கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 24, 2010

திரைப்படங்களும், மூன்று எதிரிகளும்

one

எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் தமிழ்த் திரைப்படம் “நீல மலைத் திருடன்”, ரஞ்சன் என்கிற நடிகர் அதில் நடித்திருப்பார், “எங்கேயோ அழைத்துப் போகிறேன்” என்று சொல்லி தனது மிதிவண்டியின் பின்பக்கத்தில் அமர வைத்து என்னை அழைத்துப் போனார் அப்பா. மிகப்பெரிய வியப்பாக அவர் சிவகங்கையின் “அமுதா டாக்கீஸ்” அருகில் சென்று நிறுத்திய போது கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. படம் முழுவதும் நிறைந்த இயற்கைக் காட்சிகள், குதிரையில் செல்லும் கதாநாயகன், கதாநாயகனுக்கு உதவும் நாய் என்று மிக வேகமாகச் செல்லும் திரைப்படம் அது, படத்தில் வரும் காட்சிகளை அதன் பின்னணியில் உருவாகும் எனது கேள்விகளை எல்லாம் மிகப் பொறுமையாக எனக்கு விளக்கியபடியே படம் பார்த்துக் கொண்டிருந்தார் அப்பா. அதில் வருகிற சிறந்த கருத்துக்களை நான் உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அனேகமாக அதுதான் அப்பாவும் நானும் மிக நெருக்கத்தில் அமர்ந்து பார்த்து மகிழ்ந்த முதலும் கடைசியுமான திரைப்படம். அதற்குப் பிறகு அவர் என்னை திரைப்படங்களுக்கு அழைத்துப் போகவில்லை என்பதை விடவும், இன்றுவரை அவர் திரைப்படங்கள் எதையும் விரும்பிப் பார்க்கவில்லை என்பதே உண்மை. திரைப்படங்களின் மீதான அவருடைய ஆர்வமிண்மைக்கு அவருடைய மனநிலையே காரணம் என்று நினைக்கிறேன், நல்ல சிந்தனைகளையும், காட்சி அமைப்புகளையும் திரைப்படங்களில் விரும்பிய அப்பாவுக்கு அது மாதிரியான திரைப்படங்களை இயக்கம் இயக்குனர்கள் தமிழ்த் திரைப்பட உலகில் இருக்கிறார்கள் என்பதை இன்று வரையில் நம்ப இயலவில்லை. கடந்த இருபத்தைந்து வருடங்களில் ஒரு முழுநேரத் திரைப்படத்தை அவர் அமர்ந்து பார்த்ததாய் எனக்கு நினைவில்லை. ஒருவகையில் அது எங்கள் அனைவருக்கும் பயனுள்ளதாய்ப் போனது, திரைப்படங்கள் பெரிய அளவில் எங்கள் வாழ்க்கையில் தாக்கம் விளைவிக்கவில்லை, தொலைக்காட்சியின் வரவுக்குப் பின்னும் செய்திகள் மற்றும் சில செய்திப் படங்கள் என்று எங்களுக்கான தொலைக்காட்சி நேரத்தை அப்பா வரையறை செய்து வைத்திருந்தார். தொலைக்காட்சியில் இருந்து நன்மைகளை மட்டுமே நாங்கள் பெற்றுக் கொண்டோம்.

 

திரைப்படங்கள் குறித்த முறையான அறிவையும், பயிற்சியையும் இளமைக் காலம் தொட்டு நம்மில் யாரும் அறிந்து கொள்ள முடிவதில்லை, திரைப்படங்கள் நமது இன்றைய சமூகத்தின் மிகப்பெரிய தாக்கம் விளைவிக்கக் கூடிய ஊடகம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை, திரைப்படங்கள் விளைவிக்கிற பொதுப் புத்தியில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற குறிப்பிட்ட விழுக்காடு இளைஞர்களையும் நாம் அறிய முடியும், இருப்பினும் வரம்புக்கு மீறிய திரைப்படக் காட்சிகளையும், சரியாக விளக்கிச் சொல்ல முடியாத அவற்றின் தாக்கங்களையும் நாம் நமது குழந்தைகளுக்கும், சமூகத்திற்கும் உள்ளீடு செய்கிறோம். முரண்பட்ட மனித மனங்களையும், குழப்பமான ஒரு மன நிலையையும் நமது இளைய தலைமுறை திரைப்படங்களின் பரிசாகப் பெற்றிருக்கிறது, தமிழ்ச் சமூகத்தின் இரண்டு இளைஞர்கள் சந்திக்கிற போது திரைப்படங்கள் அல்லது திரை நாயகர்கள் குறித்த ஏதாவது கருத்துப் பரிமாற்றம் உறுதியாக நிகழ்கிறது. தான் வாழும் சமூகத்தின், தேவை உலகின், பொருளுலகின் வழமையான ஒரு உறுப்பினர் போலவே திரை நாயகர்கள் அவர்களால் பார்க்கப்படுகிறார்கள், திரைப்படங்களின் காட்சிகள் கூட ஏதோ ஒரு அன்றாட நிகழ்வு தங்களைக் கடந்து போயிருப்பதான ஒரு மன நிலையில் நமது இளைஞர்கள் திரைப்படங்களைப் பற்றிய புரிதல் கொண்டிருக்கிறார்கள், இவற்றைப் பல கூறுகளாக நம்மால் விளங்கிக் கொள்ள முடியும். அவற்றில் சில மிகப்பெரிய சமூகத் தாக்கம் விளைவிக்கக் கூடியவை. இன்றைய புதிய தலைமுறையின் ஒரு சில இயக்குநர்களைத் தவிர ஏனைய பெரும்பான்மை இயக்குனர்கள் இந்தப் பொது வாய்ப்பாட்டின் அடிப்படையிலேயே இயங்க வேண்டிய ஒரு புறச் சூழலை நமது சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. அவற்றில் மிக முக்கியமான சிலவற்றை நாம் விவாதிக்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம்.

two

1) தனி மனித வழிபாடு நோக்கிய நாயகத் தோற்றம்.

முதல் காரணி எப்படியான தாக்கம் விளைவிக்கிறது அல்லது எப்படி உள்ளீடு செய்யப்படுகிறது என்பது குறித்து மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு தேவைப்படுகிறது, தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் ஏறக்குறைய எல்லா வேலைகளையும் அவர்களே செய்து முடித்து விடுகிறார்கள், தன்னுடைய தந்தையை இழிவு படுத்தும் ஒரு குழுவை அல்லது தனி மனிதனை ஒரு கல்லெறிந்து தாக்குவதில் துவங்கி கட்டிடங்களை நொறுக்கி, கடைகளைப் பந்தாடி, பேருந்துகளைத் துரத்தி, ரயில் வண்டிகளின் மீதேறி ஓடி, விமானங்களைக் கயிறு கட்டிப் பற்களால் நிறுத்தி நூற்றுக் கணக்கானவர்களை அடித்துத் துவைத்து கடைசியில் அவர்கள் வெற்றி பெறுகிற காட்சியில் ஒரு தமிழ்த் திரைப்படம் பெரும்பாலும் முடிவுக்கு வருகிறது, இத்தகைய திரைப்படங்களின் கதாநாயகர்கள் சொல்ல வருகிற செய்தி நான் ஒருவனே அனைத்து ஆற்றல்களும் நிரம்பிய மனிதன் , எனக்கான வெற்றிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற மிக மோசமான ஆபத்து நிறைந்த உள்ளீடு. இன்றைய தமிழ்த் திரைப்படங்களின் பெரும்பாலான கதாநாயகர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள், இதைத்தான் செய்ய வேண்டும் என்று அவர்களின் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் அவர்களை அழுத்துகிறார்கள்.

கூலிக்காரனில் தொடங்கி எந்திரன் வரையில் தொடர்ச்சியாக இப்படி ஒரு காட்சிப்படுத்தலை தமிழ்த் திரைப்படங்களுக்கு பொதுமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள், சமூகத்தில் ஒரு தனி மனிதனே அவனது வெற்றிக்கும், தோல்விக்கும் முழு முதற்காரணி என்கிற வகையில் கதாநாயகர்களின் பிம்பம் வலிந்து உருவாக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் முதற்கொண்டு கடைநிலைத் தொழிலாளியாக வாழ்க்கை நடத்துகிற எல்லாக் கதாநாயகர்களும் நமது சமூகத்தில் முன்னர் உலவுகிற கடவுள் என்கிற பிம்பத்தைப் போலவே எல்லா அதிகாரங்களையும் பெற்ற ஒரு முழு ஆற்றலாகத் திரைப்படங்களில் காட்டப்படுகிறார்கள். இத்தகைய ஒரு சித்தரிப்பு உளவியல் வழியாக திரைப்படங்களைப் பார்க்கிற யாருக்கும் ஒரு அழுத்தத்தைத் தோற்றுவிக்கும், குறிப்பாகக் குழந்தைகளும், இளைஞர்களும் முழு அதிகாரம் பெற்றவர்களாக மாற விரும்புகிறார்கள். கல்வி, தொழில், பொருளாதாரம், சமூகம் அரசியல் போன்ற பல்வேறு புறக்காரணிகளை அப்படியே இருத்தி விட்டு ஏதாவது ஒரு வழியில் நாயகத் தோற்றம் பெற வேண்டும் என்கிற போலியான ஒரு அக உலகைக் கட்டமைக்கும் இந்தத் தனிமனித வழிபாட்டு முறையை விட்டு வெகு தூரம் விலகிச் செல்ல வேண்டிய நிலையில் நமது திரைப்படங்கள் இருக்கிறது.

200429986-001

அடிப்படைத் தகுதிகளான வாசிப்பு, அதன் மூலமாகப் பெறுகிற கருத்தியல் வடிவங்கள், கருத்தியலின் மூலம் கட்டமைக்கப்படுகிற அரசியல், அரசியலால் நிகழும் சமூக மாற்றங்கள், பொருளாதார மாற்றங்கள் ஆகியவற்றை நுட்பமாகச் சொல்லி விளங்க வைக்க முடிகிற ஒரு ஊடகத்தில் நிகழ்கிற இத்தகைய எதிர்மறை இயக்கம், ஒரு போலியான தனி மனித ஆற்றல் வழிபாட்டு மனநிலையை நோக்கித் தனது பார்வையாளர்களை நகர்த்தி சமூக வளர்ச்சிக்கு ஒரு மிகப்பெரிய பின்னடைவாகவே மாறும் என்றே கருதப்பட வேண்டியிருக்கிறது.

பார்வையாளர்கள் விரும்புவதால் தான் இத்தகைய தொடர்ச்சியான திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. நுட்பமான மனித உளவியலையும், கலை சார்ந்த புதிய வடிவங்களையும் தேடி அடைந்து அவற்றை வணிக ரீதியிலும் வெற்றி பெற வைக்கும் புதிய வழங்குதிறன்களை நோக்கி நமது தமிழ்த் திரைப்படத்தின் இயக்குனர்கள் செல்லும் போதுதான் பார்வையாளனின் மனநிலையில் ஒரு குறிப்பிட்ட மாற்றத்தை உண்டாக்க முடியும், அண்மைக் காலங்களில் வந்திருக்கிற “அவள் பெயர் தமிழரசி”, “அங்காடித் தெரு” போன்ற திரைப்படங்கள் இத்தகைய மாற்றத்தைப் படைக்க விரும்புகிற சில இளம் தலைமுறை இயக்குனர்களை நமக்கு அடையாளம் காட்டினாலும், அவர்கள் செல்ல வேண்டிய பாதை இன்னும் வெகு தூரத்தில் இருப்பதாகவே தோன்றுகிறது.

2) பெண்களின் வாழ்க்கை நிலை குறித்த தொடர் புறக்கணிப்பு.

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் பெண்கள் என்கிற சொல்லாடலே முழுக்க ஒரு பண்டமாக்கப்பட்டிருக்கிறது, பெண்களின் உடலும் சரி, பெண்களின் உளவியலும் சரி ஒரு ஆணைச் சார்ந்து அல்லது ஒரு ஆணுக்காகவே இயங்குகிற நிலையில் நமது திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறது, பெண்களின் உளவியலை அல்லது பெண்களின் இயக்கத்தை நேர்மையாக சித்தரிக்க அல்லது முயற்சி செய்த ஒரு திரைப்படத்தைக் கூட அண்மைக்காலங்களில் நம்மால் கண்டறிய முடியாது. மிகப்பெரிய நடிகர்களால் கூட இருபத்தோராம் நூற்றாண்டில் “பொம்பளைன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும்” மாதிரியான வசனங்களை எந்தக் கூச்சமும் இன்றி வெள்ளித் திரைகளில் முழங்கி அதற்குக் கைதட்டலும் பெறுகிற ஒரு நிலையில் நமது தமிழ்த் திரைப்படங்கள் இருப்பது குறித்து நம்மில் யாருக்கும் அதிக அக்கறை இல்லை.ஏறத்தாழப் பெண்கள் “முதன்மை தலித்துக்கள்” என்கிற அளவில் நமது திரைப்படங்கள் நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருப்பது நமது சமூக வளர்ச்சிக்கு எந்த வகையில் பயனளிக்கப் போகிறது என்பது குறித்துத் துறைசார்ந்த அறிஞர்கள் சிந்திக்க வேண்டியது ஒரு மிகப்பெரிய தேவை மட்டுமன்றி அவசியமும் கூட.இந்திய சமூகத்தில் அல்லது தமிழ்ச் சமூகத்தின் பெண்களுடைய வாழ்க்கை முறை, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் அவர்கள் சந்திக்கிற இடர்ப்பாடுகள், கல்வி மற்றும் வளர்ப்பு முறைகளில் நிகழும் புறக்கணிப்பு, பாலியல் வழியாக ஏமாற்றப்படுகிற அவலங்கள், அவர்களின் அரசியல் குறித்த விழிப்புணர்வின்மை, இலக்கியம் அல்லது மற்ற கருத்துலக வரிசையில் நிகழ்கிற தொடர்ச்சியான ஆளுமை இழப்பு என்று பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் இன்னும் அப்படியே உறைந்து கிடக்கிறது.எல்லா அதிகாரமும் படைத்த ஒரு நாயகனின் கனவுகளுக்கு நீரூற்றி பாடல்களில் ஆடைக் குறைப்பை நிகழ்த்தும் நாயகிகளை மட்டுமே நமது திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கின்றன. அவற்றைத் தாண்டி இன்னும் ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் இது குறித்த பரவலான விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

Six

3) ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை குறித்த எதிர்மறைச் சித்தரிப்பு.

சமூகத்தின் இயக்கங்களையே எதிரொளிக்க வேண்டிய நிலையில் நமது திரைப்படங்கள் இருப்பதால் முற்று முதலாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை முறை பற்றிய ஒரு தவறான பிம்பத்தையே அவை உருவாக்கி இருக்கின்றன, பல்வேறு திரைப்படங்களில் தலித் மக்களின் உடல் அல்லது ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் ஒரு தியாகத்தின் சின்னமாகக் குறியீடு செய்யப்படுகிறது. அண்மைக்காலத் திரைப்படங்களில் வெற்றி அடைந்த மாற்றுச் சிந்தனைத் திரைப்படங்கள் என்று சொல்லப்படுகிற சில திரைப்படங்களை எடுத்துக்காட்டாகக் கொண்டால் “வெயில்”, “பருத்தி வீரன்”, “காதல்”, “வெண்ணிலா கபடிக் குழு” போன்ற திரைப்படங்களைச் சொல்லலாம். ஆயினும் இவை அனைத்திலும் ஒளிந்து கிடக்கிற சமூக மேலாதிக்கச் சிந்தனைகளை தோண்டிப் பார்க்கும் போது முன்னிலும் நாற்றமெடுக்கிற கருத்தியலையே நம்மால் பெற முடியும். ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனின் அனைத்து அசைவுகளும் தோல்வியை நோக்கிப் பயணப்படுவதாக எடுக்கப்பட்ட “வெயில்” திரைப்படம் ஒரு மேல்சாதிப் பெண்ணைக் காதலிப்பதால் நிகழ்கிற தலித் உடலின் மிகப்பெரிய தோல்வியாக முடிவுக்கு வருகிறது, உளவியல் வழியாக எந்த இடத்திலும் கலப்புத் திருமணம் நிகழ்ந்து வெற்றி பெறுகிற தலித் உடலைக் காட்டாமல் மேல்சாதிப் பெண்களைக் காதலிப்பதால் ஒரு தலித்துக்கு நிகழ்கிற அவலங்களை மட்டுமே காட்சிப்படுத்தித் தன்னளவில் சமூகத்தைக் கடக்க முடியாமல் தேங்கி விடுகிறது.

அண்மைக் காலங்களில் மிக மோசமாக வெளிக்கொணரப்பட்ட அடக்குமுறை வடிவத்தின் ஒரு திரைப்படம் எது? என்று என்னைக் கேட்டால் தயங்காமல் “காதல்” என்று சொல்வேன். ஒரு ஒடுக்கப்பட்ட தலித் உடல் “வெயில்” மாதிரியான ஒரு உயர் சாதிப் பெண்ணைக் காதலிப்பதால் நிகழும் சம்பவங்களின் தொகுப்பே “காதல்”, ஊரில் இருந்து துரத்தப்பட்டதில் இருந்து விரட்டி விரட்டி அடிக்கப்படும் தலித் உடல் இறுதியாக கல்லால் அடிக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்து வீதியில் அலையும் வரையில் காட்டப்படுகிறது, அது சொல்லாமல் சொல்லுகிற செய்தி, உயர் சாதிப் பெண்களைக் காதலிக்கிற தலித் உடலுக்கு என்ன நிகழும் என்பதே, சங்கர் என்கிற இயக்குனர் தொடர்ச்சியாகத் தனது திரைப்படங்களில் காட்டி வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்மம் தயாரிப்பு வரிசைக்கு மாறி இருப்பதைத் தவிர இந்தத் திரைப்படம் வேறு ஒரு மாற்றத்தையும் விரும்பவில்லை. இது ஒரு மறைமுகப் போர், தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சமூகம் சொல்ல நினைக்கிற செய்தி இந்தத் திரைப்படத்தின் மையக் கரு. “பருத்தி வீரன்” திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் கலப்புத் திருமணத்தால் தலித் உடலுக்கு நிகழ்கிற வன்முறையைச் சொல்கின்றன. “வெண்ணிலா கபடி குழு”வின் நாயகன் தனது அணியின் வெற்றிக்காக உயிரைக் கொடுத்து உழைக்கிற ஒரு தியாகியாக மாற்றப்படுகிறான். அவனது காதல் தியாகத்திற்குள் புதைக்கப்படுகிறது. இந்த வரிசையில் மாறுபட்டுச் சிந்தித்த “மதராசப்பட்டினம்”, “பேராண்மை” போன்ற சில திரைப்படங்களையும் நம்மால் அடையாளம் காண முடியும் என்றாலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை முறையைச் சொல்கிற அல்லது தலித் மக்களின் உடல் மற்றும் மனநிலையைச் சொல்கிற திரைப்படங்களை நாம் இன்னும் கண்டடையவில்லை என்பதே எஞ்சி இருக்கும் செய்தி.

Four

தலித் அரசியல் அல்லது தலித் இலக்கியங்கள் போலவே தலித் திரைப்படங்கள் என்ற வரிசையை நோக்கி நமது சமூகம் பயணம் செய்ய வேண்டிய தேவை வழியெங்கும் நிரம்பிக் கிடக்கிறது. வலியை அதைப் போக்கும் காரணிகளை உணர்ந்தவர்கள் சொல்லும் போது மட்டுமே ஒரு நம்பகத்தன்மையும், உயிரோட்டமும் இருக்கும் என்பது தான் கலையின் அடிப்படைக் கூறு. கலை இந்த சமூகத்தின் எஞ்சிய நினைவுகளைச் சுமந்து செல்கிற ஒரு ஊர்தி. அவற்றில் எவற்றை ஏற்றி நமது அடுத்த தலைமுறைக்கு அனுப்ப வேண்டும் என்பது ஒவ்வொரு சமூக அக்கறையுள்ள கலைஞனின் கடமையும் கூட. கலைஞர்களும், இளம் இயக்குனர்களும் நிறைந்து வழிகிற நமது சமூகத்தில் அவர்களின் திறனுக்கும், அறிவுக்கும் குறைவில்லை, அவர்களால் நமது சமூகத்திற்குப் பயனளிக்கக் கூடிய திரைப்படங்களை அல்லது கலையின் முழுப் பரிமாணத்தையும் பார்வையாளனுக்குக் கொடுக்கக் கூடிய திரைப்படங்களை உருவாக்க முடியும், நூற்றுக் கணக்கானவர்களை அடித்துத் துவைத்துப், பின் கணவனை இழந்த பெண்களின் சேலைகளில் வண்ணங்களை ஊற்றி, ஒடுக்கப்பட்ட மக்களின் உடலைக் கல்லால் அடித்து உங்களால் எடுக்கப்படும் திரைப்படங்கள் திரைப்பட வரலாற்றில் எதிர் மறையாக உங்களைப் பதிவு செய்வதைத் தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் இயக்குனர்களே தொடர்ந்து நீங்கள் அப்படியே செய்யுங்கள், நமது குழந்தைகளும், இளைஞர்களும் நடிகர்களின் புகைப்படங்களுக்குப் பாலூற்றிக் கொண்டே மனநிலை பிறழ்ந்து வீதிகளில் அலையட்டும்.

Seven

**********

 


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்