கை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 16, 2013

"பிள்ளைகளுக்கு ஏதும் நிகழாமப் பாத்துக்குங்க".

loyola_EPS2

அலைபேசி ஒலிக்கிறது, நீண்ட எண்ணாக இருக்கிறது, +94 என்று துவங்குகிற எண் என்றால் முன்பெல்லாம் கொஞ்சம் கலக்கமாக இருக்கும், "Liberate Tamil Eelam" என்கிற வலைப் பக்கத்தில் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகளுக்காக சில சிங்களவர்கள் நள்ளிரவில் கண்மூடித்தனமாகத் திட்டுவார்கள். நாம் பேசுவதைக் கேட்க மாட்டார்கள், எழுதி வைத்துப் படிப்பதைப் போல ஆங்கிலக் கெட்ட வார்த்தைகளை உதிர்ப்பார்கள்.

போரின் கடைசிக் காலத்தில் சில போராளிகள் பேசுவார்கள், 2009 ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் அப்படி வந்த ஒரு அழைப்பில் பேசியவர் சொன்னார், "நேற்று ராவுல ஒரு பதினஞ்சு பொடியன்கள் ஆமிக்காரனிடம் பிடிபட்டு நிக்கிறாங்கள், எப்படியும் தட்டிப் போடுவான் எண்டுதான் நினைக்கிறேன்". திகீரென்றது, தட்டிப் போடுவாங்கள் என்று சொன்னால் கொல்லப் போகிறார்கள் என்று பொருள். மிக எளிதாக ஏதோ மின்விசிறியின் விசையைத் தட்டுவது போலச் சொன்னார்.

பிறகொருமுறை ஒரு தமிழ் ஈழ நண்பரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கேட்டேன், மரணத்தை நீங்கள் எப்படி அத்தனை இலகுவாக எடுத்துக் கொள்கிறீர்கள், மரணம் உங்களுக்கு அச்சம் தருவதில்லையா??? அவர் சொன்னார், "அண்ணா, மரணம் ஒரு போதும் எங்களுக்கு அச்சம் தருவதாக இல்லை, நாங்கள் மரணத்தை நன்கு பழகிக் கொண்டு விட்டோம், ஒரு கதையோடு மேலும் தொடர்ந்தார்,

"அனுராதபுரம் வானூர்தி தளத் தாக்குதலின் காலகட்டத்தில் எனக்கு ஒரு அழைப்பு வந்தது, இழுத்து இழுத்து பேசிய அந்தத் தம்பி, அண்ணன் எங்க நிக்கிரிகள் என்று கேட்டான், இருக்கும் இடத்தைச் சொன்னேன். சும்மாதான், கதைக்கனும்னு தோணுச்சு என்றவன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான். ஏதோ பொறி மண்டைக்குள் தெறிக்க "நீ எங்கடா நிக்கிற?", என்று கேட்டேன். சொன்னான்.

அண்ணா, ஏறி குண்டு மேலே விழுந்து கிடக்குது, கொஞ்சம் குடலும் கூட வெளியே வந்துட்டது, சட்டையைக் கழற்றி கட்டி வைச்சிருக்கிறன், கையில இயங்கும் நிலையில் சாமான் ஒன்று இருக்கிறது, எப்படியும் சாகுரதுக்குள்ள ரெண்டு மூணு பேரத் தட்டிட்டுத் தான் சாவேன், முன்ன உங்க கிட்டக் கதைக்கனும்னு தோணுச்சு". தெளிவாகச் சொன்னான்.

தென்னை மரம் ஒன்றின் மீது ஏறிக் கிடக்குறன். ஏறி குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் குடல் சரிந்திருக்கிறது, உடலெங்கும் காயங்கள், தப்பிக்க மரத்தின் மீது ஏறி இருக்கிறான், தனது மரணத்தைப் பற்றியோ, சரிந்து கிடக்கிற குடலைப் பற்றியோ அந்த மாவீரனுக்கு எந்த விதமான அச்சமுமில்லை, அவனுடைய கவலை எல்லாம் இன்னும் எத்தனை எதிரிகளை அழிக்க முடியும் என்பதில் கவனமாய் இருந்தது. "சரி, நீங்கள் என்ன சொன்னீர்கள்?" என்று அவரிடம் கேட்டேன். எப்படியும் திருப்பிச் சுட்டுப் போட்டுச் செத்துப் போ" என்று சொன்னேன். என்று தயக்கமில்லாமல் சொன்னார்.
14march_tysms03_15_1396054e

என்ன மனிதர்கள்? என்ன ஒரு தீவிரம்?, தங்களுக்கான தேசத்தைக் கட்டமைப்பதில் அவர்கள் காட்டிய உறுதி என்றும் உலக வரலாற்றில் இடம் பெறக்கூடியது.
எங்கள் உடல், எங்கள் மொழி, எங்கள் குடும்பம் இவை எல்லாவற்றையும் விட எங்கள் தேசமே மிகப்பெரியது, ஏனெனில் முன்னவை மூன்றும் தனித்து விடுதலையோடு இயங்க வேண்டுமானால் எங்களுக்கான தேசம் ஒன்றில் தான் அது சாத்தியப்படும். எத்தனை தெளிவான விடுதலை குறித்த சிந்தனை. பாலச்சந்திரன் மரணம் தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகம் முழுக்க இருக்கும் இதயம் கொண்ட மனிதர்களின் மனசாட்சியை உலுக்கி எடுக்கும் இந்த நேரத்திலும் தெளிவாகச் சொல்கிறார்கள் ஈழத் தமிழ் மக்கள்.

"அவனுக்கு என்ன அஞ்சு பொயிண்ட் மார்புல வாங்கி அப்பன் பேரக் காப்பாத்திட்டான்". நெஞ்சக் குழியில் அடைக்கும் துக்கத்தை எப்படி விழுங்குவது என்று நாம் நாம் தடுமாற்றம் அடைகையில் கலகலவென்று சிரிக்கிறார்கள். கவலைப்பட்டு ஒன்னும் ஆகிடப் போறது கிடையாது அண்ணன். விடுதலை, போர் என்று வந்து விட்டால் உயிர் தானே முதல் ஆயுதம்.

இனி முதல் பத்தி அழைப்புக்கு வருகிறேன்,

"ஹலோ, ஹலோ"

"அண்ணா, நான் இளவேனில் கதைக்கிறேன்".

"சொல்லும்மா, நல்லா இருக்கியா"

"நான் ரொம்ப நல்லாவே இருக்குறன்"

"அத்தையும், ரூபனும் எப்படி இருக்காங்க"

"எல்லாரும் நலம் தான் அண்ணா"

"ரொம்ப சந்தோசமா இருக்குறேன் அண்ணா"

"அங்கன இருக்குற தம்பிகளும், தங்கைகளும் எங்களுக்காக போராட்டம் நடத்திப் பட்டினி கிடக்குறதாகச் சொல்றாங்க, இங்க இருக்குற பேப்பர்ல எல்லாம் தலைப்புச் செய்தியா வந்து கொண்டிருக்கு. எங்கட கண்ணீரையும், எங்கட வலியையும் கண்டு ஏலாமத் தானே பட்டினி கிடக்குறாங்க, எங்களுக்கும் எங்கட பிள்ளைகளுக்கும் கேட்க நாதியே இல்லையெண்டு வலியோட கிடந்த வாழ்க்கைக்கு இனிமேலே ஒரு அர்த்தம் இருக்கு தானே, சின்னப் பொடிப் பிள்ளைகள் கூட மண்டியிட்டு வீதியில போராட்டம் செய்யுற படங்களைப் பாக்கிற போது எங்கட போராட்டமும், எங்கட மாவீரர்கள் செய்த தியாகமும் வீண் போய் விடாது எண்டு நம்பிக்கை வருது".

537582_414507315290381_1386691722_n

"பிள்ளைகளுக்கு ஏதும் நிகழாமப் பாத்துக்குங்க"

தாய், பிள்ளைகள், கணவன், உறவுகள், வீடு, வாசல் எல்லாவற்றையும் இழந்தும் தனது தமிழ்ப் பிள்ளைகள் பட்டினி கிடப்பதைப் பொறுக்க முடியாமல் ஒரு தாய்க்கே உரிய பரிவோடு மறுமுனையில் பேசிக் கொண்டிருக்கிறாள் அந்த ஈழத்தாய்.

"இந்தப் பாசமும், உறவும், நெகிழ்வும் யார் கொடுத்தார்களோ அம்மா, அது தானே உங்களை இப்படி ஒரு ஒப்பற்ற தனித் தேசத்திற்காக உயிரையும் கொடுத்துப் போராடச் சொல்கிறது.

"பிள்ளைகள் அவர்களே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளும் படி வளர்ந்து விட்டார்கள். நாம் ஒன்றும் சொல்கிற மாதிரியெல்லாம் இல்லை"
என்று சொல்லி விட்டு இணைப்பைத் துண்டித்தேன்.

என் தம்பிகளே, தங்கைகளே, உங்கள் எழுச்சி மிகுந்த இந்த அறப்போர் ஒரு தேசத்துக்கான நம்பிக்கையை வெறும் மனிதர்களிடம் மட்டும் உயிர்ப்பிக்கவில்லை, உலகெங்கும் வாழுகிற தமிழினத்தின் தலைவர்களிடம் கூட உயிர்ப்பித்திருக்கிறது.

stock-photo-school-boy-gives-salute-isolated-on-white-background-64795978

மண்டியிடாத வீரமும், மண்டைச் சுரப்பும் கொண்ட எம்மினத்தின் குருத்துகள் கேடு கெட்டவர்கள் என்று சொன்னவனைக் கூப்பிடுங்கள், அவனோடு கொஞ்ச நேரம் கதைக்க வேண்டும் நான்.

உங்கள் நெஞ்சுரமும், உங்கள் தீர்க்கமான அறிவும் இனி எங்களையும் வழி நடத்தும்.

 

***************


மறுவினைகள்

  1. பாசத்துக்குரிய என் தமிழகத்தின் மாணவச் செல்வங்களின் அஞ்சாமைக்கும் எம்மீது கொண்ட அளவற அன்புக்கும், எமக்காக அவர்கள் செய்யும் தியாகங்களுக்கும் தலை வணங்குகிறேன். நீங்கள் செய்யும் போராட்டங்களுக்கு துணை நின்று எதுவும் செய்ய ஈ(ழ)னத் தமிழர்களாக நெஞ்சு பதறுண்டு, நன்றியோடு கண்கலங்கி நிற்கின்ரோம்… உம்மால், வாழ்க நம் தமிழ் வீரம்…


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்