருகனை நாற்காலியை எடுத்து வரச் சொல்லி அதன் மீது ஏறி நின்ற போது கீழே இருந்து முருகன் "அப்பா, நானும் மேலே ஏறிப் பார்க்கிறேன்" என்றான். அவனுடைய குரல் அப்போது எரிச்சலை அளித்தாலும் மனதில் படக்கென்று அவனுக்கு இந்தப் பரணைக் காட்ட வேண்டும் என்று ஏனோ தோன்றியது. "நீ எப்படி ஏறுவடா" என்று குனிந்து கேட்டபோது அவன் பாதி ஏறி விட்டிருந்தான், நீண்ட அறையை இரண்டாகப் பிரித்து அடிக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களில் அவன் காலை வெகு லாவகமாக வைத்து ஏறுவதைப் பார்க்கையில் எனது இளமைக் காலங்கள் நினைவுக்கு வந்து விட்டது, அது எப்படி இவன் என்னை மாதிரியே மேலே ஏறுகிறான், மரபணுக் கூறுகளின் ஒற்றுமை பரண் ஏறுவதிலுமா வரும்? என்று எனக்கு வியப்பாய் இருந்தது. இப்போது அவன் மேலே இருந்து சொன்னான், "அப்பா, இந்தக் கட்டையைப் பிடித்துக் கொள்ளுங்கள்".

3005608862_67f4356f5c

ஒரு வழியாய் கட்டைகளையும், தடுப்புகளையும் பிடித்து மூச்சிரைக்க மேலே ஏறி பரணில் காலடி வைக்கையில் ஒரு கலவையான மணம் பரவியது, அது பழைய குப்பைகள், துணிகள், உலோகங்கள், எலிப் புழுக்கைகள், பனை மரச் சட்டங்களில் இருந்து கொட்டிக் கிடக்கும் உளுத்த பொடி இவற்றின் கூட்டு மணம். பெரும்பாலான கிராமத்து வீடுகளின் பரணில் குறைந்தது மூன்று தலைமுறை வரலாறு கொட்டிக் கிடக்கிறது, ஒரு வேளை வரலாற்று வாசனையாகவும் அது இருக்கலாம் என்று தோன்றியது எனக்கு, முருகன் அதற்குள்ளாக பரணின் மையப் பகுதியில் சரித்து வைக்கப்பட்டிருந்த மிகப் பெரிய அண்டாவில் அமர்ந்திருந்தான், "டேய், கவனம்டா, அதுல ஏதாவது பூச்சி ஒட்டை இருக்கும்" என்று கொஞ்சம் குரலை உயர்த்தினேன், "நல்லாப் பாத்துட்டேன்பா, எதுவும் இல்லை" என்று பதிலுக்குக் கத்தினான் முருகன். ஏறும் போதே தயாராக அவன் என்னுடைய அலைபேசியை எடுத்துக் கொண்டே மேலே ஏறி இருக்கிறான், அதில் இருக்கும் முன்புற விளக்கைப் பயன்படுத்தி அவன் பொருட்களை ஆய்வு செய்யத் துவங்கி இருந்தான். அந்த வெளிச்சத்தில் அவன் அப்படிச் செய்து கொண்டிருந்தது என்னை இருபது ஆண்டுகள் முன்னோக்கிப் பயணம் செய்ய வைப்பது போலிருந்தது.

"அப்பா, பரண்னா என்ன?" என்று துவங்கினான் முருகன், எப்போதும் அவனுடைய கேள்விகளில் எரிச்சலடையும் என்னை பரணும் அதன் கூட்டு மணமும் அன்று அமைதியடைய வைத்திருந்தது போல இருந்தது, நான் மெல்ல உட்கார்ந்தபடியே நகர்ந்து அவனருகில் சென்று அமர்ந்து கொண்டேன், அவனுடைய தலைமுடியைக் கோதி விட்டு அவனுடைய கண்களைப் பார்த்தேன், அது ஏறக்குறைய  என்னுடைய இள வயதுக் கண்களைப் போலவே மின்னியது, முருகனுக்கு என்னுடைய இந்தச் செயல்  வியப்பாய் இருந்திருக்க வேண்டும், "என்னப்பா?" என்று அனிச்சையாய் எனைப் பார்த்துக் கேட்டான், எப்போதும் அலுவலக வேலைகளுக்காய் சிறகு கட்டிக் கொண்டு பறக்கும் ஒரு தந்தையின் அமைதியான, சாவகாசமான வருடல் அவனைக் கொஞ்சம் மருளச் செய்திருக்க வேண்டும்.

hippocampalneuron

கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தேன், "அப்பா, பரண் எதுக்கு இருக்கு?"  மீண்டும் கேட்டான் முருகன். இனி அவனுடைய கேள்விகளில் இருந்து தப்ப முடியாது, "முருகா, பரண் நம்ம தாத்தா பாட்டி காலத்துல நெல்லுக் கொட்டி வைக்கிறதுக்காக கட்டினாங்க" என்றேன்.

"நெல்லுன்னா என்ன?”

என்றான் முருகன். எனக்குப் பகீரென்றது. நெல் என்றால் என்னவென்று நமது குழந்தைகள் அறிந்திருக்கவில்லையா? நமது சமூகத்தின் அடிப்படை உணவுப் பொருளின் பெயரை நமது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்காததும், இப்படியான ஒரு கேள்வியைக்  கேட்க வைத்ததும் யாருடைய குற்றம், காலத்தின் குற்றமா? இல்லை, பயிர்த்தொழிலை மறந்து நகர வாழ்க்கையில் மூழ்கி விட்ட நமது பொருளாதார வாழ்க்கையின் குற்றமா? என்று மனதில் இனம் புரியாத சோகம் இழையோடியது. குற்றவுணர்ச்சி பெருகியது. "இல்ல. முருகா, நாம சாப்பிடுற அரிசி வயலில் இருந்து வரும்போது அதுக்குப் பெயர் நெல்லு, அரிசியை மூடி இருக்கும் உறையோடு அதற்குப் பெயர் நெல்லுடா" என்றேன்.

முப்பதாண்டுகள் முன்னோக்கி முண்டியடித்தது நினைவு, இதே பரண், இதே வீடு, தாத்தா சட்டை அணியாமல் கீழே நின்று கொண்டிருந்தார், அப்பா, வீட்டு முகப்பில் கல்லடுப்பில் வைக்கப்பட்டிருந்த அண்டாவில் நெல்லைக் கிண்டிக் கொண்டிருந்தார், மிகப் பெரிய ஆப்பை ஒன்று அவிக்கும் நெல்லைக் கிண்டுவதற்கு என்றே வீட்டில் இருந்தது. நன்றாக விளைந்து முப்பது நாற்பது கடகம் நெல் ஓலைப்பாயில் குவிக்கப்பட்டிருந்தது, கொஞ்சம் கொஞ்சமாக மிகப் பெரிய அண்டாவில் அவற்றை அவித்துக் காய வைத்துப் பின் அவற்றைச் சாக்கு மூட்டைகளில் கட்டி பரணில் ஏற்றும் படலம் நடந்து கொண்டிருந்தது, அது அனேகமாக பத்துப் பதினைந்து நாட்கள் நடக்கும், பரணில் ஏற்கனவே இருக்கும் பத்துப் பதினைந்து மூட்டைகளில் சிலவற்றை வண்டியில் ஏற்றி அத்தைமாரின் வீட்டுக்கும், சந்தைக்கும் தாத்தா அனுப்புவார், பிறகு புதிய மூட்டைகளைப் பரணில் ஏற்றுவார், அப்பாவும், பெரியப்பாவும் தாத்தாவுக்கு உதவியாய் இருப்பார்கள், கம்பீரமாகக் கட்டளைகள் இட்டபடி நின்று கொண்டிருக்கும் தாத்தாவின் உருவம் கீழே கண்ணிமைகளை மறைத்தபடி தெரிந்தது, தாத்தாவின் காலடிகள், அவரது வியர்வைத் துளிகள், அவரது அந்தக் கம்பீரமான குரல் எல்லாம் பரணுக்குள் அடைந்து கிடப்பது போலத் தோன்றியது.

mukkuruni

“அப்பா, இது என்ன"?” என்று ஏறக்குறையக் கத்தாத குறையாகக் கேட்டான் முருகன், என்னுடைய நினைவுகள் நிகழ் காலத்துக்குள் நுழைந்தன, நான் அவன் இருக்கும் திசையை நோக்கினால் அவன் கைகளில் "பரிக் கூடை" உருண்டு கொண்டிருந்தது, அவன் அப்படியான ஒரு பொருளை இதுவரையில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை, போகோ பொம்மைகள், குத்துச் சண்டை விளையாட்டு வீரர்களின் பட அட்டைகள், கிரிக்கெட் மட்டை, அவனுடைய மிதிவண்டி இவைகளில் இருந்து அது முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது, "முருகா, இது மீன் பிடிக்கிற ஒரு கருவி, ரொம்பக் காலத்துக்கு முன்னால நம்ம வீட்டுக்குப் பின்னால குலைக்கால் என்று ஒரு நீரோடும் வாய்க்கால் இருந்தது, அந்த வாய்க்கால்ல மழைக்காலத்துல கண்மாய் எல்லாம் நிரம்பி ஏத்து மீன் இந்த வாய்க்கால் வழியா வரும், அப்போ பெரிய ஐயாவும், பெரிய அப்பத்தாவும் இந்தக் பரிக் கூடையை வாய்க்கால்ல ஓடுற தண்ணிக்குள்ள எதிர்ப்புறமா விட்டு மீன் பிடிப்பாங்க". என்று சன்னமான குரலில் அவன் காதுகளுக்கு அருகில் சொன்னேன்.

"அப்பா, நாமளும் ஒரு நாள் குலைக்காலில் மீன் பிடிக்கலாமா?" என்று அப்பாவியாகக் கேட்டான் முருகன், " இல்ல முருகா, இப்போ அந்தக் குலைக்காலே இல்ல, அதுல எல்லாம் வீடு  கட்டியாச்சு" என்றேன் நான். எங்களுடைய உரையாடல் இரண்டு சம வயது நண்பர்களுக்கு இடையிலான உரையாடலைப் போல இருந்தது எனக்கு, அவனுக்கும் அப்படியே இருந்திருக்க வேண்டும், அவன் கீழே இறங்கிப் போவதைப் பற்றிய எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் இருந்தான். நானும் அப்படியே அவன் அருகில் அமர்ந்து இருந்தேன், எனது வயதையும், அவனது சிந்தனைகளையும் பின்னோக்கி இழுத்துச் சென்றன அந்தக் கணங்கள்.

Peacock_Feather_2nd_take_10_by_eight

ஒரு தந்தைக்கும், மகனுக்குமான நெருக்கமான உறவை நீண்ட நாள் கழித்து உணர்த்திக் கொண்டிருந்தது பரண். காலம் உறைந்து போன அழுக்குத் துணிகளிலும், தகரப் பெட்டிக்குள்ளும் கிடந்ததை நான் மகனுக்குச் சொல்லியபடி இருந்தேன், கைப்பிடி வைத்துத் தேக்கு மரத்தில் செதுக்கப்பட்ட குழந்தைகளின் நடைவண்டி ஒன்று முருகனின் கண்களில் பட்டது, பரணுக்கு உள்ளேயே அதை ஓட்ட ஆரம்பித்திருந்தான் முருகன், அப்பா, அந்த வண்டியில் தான் நடை பழகினார் என்றும், அதில் தான் உனது குழந்தைகளும் நடை பழக வேண்டும் என்றும் ஒரு முறை அப்பத்தா சொன்னது நினைவுக்கு வந்தது, அப்பத்தாவின் அந்த வார்த்தைகள் சாகாமல் இன்னும் பரணுக்குள் கிடந்திருக்க வேண்டும், முருகனின் கரங்கள் வழியாக அந்த வார்த்தைகள் உயிர் பெற்றதைப் போலவும், அவனுடைய வாழ்நாள் ஆசிர்வதிக்கப்பட்டது போலவும் உணர்ந்தேன் நான்.அந்தக் கணங்கள் இருளிலும் நடை வண்டியின் கைப்பிடியில் பட்டு பொன்னிறத்தில் மினுமினுத்தன.

தாத்தாவின் தலைப்பாகை, தூண்டில், எச்சில் பணிக்கம், மிதிவண்டியின் உடைந்த கைப்பிடி, சில சிதைந்து போன நூல்களின் தாள்கள், அப்பத்தாவின் குழிப்பணியாரச் சட்டி, ஒரு பானை, சில தேத்தான் கொட்டைகள், மரத்தால் செய்யப்பட அஞ்சறைப் பெட்டி, அழுக்கடைந்த ஒரு சங்கு, பெயர் தெரியாத சில மாத்திரை அட்டைகள் என்று தோண்டத் தோண்ட mu முருகனுக்கும், எனக்கும் அதிசயங்கள் கிடைத்தன, ஒவ்வொரு பொருளிலும் நிலை கொண்டிருந்த மனிதனின் வாழ்க்கையும், காலமும் என்னை நிகழ் காலத்தில் இருந்து வெகு தொலைவுக்கு அழைத்துச் செல்வதும், வருவதுமாய் இருந்தன.

TE-Mystic-Outlook_thumb[7]

முருகனின் கையில் இப்போது ஒரு தட்டையான துருப்பிடித்த கருவி  மாதிரி ஏதோ ஒன்று இருந்தது, அரை இருட்டில் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அலைபேசியின் விளக்கை வைத்து அதன் மீது அடித்துப் பார்த்தான் முருகன், பளிச்சென்று என் கண்களில் பட்டது அந்தக் கருவி, அது ஒரு "மௌத் ஆர்கன்" என்று சொல்லப்படும் இசைக்கருவி, ஒரு மழை நாள் இரவில் வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி தாத்தா அந்த இசைக் கருவியை வாசித்துக் கொண்டிருந்தார், கைகளைப் பொத்தியபடி அந்தக் கருவியின் பின்பக்கத்தில் தாத்தாவின் விரல்கள் வெகு நளினமாக அசைந்து கொண்டிருந்தன, அவரது பொறுத்துத் தடித்த உதடுகள் முன்புறமாக காற்றைச் செலுத்தி ஏதோ ஒரு பாடலை இசைத்துக் கொண்டிருந்தன, இதுவரை எனது மூளையின் ஏதோ ஒரு நினைவுச் செல்லில் ஒளிந்து கிடந்த அந்தப் பரவசமான கணங்களை முருகன் மீட்டெடுத்து என்னெதிரில் மீட்டிக் கொண்டிருந்தான், அவனது காலடியில் ஒரு ஓலைப்பாய் சுருட்டிக் கட்டப்பட்டிருந்தது, நாற்பதாண்டுகளுக்கு முன்னரான மழையில் நனைந்து இலைகளின் வழியாக ஓலைப்பாயில் ஒழுகிக் கொண்டிருந்தது காலம். அப்பத்தாவின் அரவணைப்பில் ஓலைப்பாயும், நானும் அப்போது முற்றத்தில் சுருண்டு படுத்திருந்தோம்.

தாத்தா மலேசியா போகும் போது வாங்கி வந்ததாகவும், அவர் இந்தக் கருவியை மிக நன்றாக இசைப்பார் என்றும் அப்பா அம்மாவிடம் சொல்லக் கேட்டிருக்கிறேன், முருகன் கடைசியாக அதன் துளைகளை அடையாளம் வாயில் வைத்து ஊதினான், அதில் இருந்து வந்த ஓசையை அவன் ரசித்திருக்க வேண்டும், மீண்டும் மீண்டும் ஆர்வமாக அதை ஊத ஆரம்பித்திருந்தான், முருகனின் தாறுமாறான ஊதளிலும் அந்தக் கருவி ஒரு மென்மையான இனிமையான இசையை வீடு முழுவதும் நிரப்பியது, அது பரணில் இருந்து வழிந்து முற்றத்தில் சிந்தியது, பின்னர் ஓடுகளில் எதிரொலித்துக் கசிந்து தெருக்களில் புரளத் துவங்கியது.

1265883063_73201529_1-Pictures-of-mouth-organ

"விளக்கு எடுக்கச் சொன்னால் அப்பாவும் பிள்ளையும் என்ன பண்றீங்க அரை மணி நேரமா பரண்ல" என்றபடி ஒரு பக்கம் மனைவியும், அம்மாவும் ஒரு சேரக் குரல் கொடுத்தார்கள், விளக்கை எடுத்துக் கொண்டு முருகன் மெதுவாகத் தொங்கியபடி மரச் சட்டங்களில் தாவினான், காலம் அவன் கூடவே பயணித்து நிகழ் காலத்துக்கு வந்திருந்தது, நான் கீழே இறங்கி வந்த போது அம்மாவின் கைகள் விளக்கை வருடிக் கொண்டிருந்தது, இடைவெளியில் காலம் கசிந்துருகியபடி கிடந்தது என் கண்களுக்குத் தெரிந்தது. முருகனையும், என்னையும் ஒரு மாதிரியாகப் பார்த்தபடி மனைவி நகர்ந்தாள், "அப்பா, மறுபடி இன்னொரு நாள் நம்ம மேலே ஏறிப் பார்ப்போம்" என்று சொல்லியவாறு முற்றத்தில் இறங்கி ஓடினான் முருகன், நிழலும், காலமும் அவன் பின்னால் ஓடிக் கொண்டிருந்தது.

beyond-universe

ஒரு நாளில் காலம் என்னையும், முருகனையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கும், அப்போது பரண் மீது ஒட்டிக் கொண்டு கிடக்கும் சில பொருட்களில் காலத்தின் சுவடுகள் தூசியோடு படிந்திருக்கும். இன்னொரு அப்பாவும், மகனும் பரணில் ஏறி ஒரு இசைக் கருவியைக் கண்டுபிடிப்பார்கள், அதில் வழியும் இசையின் வழியாக  வாழ்க்கை பயணிக்கும்.

************


மறுவினைகள்

  1. எண்ணப் பறவையை என்னுள்ளும் சிறகடிக்க வைத்துவிட்டீர்கள்.அருமை,அருமை.அன்புடன்..இர.இலாபம்சிவசாமி

  2. எதோ ஒரு இனம் புரியாத உணர்வு மனதுக்குள்( சந்தோசமா? இல்லை கவலைய?…. இருப்பதை தொலைத்து விட்டு இல்லாத ஒன்றை தேடுகிறோமோ என்பதை போல….

  3. கடந்த கால நினைவலைகளை ஏற்படுத்தி விட்டார். இப்போது நடக்கும் பல செயல்கள்., பழையவற்றை மறக்கும் படியே இருக்கிறது. கிராமத்துக்கு செல்ல அழைத்தால் குழந்தைகள் மிக்க மகிழ்ச்சியோடு வருகிறார்கள். வசதிகள் குறைவை இருப்பினும் சொந்தங்கள் உரிமையோடு நலம் விசாரிப்பதும், குலவை இடுவதும், அன்பு பரிமாற்றங்கள் நடப்பதும், அங்கே காணலாம். மரப்பாச்சி பொம்மையை நினைத்தால் அது இன்னும் பல கதைகள் சொல்லும். கதை அருமை நண்பரை போலவே… இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்…

  4. முன்னாளின் நான் பரண் மேல் ஏறிய போது என் தந்தைக்கு இப்படித்தான் தோன்றி இருக்குமோ.

    அண்ணனின் எழுத்தாளுமை மேலும் வீரியம் அடைதளின் மற்றுமொற் சான்று இந்த கட்டுரை

  5. arumai…..

  6. human relations are commercialaised.Mechanisation made change the MAN as MECHINE.The ‘Paran’ or the ‘Kalanjiyam ‘where the so called obsolates are stored, trans’ the Father and Son to the forbidden world at whereboth of them are trying to learn and reunite their worlds. A good story.
    nagarasan

  7. best paran is good story best story

  8. அவரது “பொறுத்துத்” (peruthu??)தடித்த உதடுகள் what is this arivu?
    Then one more thing is it kulaikkaal or kulakkaal? Rather it should be as kulakkaal a kalvai(stream) which leads to a kulam(pond)called kulakkaal (kulam+kaal(vai)) what do u think? It’s just a guessing friend

  9. “பெருத்துத்” தடித்த என்பது தட்டச்சின் போது அப்படித் தவறாகி விட்டது, குளக்கால் என்பதே “குளைக்கால்” என்று வழங்கப்படுகிறது. இனி வரும் பதிவுகளில் தட்டச்சுப் பிழைகள் நிகழா வண்ணம் கவனமாய் இருக்கிறேன்.

    உங்கள் சுட்டிக் காட்டலுக்கு நன்றி வெங்கடேசன்.

  10. 遠隔兵器を使った拷問心理実験が広がっています。人物や車両その他による、騒音や視覚的攻撃、言動攻撃、つきまといなどがあります。テレビ放送、人物、映画ドラマ、音楽や出版物などを使った虐待があります。幼少児にたいする人体実験や、児童拷問実験の“いじめ報道”への偽装、情報によるテロがあります。人物乗っ取りの遠隔方法により、スパイ活動者の教員や学童などへのなりすましがあります。1970年代までの拷問心理実験は海外において公開されましたが被害は拡大し続けています。特に問題なのは、遠隔技術により拷問殺人がはどめなく悲惨な形態をとっていることです。虐殺の規模、内容ともにこれほどまでのテロを続けた政体はいままでありません。どうか市民さつじんを停止してください。

    <<一度の照射であなたの一生を拷問に変える殺人兵器があります>>

    http://www5f.biglobe.ne.jp/~terre/


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்