கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 25, 2012

“சின்னப்புள்ளை” என்கிற தமிழ்ச்செல்வி.

7700495-lg

பக்கத்தில் படுத்திருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கவே அருவருப்பாகவும், குமட்டலாகவும் இருந்தது எனக்கு, அவளுடைய அழுக்கடைந்த கனத்த சேலையில் இருந்து நாற்றம் பொங்கி வழிவதைப் போல நான் உணர்ந்தேன், அவளது குறட்டைச் சத்தம் வேறு மழைத்தவளையின் கரகரத்த இரைச்சலைப் போல அந்த அறையை நிரப்பிக் கொண்டிருந்தது, எனக்கு பதினைந்து நாட்களுக்குப் பிறகு இரவுப் பணி வழங்கி இருக்கிறார்கள், பகலில் இந்தப் பெண்ணை நான் பல முறை பார்த்திருக்கிறேன், மருத்துவமனையின் சின்னச் சின்ன வேலைகளை இவள் தான் செய்து தருவாள்.

தேநீர் வாங்கிக் கொண்டு வருவது, மருத்துவர்களும், நாங்களும் சாப்பிடும் தட்டுக்களைக் கழுவி வைப்பது, மருந்துகளை எடுத்துக் கொடுப்பது மாதிரியான பல வேலைகளைச் செய்து தரும் இந்தப் பெண்ணைக் குறித்த பெரிய அக்கறையும், ஆர்வமும் எனக்கு உண்டாக வாய்ப்பில்லை, ஆனால், இப்போது இந்தக் கணத்தில் இந்தப் பெண் ஒரு அருவருப்பான பொருளை அருகில் படுக்க வைத்திருப்பது போல இருந்தது எனக்கு. வேறு வழியில்லாமல் நீண்ட மருத்துவமனையின் வெளிச்சுற்றில் நடை பழகத் துவங்கினேன் நான், கண்கள் சோர்வடைந்து நான் எப்போது மீண்டும் வந்து உறங்கினேன் என்று எனக்குத் தெரியாது.

முன்பக்கச் சாளரங்களில் இருந்து மெல்லிய குளிர் காற்றும், மஞ்சள் வெயிலும் தலை காட்டத் துவங்கி இருந்ததை வைத்து விடியலின் அடையாளத்தை உணர முடிந்தது, எனக்கு அருகில் படுத்திருந்த அந்தப் பெண்ணை இப்போது காணவில்லை. மறுநாள் காலைப் பணிக்கு வந்து சேர்ந்த முல்லைக் கொடியிடம் இரவில் படுத்திருந்த அந்தப் பெண்ணைப் பற்றிக் கேட்டேன்,

சின்னப்புள்ளை என்று அழைக்கப்படுகிற தமிழ்ச்செல்வி வெகு காலமாக அங்குதான் வேலை செய்கிறாள் என்றும், அந்த மருத்துவமனையின் மிக முக்கியமான மருந்துகள் முதற்கொண்டு பிணவறைக்கு அருகில் இருக்கிற எலி வளை வரைக்கும் அவளுக்கு நன்றாகத் தெரியும் என்றும் ஒரு கதை சொல்லும் பாட்டியைப் போலத் துவங்கினாள் முல்லை.

சின்னப்புள்ளைக்கு ஏறக்குறைய ஐம்பது வயது இருக்கலாம், தட்டையான வளைந்த கால்கள், கொஞ்சம் உப்பிய வயிறு, வறண்டு காய்த்துப் போன கைகள், முதுகோடு ஒட்டிய தலை, நீண்ட காலம் பயன்படுத்தப்பட்ட ஒரு தகர டப்பாவைப் போல அவளது முகம் சலனங்கள் ஏதுமின்றி எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன.

katherine-casaban-rose

அவள் எப்போது இந்த மருத்துவமனைக்கு வந்தாள், யார் அவளை இங்கே வேலைக்குச் சேர்த்தது என்கிற எந்த விவரங்களும் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது, அவளைப் பற்றிய விவரங்கள் தெரிந்த ஒரே மனுஷி கிரேஸ் சிஸ்டர் மட்டும்தான், கிரேஸ் சிஸ்டர் அந்த விவரக் குறிப்புகளை யாரிடமும் பகிர்ந்து கொண்டதுமில்லை, பகிரப் போவதுமில்லை என்று சொல்லிவிட்டு உடைகளை மாற்றத் தயாரானாள் முல்லை. எனக்கு இப்போது சின்னப் புள்ளையின் மீதான வெறுப்புடன் கூடவே கொஞ்சம் ஆர்வமும் சேர்ந்து கொண்டது.

இடையில் ஒருமுறை புதிதாய் வந்த ஒரு இளம் டாக்டர் சின்னப் புள்ளையை மருத்துவமனையில் இருந்து விரட்டி அடித்து விட்டார், ஐந்தாறு நாட்களாய் சின்னப் புள்ளை மருத்துவமனையில் இருந்து கொஞ்சத் தொலைவில் இருக்கிற ரயில் நிலையத்தில் படுத்திருப்பதை கருப்பையாவும், திரவியமும் பார்த்ததாகச் சொன்னார்கள்.

ஆறாவது நாள் என்ன மாயம் நடந்ததோ தெரியாது அந்த இளம் டாக்டர் தன்னுடைய காரிலேயே சின்னப்புள்ளையைக் கூட்டிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தார், சின்னப்புள்ளைக்கு நல்ல ஒரு உணவகத்தில் பகல் உணவு வாங்கித் தருமாறு தன்னுடைய உதவியாளர்களை அவர் விரட்டினார். பிறகு தான் மாற்றலாகிப் போகும் வரையில் தன்னுடைய தாயைப் போல அவர் கவனித்துக் கொண்டார்.

ஒரு நாள் நள்ளிரவில் ஐயோ ஐயோ என்று அடித்து அழுதபடி வந்து நின்றார்கள் பத்துப் பதினைந்து மனிதர்கள், வண்டியில் இருந்து இறக்கப்பட்டாள் இருபத்தைந்து வயது நிரம்பிய இளம்பெண்ணொருத்தி, அவளது உடல் ஒரு பெரிய திருமண வீட்டின் சமையலுக்குப் பயன்படுத்திய விறகைப் போல கருகி இருந்தது, என்னோடு இருந்த இரண்டு செவிலியர்களில் ஒருத்தி அப்போது தான் வேலைக்குச் சேர்ந்திருந்தாள், இன்னொருவளோ தன்னுடைய உறக்கம் எந்த விதத்திலும் பாதிப்படைந்து விடக் கூடாது என்பதில் திட்டவட்டமாக இருந்தாள். நான் அருகில் செல்லப் பயந்தும், செல்லாமல் இருக்கக் கூசியுமாய் இடைப்பட்டிருந்தேன்.

hospital%20bed

மருத்துவமனை ஊழியர்களான ஆண்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், எங்கெல்லாம் காசு பறிக்கலாம், எப்படியெல்லாம் இந்த எளிய மனிதர்களைப் பந்தாடிப் பார்க்கலாம் என்பதில் கைதேர்ந்தவர்களாய் இருந்தார்கள் அவர்கள். உடலெங்கும் மருந்தெல்லாம் தடவி அந்தப் பெண்ணைப் படுக்கையில் கிடத்தி இருந்தாலும், அருகில் இருக்க அஞ்சி விலகிப் போனார்கள் உறவினர்கள், இறக்கப் போகும் இளம்பெண்ணுக்கு அருகில் இருந்தாள் ஆவி பிடித்து ஆட்டி வைக்கும் என்பது அவர்களின் பாழாய்ப் போன நம்பிக்கையாய் வேறு இருந்து தொலைத்தது.

அம்மா, எரியுதே, எரியுதே என்று அலறித் துடித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அழுகுரல் ஒரு கருநாகத்தின் பிளவுற்ற நாவைப் போல அருகில் இருக்கும் மனிதர்களின் செவிகளுக்குள் புகுந்து நெஞ்சைப் பிசைந்து காலத்தைக் கனக்க வைப்பதாய் இருந்தது.

அப்போது எங்கிருந்தோ வந்திருந்த சின்னப்புள்ளை அந்தப் படுக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள், படுக்கையின் ஒரு முனையில் அமர்ந்து அந்த இளம்பெண்ணின் பாதங்களை வருடியவாறு ஏதோ பேசிக் கொண்டிருந்தாள், பிறகு மெல்ல அவளுக்கு அதிகமாய் வலிக்கிற பகுதிகளில் எல்லாம் மருந்தைத் தடவி தலையைக் கோதி ஆசுவாசப் படுத்தினாள் சின்னைப்புள்ளை.

முக்கால் மணி நேரத்தில் அந்த இளம்பெண்ணின் அலறல் முற்றிலுமாய் நின்று போயிருந்தது, சின்னப் புள்ளையின் மடியில் தலை வைத்து பாதி வெந்து போன தனது கண்களை மேலே உயர்த்தி சின்னப் புள்ளையிடம் ஏதோ கொண்டிருந்தாள் அந்த இளம் பெண். பிறகு அவர்கள் இருவரும் உரையாடத் துவங்கினார்கள்.

தான் உயிருக்குயிராய் நேசித்த தன் கணவன் தன்னை மறந்து விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்ட கதையை அந்த இரவில் சின்னப்புள்ளையிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் பாதி கருகிய அந்த இளம்பெண். அவளுடைய வலியின் பாதியை சின்னப்புள்ளை அந்த இரவில் ஒரு வண்ணத்துப் பூச்சியின் மகரந்த உறிஞ்சளைப் போல உறிஞ்சிக் கொண்டிருந்தாள்.

தான் இனிப் பிழைக்க முடியாதென்றும், பிழைத்திருக்க விரும்பவில்லை என்றும் சொல்லி விட்டு சின்னப்புள்ளையின் அழுக்கடைந்த சேலைத் தலைப்பில் முகம் புதைத்துக் குலுங்கிக் குலுங்கி அழுதால் அந்தப் பெண். இரவு இருவரையும் வேடிக்கை பார்த்தபடி எந்த மாற்றங்களும் இன்றி தன் பாட்டில் நகர்ந்து கொண்டே இருந்தது.

விடிகாலைப் பொழுதில் சின்னப்புள்ளையின் மடியிலேயே இறந்து போயிருந்தாள் அந்தப் பெண், கால்களை அசைக்காமல் ஒரு மரக்கட்டையைப் போல அந்தப் படுக்கையில் அமர்ந்திருந்த சின்னப்புள்ளையை மருத்துவர் வந்து எழுப்பினார், விலகி சரிந்து கிடந்த அந்த இளம்பெண்ணின் துணிகளை உறங்கும் மகளுக்கு ஆடை திருத்தும் ஒரு தாயைப் போல சின்னப்புள்ளை சரி செய்த போது மருத்துவரின் கண்கள் கலங்கி இருப்பதை எதிரில் இருந்த கண்ணாடி சரியாகக் குறித்துக் கொண்டது.

மறுநாள் இரவு வந்திருந்தது இப்போது, நான் எனது பணிகளை முடித்துக் கொண்டு கொஞ்ச நேரம் கண்ணயரலாம் என்கிற முடிவுக்கு வந்து எனது படுக்கைக்கு அருகில் வந்தேன், பக்கத்துப் படுக்கையில் எந்தச் சலனங்களும் இல்லாமல் தனது வழக்கமான குறட்டைச் சத்தத்தோடு உறங்கிக் கொண்டிருந்தாள் சின்னப் புள்ளை.

Oympic_Mtns__Sunset

எனது மனம் கண்களின் வழியாக ஒரு தெளிந்த நீரோடையைப் போல அந்தப் பெண்ணின் பாதங்களை நோக்கி ஓடியது, வெளியே இரவு ஒரு அற்புதமான நிகழ்வாய் இருந்தது, நாம் நேசிக்கிற அல்லது நம்மை நேசிக்கிற மனிதர்களின் ஊடே ஓடாடிக் களைத்துப் பின் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி தெளிந்த வானத்தின் ஊடாக மிதக்கிற சில விண்மீன்களுக்கு இடையே இன்றைய உறக்கம் நிகழும் போலிருந்தது, வானம் ஒரு மெல்லிய துணிச் சுருளைப் போல சுருண்டு மருத்துவமனை மரங்களின் வழியாய் இறங்கி சின்னப்புள்ளையின் மடியில் சேலையாகிப் புரண்டு கொண்டிருந்தது.

************


மறுவினைகள்

  1. அருமை…

    அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு.

  2. அனைத்தும் அதி அற்புதம்-ராஜி

  3. தோழர் வணக்கம்.பேஸ்புக் கதைக்களம் பிரிவில் இதை பதிக்கிறேன்.நண்பர்கள் தங்கள் கருத்தை பகிர வசதியாயிருக்கும்.நன்றி.

  4. வார்த்தைகளை கடந்த உணர்வுகள்…

  5. வார்த்தைகளை கடந்த உணர்வுகள்..


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்