கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 16, 2012

மெல்லிசை வழிந்த ஜன்னல்…….(சிறுகதை)

beautiful_girl_face-wide

என்னுடைய இரவுகள் மிக அழகானதாக இருந்தன, பூத்துக் குலுங்கும் வேப்பமரத்தின் வாசனையின் கீழமர்ந்து வானத்தை அருகில் பார்க்கிற கணங்களைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், மேகங்கள் கிளைகளின் ஊடாக நகரும் போது உண்டாகும் அதிர்வை நீங்கள் அறிவீர்களா? மலைகளாலும், பள்ளத்தாக்குகளாலும் சூழப்பட்ட ஒரு பழமையான கிராமத்தின் கூரைகளுக்கு மேலே நிறங்களை மாற்றி மினுமினுக்கும் ஏராளமான விண்மீன்களைக் கொண்ட வானமும், விசித்திரமான ஒரு நாட்டுப் படகைப் போல அவற்றிடையே நீந்திக் கொண்டிருக்கும் நிலவையும் பார்ப்பது என்னைப் போல நடக்க முடியாத இரண்டு கால்களும் சூம்பிப் போயிருக்கும் ஒரு மனிதனுக்கு எத்தனை அழகானதாக இருக்கிறது.

கோரைப்பாயை விரித்து வேப்பமர மேடையில் அமர்ந்து கொண்டு இரவுகளில் வெகுநேரம் பீடி சுற்றிக் கொண்டிருப்பேன் நான், இழந்து போன எனது கால்களின் வலுவை கைகளுக்கு நானாகவே மடை மாற்றிக் கொண்டிருந்தேன், பீடி இலைகளும், புகையிலையும் கொண்டு வந்து கொடுக்கும் சையது அண்ணனின் கருணை எனக்கு அதிகமாகவே இருந்தது, பீடி இலைகள் வராமல் போகிற சில நாட்களில் கூட எனக்கான கட்டுக்களை அவர் எப்படியாவது கொண்டு வந்து கொடுப்பார், நான் சொல்கிற இடங்களை மாற்றியபடியும், எனக்கான உணவைத் தயாரித்துக் கொடுத்தபடியும் அம்மா அந்த மழைக் கிராமத்தில் நீண்ட காலமாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

அம்மாவுக்கு அவ்வப்போது வந்து போகிற மூச்சிரைப்பும், அந்த நாட்களில் அவளது படுக்கையும் தவிர பெரிய கவலைகள் என்னிடத்தில் இல்லாமல் இருந்தது, மாறிக்கொண்டே இருக்கிற வானத்தின் காட்சிகள், அவ்வப்போது நகர்ந்து போகிற சில விண்மீன்கள், வேப்ப மரத்தில் அமர்ந்து தனது மலேசியப் பயணத்தை நாள் தவறாது விவரிக்கும் மணிமுத்து ஐயா, வெற்றிலைப் பையோடு வந்து "பாண்டி, சாப்புட்டியாப்பு" என்று வாஞ்சையோடு கேட்டு முகவாயைத் தடவும் மேலமாகாணத்துக் கிழவி, புளியம்பழம் பறிக்கக் கல்லெறியும் சிறுவர்கள், ஊருணிக் கரையில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள் என்று காட்சிகளால் கடந்தோடிக் கொண்டே இருந்தது என் வாழ்நாட்கள்.

எனக்குப் பன்னிரண்டு வயது இருக்கும் வரையில் அம்மா மாதம் ஒருமுறை  நகரத்தின் பெரிய மருத்துவமனைக்கு என்னை அழைத்துப் போகத் தவறியதே இல்லை, நிறைய மாத்திரைகளும், மருந்துகளும் என்னுடைய  வலுவிழந்த  கால்களை ஏனைய சிறுவர்களைப் போல மாற்றி விடும் என்று அம்மா தீவிரமாக நம்பிக் கொண்டிருந்தாள், வெளிநாட்டில் இருந்து வந்து எனது முழங்காலின் கிண்ணங்களில் ஒரு மரக்கட்டையை வைத்துத் தட்டிப் பார்த்தபடி ஒருநாள் அம்மாவின் நம்பிக்கையை உடைத்தார் அந்த வளர்ந்த மருத்துவர், தனக்கு அருகில் அமர்ந்திருந்த உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் அவர் விளங்காத ஆங்கிலத்தில் ஏதோ சொன்னார்.

ஒரு குறிப்பேட்டில் அவர் சொன்னதை எழுதிக் கொண்டு வெகு நேரம் கழித்து உள்ளூர் மருத்துவர் அம்மாவிடம் இப்படிச் சொன்னார், "அம்மா, சத்து மாத்திரைகள் மூன்று மாதத்திற்கு எழுதித் தருகிறேன், தொடர்ந்து கொடுங்கள், உங்கள் பையனால் இனிமேல் நடக்க முடியாது, கிராமப் பஞ்சாயத்துக்களில் சக்கர நாற்காலி வாங்குவதற்கென்று அரசாங்கம் பணம் கொடுக்கிறது, அதற்கு மனுப் போடுங்கள், பஞ்சாயத்துத் தலைவருக்கு வேண்டுமானால் நான் ஒரு கடிதம் தருகிறேன்" என்று சொல்லி விட்டு விடு விடுவென்று ஒரு அச்சிடப்பட்ட தாளில் எதையோ எழுதிக் கொடுத்தார், கைகள் நடுங்க அந்தக் கடிதத்தை வாங்கி கொண்டு என்னை இடுப்பில் அமர்த்திக் கொண்டு அம்மா நடக்க ஆரம்பித்தார்.

அந்த நீண்ட நெடிய நடைபாதை முழுக்க நடக்க இயலாத மனிதர்கள் நிரம்பிக் கிடந்தார்கள், அவர்களின் உலகம் மற்றவர்களின் உலகத்தை விடவும் மிக மெல்லச் சுற்றிக் கொண்டிருப்பதாக நான் உணரத் தொடங்கினேன், அம்மாவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது, அவளிடம் கடைசியாக இருந்த நம்பிக்கையும் இரண்டு மரக்கட்டைச் சுத்தியல் தட்டுதலால் தகர்க்கப்பட்டு விட்டது. நான் நகரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன், அது இந்தத் தாயின் கண்ணீரை நின்று திரும்பிப் பார்க்க இயலாத வண்ணம் சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.

நிலவு மேகங்களுக்குள்ளும், வேப்ப மரத்தின் கிளைகளுக்கிடையேயும் ஒளிந்து விளையாடிக் கொடிருந்த ஒருநாள் இரவில் அம்மா இறந்து போனாள், நான் நடக்க இயலாதவன் என்கிற நினைவை என்னிடம் இருந்து அகற்ற நினைத்த ஒரே ஒரு மனித உயிரும் அப்போது இந்த உலகை விட்டுப் பிரிந்து போனதாய் உணரத் துவங்கினேன் நான், ஊரிலிருந்து அண்ணன் நீண்ட நாட்களுக்குப் பிறகு மறுநாள் வந்திருந்தான், அம்மா கடைசி வரையில் காடு கரைகளில் உழைத்தே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள், எப்போதாவது வேண்டா வெறுப்பாக அண்ணன் கொடுக்கும் பணத்துக்கு அண்ணியிடம் எப்போதும் தவறாத கணக்கிருக்கும்,

குழந்தைகளும் நகரத்தின் மீது அதீதப் பற்றுக் கொண்டவர்களாய் இந்த மலைக் கிராமத்தின் பழங்கதைகள் குறித்து ஏதும் அறியாதவர்களாய் மாறிப் போயிருந்தார்கள், பேரன் பேத்திகளின் மீது உயிரையே வைத்திருந்த அந்தக் கிழவியின் மரணத்துக்காக ஒரு துளிக் கண்ணீர் சிந்தும் நாகரீகத்தைக் கூட அவர்களின் நகரமும், கழுத்துப்பட்டை கட்டக் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடங்களும் கற்றுக் கொடுக்காது போனது தான் அம்மாவின் மரணத்தை விடப் பெரிய துயரமாய் இருந்தது எனக்கு. அம்மாவின் உடலை எரித்து விட்டு நனைந்த உடைகளோடு நுழைந்த அண்ணியும், இன்னும் சிலரும், வீடு குறித்தும், அதில் இருக்கும் பங்குகள் குறித்தும் பேசத் துவங்கினார்கள், என்னுடைய கால்களை விட மனம் வலுவற்றதாய் இருந்தது. நான் வழக்கம் போலவே வேப்ப மர மேடையில் அமர்ந்து எப்போதும் அழகானதாய் இருந்த வானத்தைப் பார்த்தேன், கருமேகங்களால் தன்னை மறைத்துக் கொண்டு ஏதுமற்றதாய் இருந்தது அது. வானம் ஏதுமற்றதுதானே……

15 Must Know Facts about Dreams (12)

ஊர் கூடிப் பேசி வீட்டை அண்ணன் பெயருக்கு மாற்றுவதாகவும், அண்ணன் என்னைத் தன்னோடு வைத்துப் பராமரிப்பதாகவும் முடிவானது, ஊரை விட்டுப் பிரிந்து போவேன் என்பதை நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை, எப்போதாவது கொடுக்கிற சில நூறு ரூபாய்த் தாள்களைத் தவிர அண்ணனிடம் இருந்து பெரிதாய் நான் எதையும் பெற்றுக் கொண்டதில்லை, ஒரே ஒரு நீண்ட உரையாடலையும், ஒரு ஆழமான  புன்னகையையும் கூட, அவன் கொடுக்கிற அந்த நூறு ரூபாய்த் தாள்களில் சிலவற்றை நான் இன்னும் பத்திரமாய் வைத்திருக்கிறேன் என்கிற யாருக்கும் தெரியாத உண்மை அம்மாவோடு புதைந்து போனது. சில மலைக் குன்றுகளைத் தாண்டி நிறைய மனிதர்களைக் கொண்ட அந்த நகரத்துக்கு மூன்றாம் நாளே நாங்கள் புறப்பட்டோம்.

துணைக்கு வந்த பெரியப்பாவின் கண்களில் ஒருவிதமான கலக்கம் குடி கொண்டிருந்தது, "பாண்டி, அண்ணனுக்குச் செரமம் குடுக்காம இருல, ஒங்க அண்ணன் நல்லவந்தான், என்னமோ வந்து சேந்தவ சரியில்ல" என்று காதில் கிசுகிசுத்தார். "அண்ணன் நல்லவனாய் இருந்தால், அம்மா இவ்வளவு சீக்கிரம் செத்துப் போயிருக்க மாட்டாள்" என்று மனசுக்குள் நினைத்தபடி தலையை ஆட்டினேன், அவருக்கு என் மீது அலாதிப் பிரியம் இருந்தது, அவர் கொஞ்சம் பணம் படைத்தவராய் இருந்தால் நிச்சயம் என்னை இந்த நகரத்துக்கு அனுப்பி இருக்க மாட்டார், ஊர்கூடி என்னை என்ன செய்வதென்று பேசிக் கொண்டிருந்த போதும் "நான் குடிக்கிற கஞ்சில கொஞ்சம் இவனுக்கும் குடுத்துப் பொழச்சிக்கிடுவேன் தவசி, பாண்டிய வேணுமின்னா இங்கேயே விட்டுட்டுப் போகச் சொல்லுங்க" என்று பஞ்சாயத்துத் தலைவரிடம் கண் கலங்கினார் பெரியப்பா.  அந்த இரவில் பேருந்துச் சாளரத்தின் வழியாக நான் வானத்தைப் பார்த்தேன், தெளிந்த அலைகள் இல்லாத கடலைப் போல அது பறந்து விரிந்திருந்தது, நிலவு மேற்கில் இருந்து கண்களுக்கு வர நெடு நேரமாகலாம்.

கணக்கற்ற மனிதர்களின் வருகையை அன்றாடம் பதிவு செய்து தனது வழக்கமான இறுக்கத்தோடு இயங்கிக் கொண்டிருந்த அந்த நகரத்தின் பெயர் தெரியாத வீதிக்குள் புகுந்து கொண்டது இந்தக் கால்களை இழந்தவனின் வாழ்க்கை, "முருகப்பா சில்க்ஸ்" என்று எழுதப்பட்டு வெளிறிய ஓரம் கிழிந்த பையொன்றில் அந்த மலைக் கிராமத்தில் இருந்து நீண்ட தூரம் பயணித்து வந்திருந்தன என்னுடைய உடமைகள். நீண்ட காலமாக அம்மா நான் சாப்பிட்டவுடன் வாய் துடைக்கும் பூத்துண்டு ஒன்றுதான் இப்போதைக்கு எனக்கிருக்கும் சொத்து. பெரியப்பா அன்று இரவே கிளம்பிப் போனார், போகும் போது மறக்காமல் அண்ணியிடம் இப்படிச் சொன்னார், "அம்மா, தாய் தகப்பன் இல்லாத பயலாப் போய்ட்டான், ஒங்கள விட்டா இந்த நொண்டிப் பயலுக்கு வேற நாதி கெடையாது, இன்னொரு புள்ளையா நெனச்சுப் பாத்துக்க தாயி, ஒனக்குப் புண்ணியமாப் போகும்".

நாட்கள் நகரத் துவங்கின, நிலைத்த நாற்காலி ஒன்றையும், இரவில் கதைகள் கேட்கும் குழந்தைகளையும் தவிர வேறொன்றும் இல்லாததாய் என்னுடைய உலகம் சுருங்கிப் போனது, அகண்ட வானத்தையும், சிதறிக் கிடக்கிற விண்மீன்களையும், என்னுடைய உலகைச் சலனமின்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலவையும் கூட நான் இழக்க வேண்டியிருந்தது, வரிசையாக இருந்த வாடகை வீட்டு வாசலில் எப்போதாவது தவழ்ந்து செல்கிற போது நான் வானத்தைப் பார்க்க நேர்ந்தது.வேப்ப மர மேடையின் கீழிருந்து நான் கண்ட அந்த வானம் நினைவுகளாய்ச் சுருங்கிப் போனது. சமைப்பதற்கும், பாத்திரங்களைக் கழுவி அடுக்குவதிலும், குவிக்கப்படுகிற துணிகளின் அழுக்கைப் போக்கி வாளியில் போட்டு வைப்பதுமாய் என்னுடைய இருப்பை நான் உறுதி செய்து கொண்டிருந்தேன், சுடு சொற்களும், சுமைகளும் இல்லாத ஒரு வாழ்க்கையை நகரம் என் கால்களுக்கு மாற்றாய் வழங்கி இருந்தது.

ஒரு வெம்மை நிறைந்த நாளின் நடுப்பகலில் நாற்காலியில் அமர்ந்திருந்த போது வழக்கம் போலவே ஜன்னலைப் பார்த்தேன், ஜன்னலின் வெளியே மிக அருகில் உயர்ந்திருந்த அந்தக் கட்டிடமும், அதன் பெரிய கதவுகளும் ஒரு காட்சிப் பொருளாகி இருந்தன எனது தனிமைக்கு, அவ்வப்போது சிரிப்பும் மகிழ்ச்சியுமாய் கடக்கும் அந்தக் கட்டிடத்தின் மனிதர்கள் நினைவில் தங்கிப் போனார்கள், நெடு நாளைக்குப் பிறகு அன்று அந்த வீட்டுக்கு புதிதாய் ஒரு பெண் வந்திருந்தாள், என்னைப் போலவே ஒரு அண்ணன் வீட்டுக்கு வந்திருந்த பெண்ணாகவோ அக்கா வீட்டுக்கு வந்திருந்த தங்கையாகவோ இருக்கக் கூடும்.

வாசலில் கிடந்த ஊஞ்சல் போன்றதொரு இருக்கையில் அமர்ந்தபடி ஆடிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக்கு பதினேழு வயது இருக்கலாம், அவளது நீண்ட கூந்தல் வேப்ப  மரக் காட்சிகளின் எச்சம் போல காற்றில் அலைந்து கொண்டிருந்தது, துருதுருவென்று தேனுக்கு அமர்ந்த ஒரு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பைப் போலிருந்தது  அவளது கண்கள், கோதுமை நிறத்தில் ஒரு சிற்பம் போல அவ்வப்போது கண்களில் தென்படத் துவங்கிய அந்தப் பெண்ணின் நளினமான அசைவுகள் எனக்குள் ஒரு பரவசத்தை உண்டாக்கத் துவங்கி இருந்தது, எப்போதாவது ஜன்னலின் உட்புறமாகத் தெரியும் எனது அசைவுகளை அவளும் கவனிக்கத் துவங்கி இருந்தாள், நீண்ட நெடிய இந்தக் கால் இழந்தவனின் பகல்களை அவளுடைய வருகை மிக எளிமையானதாய் மாற்றிக் கொண்டிருந்தது.

அருகில் யாருமில்லாத ஒரு நண்பகலில் ஒரு புன்னகையை எனக்கு அவள் பரிசாகக் கொடுத்த போது நான் முதன் முறையாக வாழ்வதின் பொருளை உணர்ந்து கொள்ள  முயற்சி செய்தேன், விளையாட்டும் குறும்புகளும் நிறைந்த அந்தப் பெண்ணின் கால்கள் ஒரு துடிப்பான வெட்டுக் கிளியின் பறத்தல் போல என் நினைவுகளின் வெளியில் குறுக்கும் நெடுக்குமாய்ப் கீறலிட்டபடி இருந்தன. புன்னகைக்கும் சிரிப்புக்கும் இடையிலான ஒரு அழகான ஒலியை அவள் எழுப்பும் போதெல்லாம் இந்த கால்களை இழந்தவனின் நகரம் கூடக் கொஞ்சம் கருணை மிகுந்ததாய் மாறிப் போனதில் வியப்பில்லைதான், எங்கிருந்தோ வரும் ஒரு மெல்லிசையில் கலந்த  சொற்களைப் போல அவள் எந்த அனுமதியும் இல்லாமல் எனக்குள் நிரம்பிப் போனாள்.

dream

கண்ணாடித் தொட்டிக்குள் அங்குமிங்குமாய் அலைகிற தங்க மீன்களைப் போல அவளது புன்னகையும், கையசைவுகளும் என் ஜன்னலை நிரப்பிக் கொண்டே இருந்தன. அவ்வப்போது காற்றில் அலைகிற கூந்தலைக் கற்றையாய்ப் பிடித்து முறுக்கி ஒரு ரப்பர் வளையத்துக்குள் அவள் அடைக்கிற போதும் தவறாது வெளியே கிடக்கும் இரண்டொரு கற்றைகள் அடர்ந்த இடைவெளி இல்லாத அவளது புருவங்களின் மீது புரளத் தலைப்பட்டன. ஒரு இளவரசியின் நெற்றியைப் போலக் குவிந்து உற்றுப் பார்த்தபடி ஜன்னலின் வழியாக அவள் வாரித்தரும் புன்னகைக்காகவே நான் இப்போது கவலைகள் இல்லாமல் வாழத் துவங்கி இருந்தேன், ஒரு மாலையில் "ஜின்சி அக்கா, ஜின்சி அக்கா" என்று மாடிக்குள் விழுந்த பந்தைக் கூவி அவளிடம் கேட்ட அண்ணன் மகனிடம் இருந்து அறிந்து கொண்டேன் அவளுடைய அற்புதமான பெயரை.

ஜின்சி இப்போது எனக்கு மிக நெருக்கமானவளாய் மாறி இருந்தாள், நண்பகலில் கைகளை அசைத்து நான் சாப்பிட்டேனா என்று கேட்கும் அளவுக்கு எங்கள் ஜன்னல் நட்பு வளரத் துவங்கியது, இடுப்பை ஊன்றி வீடெங்கும் நகர்ந்து வேலைகளை விரைந்து முடித்து ஜன்னலின் அருகே நிலைத்துக் கிடந்த நாற்காலியில் தாவி அமரும் வரை எனது உலகம் மெதுவானதாகவும், பிறகு ஒரு பளிங்குத் தரையில் சொடுக்கி விடப்பட்ட பம்பரம் போலவுமாய் மாறி மாறிச் சுழன்றது. அவள் கண்களில் எனக்காகத் தேக்கி வைக்கப்பட்டிருந்த பரிவும், புன்னகையும் அம்மாவுக்குப் பிறகு இந்த உலகத்தை நான் நேசிக்கக் காரணமாய் இருந்தது, நகரத்தின் கொடுஞ்சொற்களால் நிரம்பி மரத்துப் போய்க் கிடந்த எனது நினைவுச் செல்களை தனது கணக்கிலடங்காத புன்னகைகளால் நிரப்பி மலர்களின் வாசனையால் தினந்தோறும் நிரப்பிக் கொண்டிருந்தாள் ஜின்சி.

எனது வலுவற்ற  கால்கள் ஒரு தொட்டிச் செடியில் துளிர்க்கிற துளசிச் செடியைப் போல மலரத் துவங்கும் கனவுகளை நான் கண்டேன். ஊறிச் செழிக்கிற  ஒரு துளி அன்பும், சில துண்டுப் புன்னகைகளும் தான் இந்த உலகத்தை எல்லோருக்கும் பொதுவானதாக மாற்றிக் கொண்டே இருக்கிறது. ஜின்சியோடு கூடவே எனக்குச் சில ஜன்னல் நண்பர்கள் கிடைத்தார்கள், ஜின்சி வீட்டு வாசலின் ஓரத்தில் வளர்ந்து மதில் சுவர் முழுதும் படர்ந்து கிடந்த மஞ்சள் நிற  போகேன்வில்லா கொடி, அதன் மீது அவ்வப்போது ஓடிக் களிக்கும் இரண்டு குட்டி அணில்கள், எப்போதாவது வந்தமரும் ஒரு அடர் நிறக் காக்கை. ஜின்சியின் வருகை எப்போதாவது தாமதமாகும் போது போகைன்வில்லாவின் சில மலர்க் கொத்துக்களோடு உரையாடவும், அணில் குட்டிகளை அதட்டுவதுமாய் எனக்கான காலம் அலங்கரிக்கப்பட்டது.

நெடு நாட்களுக்குப் பின்னால் ஒருநாள் அதிகாலையில் நான்  ஜின்சியை ஜன்னலில் பார்த்தேன், அவள் முகம் வாடிப் போயிருந்தது, வழக்கமான புன்னகையும், குறும்புகளும் இல்லாத அந்த முகம் அணிகலன்கள் இல்லாத ஒரு இளவரசியின் முகத்தைப் போலப் பொருத்தமற்றுக் கிடந்தது, அவள் என்னிடம் ஏதோ சொல்வதற்கு முயற்சி செய்வதைப் போலிருந்தது, ஆனாலும், அந்தக் காலையில் அதிக நேரம் என்னால் அங்கு அமர்ந்திருக்க முடியாது, கால்களை இழந்து சோற்றுக்காகவும், ஒரு வீட்டின் உரிமையை மாற்றுவதன் மாற்றாகவும் நகரத்துக்கு வந்திருக்கிற என்னால் எல்லா மனிதர்களையும் போல மனமெங்கும் வழிந்து பெருகும் காதலையும், அன்பையும் அள்ளி எறிந்து விட முடியுமா என்ன? பகல் ஒளியை நிரப்பிய அந்த நாளின் ஜன்னலில் ஜின்சியின் முகம் தென்படவே இல்லை, ஓலமிட்டு அழுதபடி மனம் கண்களை ஜன்னலை நோக்கியே உந்தித் தள்ளிக் கொண்டிருந்தது. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு…………..பதினைந்து, இருபது, நாற்பது………….நாட்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனபோதும் ஜின்சியின் முகத்தை நான் பார்க்கவே முடியவில்லை, 

போகேன்வில்லாவின் மலர்க்கொத்துக்கள் வழக்கம் போலவே ஆடிக் கொண்டிருந்தன, சவப்பெட்டியைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் மலர்கள் எப்போதாவது காற்றில் அசைவதைப் போல, அணில் குட்டிகள் இரண்டும் இப்போதும் ஓடிக் கொண்டே இருக்கின்றன, அதட்ட முடியாத துயரத்தைத் சுவற்றில் பதித்தபடி, மிகக் கடினமான ஒரு நகர்தலைத் தொடங்கி அன்று இரவு நான் மொட்டை மாடிக்கு வந்திருந்தேன், நகரம் ஒரு கார்த்திகை மாதத்துக் கோவிலைப் போல விளக்குகளால் மின்னிக் கொண்டிருந்தது, தெளிவானதாகவும், ஓரங்கள் வெளிறிப் போனதாயும் வானம் மங்கலாய் நீண்ட நாட்களுக்குப் பிறகு என் கண்களில் பட்டது.

gyebnar

சுற்றுச் சுவர்களில் முழங்காலைப் பதித்தபடி அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தேன் நான், எங்கோ தொலைவில் எனது வேப்ப மர மேடையும், அதன் கீழே அன்பு நிரம்பிய மனிதர்களும் இந்த வானத்தின் கீழே வாழக் கூடும், எங்கோ தொலைவில் அம்மாவைப் போலவே கருணையும், அன்பும் நிரம்பிய ஜின்சி என்கிற பெண் வாழக்கூடும், அவளது நினைவுகளில் இந்தக் கால்களை இழந்த மனிதனின் ஒரு துளிப் புன்னகையேனும் தேங்கிக் கிடக்கக் கூடும். என்னைப் போன்ற எண்ணற்ற மனிதர்களின் வாழ்க்கையை அப்படியான  நினைவுகளும், கனவுகளுமே நகர்த்தியபடி இருக்கிறது. இருளில் கைகளால்  தடவி படிக்கட்டுக்களைக் கண்டு பிடித்தேன், துவண்ட கால்களை ஒரு குப்பையைப் போல வாரி கீழே இறங்கத் துவங்கினேன் நான். ஜன்னலுக்குள் என்றேனும் ஒரு நாள் ஜின்சியின் புன்னகை மீண்டும் மலரக் கூடும் என்கிற நம்பிக்கையோடு…………

***************

 


மறுவினைகள்

  1. நன்றாக இருந்தது


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்