கை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 23, 2013

காலம் என்கிற நினைவுக் குப்பை.

Elemts of Life (1)

நாறுது இப்பிடி திடுதிப்புன்னு ஒருநாள் வருவான்னு நான் நெனக்கவே இல்லை, அதுவும் ஒரு நீலச் சிகப்பு டப்பா மாதிரி பெங்களுர் சாலைகளில் நகர்ந்து கொண்டிருந்த ஒரு வோல்வோ பஸ்சுக்குள்ள வச்சு அவனப் பாக்குறது என்னோட பழைய கனவுகளில் கூட இல்லாமத் தான் இருந்துச்சு, மொதல்ல குறு குறுன்னு பாத்தான், எனக்கு சுத்தமா அடையாளம் தெரியல, பய என்னையக் கண்டு புடிச்சுட்டான் போல இருந்துச்சு, நாம்பாக்கும் போதும் பய திரும்பவே இல்ல, மொறச்சுப் பாத்தான்.

"இவன் அவனா இருக்குமோ?"ன்னு கூட எனக்குக் கொஞ்சம் சந்தேகம் வந்துருச்சு, பஸ்ல பெரிய கூட்டம் கெடையாது, இப்புடியே ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆடுனா ஸ்டாப் வந்ததும் இறங்கிப் போக வேண்டியது தான். கொஞ்சம் துணிச்சலா பக்கத்துல போனேன்,

"நீங்க யாரு?", ரொம்ப நேரமா என்னையவே பாக்குறீங்க, அதான் கேக்கலாம்னு"

என்றவுடன் பயல் கண்களில் அசாத்திய வெளிச்சம் வந்தது.

"டேய் நீ அறிவழகன் தானே?", "நாந்தாண்டா சுந்தரு, எட்டாவதுல வந்து போலீஸ் காலனில இருந்து வந்து பாதில சேந்து படிச்சேன்ல".

ஆஹா, நம்ம நாறுது, ஊதா டவுசரும், பச்சை கேம்லின் பேனாவும் பசக்குன்னு பக்கத்துல வந்து உக்காந்த மாதிரி ஒரு சுகம்.

"டேய் நாறுது"ன்னு கூப்பிடப் போய், படக்குன்னு வாய மூடிக்கிட்டேன்,

"என்னமா வளந்து, திண்டுக் கல்லு மாதிரி இருக்குற நண்பனப் போயி பழைய வகுப்புப் பட்டப் பேரச் சொல்லி கூப்பிடுறது என்ன நியாயம்,

"டேய் சுந்தரு நல்லா இருக்கியா, அப்பா, அம்மாவெல்லாம் எப்படி இருக்காங்க?"

வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப் பிறகு லேசாகத் தலையைத் தடவிப் பார்த்துக் கொண்டேன்.

"என்ன அறிவு, ஸ்டீபன் சார் கிட்ட வாங்குன கொட்டு நியாவுகம் வந்துருச்சா?" சுந்தர் சிரித்தபடி கேட்டான்.

வெகு தூரத்தில் வாழ்க்கை என்கிற சமுத்திரத்தின் அலைகளால் அடித்துக் கரைக்குத் தள்ளப்பட்ட அழிக்க முடியாத குப்பையைப் போல கிடந்த எட்டாங்க்லாஸ் நினைவுகள் கண்டம் தாண்டிப் பறக்கும் கீழை நாட்டுப் பறவையைப் போல வோல்வோவுக்குள் கிடந்து சிறகடித்தது.

திடீர்னு ஒருநாள் காலைல இவன் வந்து சேந்தான், அரப் பரீட்சை வர இன்னும் ரெண்டு வாரந்தான் இருந்துச்சு, எல்லாருக்கும் ஒரே ஆச்சரியம், "என்னடா செட்டிநாட்டுக்கு வந்த சோதன", "யாருடா இவன் ஸ்பெஷல் ஆளா இருப்பான் போல தெரியுது".

மெல்லப் பக்கத்துல போயி உக்காந்து, "பேரு என்னப்பு?" என்ற போது ஒழுங்கா சொல்லியிருந்தா வம்பே கிடையாது, நார்த் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் மகன் சுந்தர்ன்னு உதார் விட்டான் பயல், பழைய கேடிகளான எங்களுக்கு பொறுக்குமா, விக்டரு பய, அண்ணாதொரை, மணிப்பய எல்லாரும் சேந்து மத்தியானம் ஒரு அவசரக் கூட்டம் போட்டோம், "டேய் பயலுக்கு ஒரு நல்ல பேரா வக்கனும்டா", ஆளாளுக்கு ஒரு பேர் சொன்னார்கள், கடைசியில் உக்கிரமா அவன் சொன்ன அந்த உதாரையும் நொறுக்கனும்னு நாறுதுன்னு நானே ஒரு பெயர முன்மொழிஞ்சேன்.

images

மத்தியானம் மொதப் பீரியட்ல போய் பக்கத்துல உக்காந்து 

"டேய் நாறுதுடா, நாறுதுடா, இவன் பேரு நாறுது சுந்தருடா"

என்று அவனைக் கோட்டாப் பண்ணவும் பய கொஞ்சம் மெரண்டு போய்ட்டான், மொத நாளே வகுப்புல அவமானம் சுமந்தா யாருக்கும் கோவம் வராதா என்ன? பய நேரா வீட்டுல போயி அவுக அப்பாகிட்டப் போட்டு விட்டுட்டான், வழக்கம் போல சிரிப்பும் பாட்டுமா நாட்டான் கம்மாய்க் கரைல போயித் தண்ணி பாம்பெல்லாம் கல்ல வுட்டு எரிஞ்சுட்டு, பிரேயர் முடிஞ்சு கிளாஸுக்கு போகும் போது திரும்பி எதேச்சையாப் பாத்தா நாறுது என்கிற சுந்தரும் அவுங்க அப்பா நார்த் போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டரும்  ஹெட் மாஸ்டர் ரூமுக்கு முன்னாடி நிக்கிறாக.

அப்பிடியே கொல நடுங்கிப் போச்சு, நல்லாத் தானே போய்க்கிட்டு இருந்துச்சுன்னு நினைச்சுகிட்டே மெதுவா கிளாஸ் ரூமுக்குள்ள போயி உக்காந்தா பயலுக என்னவோ என்னையப் புதுசா இன்னைக்குத்தான் பாக்குற மாதிரியும், ஒண்ணுமே தெரியாத நல்லவங்கே மாதிரியும் "கொன்றை வேந்தன்" படிக்கிறாங்கே. "மாட்னடா மகனே" என்று மனசுக்குள் சொல்லியபடி வாசலையே பாக்க ஆரம்பிச்சேன், சரியா அஞ்சாறு நிமிசத்துல மணி அடிக்கிற ஆறுமக அண்ணன் வந்து "அறிவழகா, ஹெட் மாஸ்டர் ஐயா கூப்புடுறாங்க". ரஸ்தா பஞ்சு மில்லு சங்கு ஊன்ன்னு காதுக்குள கேட்டுச்சு.

ஹெட் மாஸ்டர், ரபேல் சாரு பத்தாதுன்னு அந்த சப் இன்ஸ்பெக்டரும் சேந்து காச்சி எடுக்குறாங்கே, நாலஞ்சு பேரு சேந்து திட்டுனா ஒரு அனுகூலம், எவஞ் சொல்றதும் சரியாக் கேக்காது, அதே ஒரு ஆளு திட்டுனா ரொம்பா நாளைக்குக் காதுல கேட்டுக்கிட்டே இருக்கும். காதை எல்லாம் புடிச்சுத் திருகுறாங்கே.

நல்ல வேல எவனும் அடிக்கலன்னு, திரும்பி கிளாஸ்ல வந்து உக்காந்தா, புடிச்ச சனி இப்போதைக்கு விடாதுங்குற மாதிரி ஹெட் மாஸ்டர் உள்ளே நுழைஞ்சு "வாடா, இங்கே"ன்னாரு, கண்ணெல்லாம் சிவந்து கிளி கடிச்ச கோவைப் பழம் மாதிரி இருந்துச்சு, அனேகமா, சப் இன்ஸ்பெக்டரைப் பாத்து அவரும் என்னைய மாதிரியே பயந்திருப்பார் போல. உள்ள ஊறிப் போயி ரொம்ப நாளாக்  கெடக்குற ஊமைக் குசும்பன் அந்த நேரத்துலயும் கெடந்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறான். உருட்டுக் கம்பை எடுத்து தடவியபடி ஸ்டீபன் சார் பீ எஸ் வீரப்பா மாதிரிக் கர்ஜனை செய்யுறாரு. பக்கத்துல போயி நின்னேன்,

"இந்தக் கம்புல பத்து அடி வாங்குறியா, இல்ல, பயலுகள விட்டுக் கொட்டச் சொல்லவா" ன்னு என்னமோ சுட்ட பழம் வேணுமா சுடாத பழம் வேணுமான்னு ஒவ்வையார்கிட்ட முருகப் பெருமான் கேட்ட மாதிரிக் கேக்குறாரு. இவருகிட்ட அடி வாங்குரதுக்குப் பதிலா, பயலுக கிட்டக் கொட்டு வாங்கிரலாம்னு முடிவு பண்ணி மொழங்கால் போட்டாச்சு, மொதப் பெஞ்சுக் காரங்கே பயந்தாங்கொல்லிப் பயலுக, மொள்ளமா தடவிக் குடுத்துட்டுப் போயிட்டாங்கே, ரெண்டாவது, மூணாவது பெஞ்சுக் காரங்கே கொட்ட ஆரம்பிக்கும் போது தான் "ஆகா, நம்ம முடிவு ரொம்பத் தப்பானதுன்னு தோணிச்சு, கைல எச்சி எல்லாம் வச்சுப் போட்டுத் தள்றாங்கே, எங்கிட்ட கொடுக்காப்புளி பறி கொடுத்த முனீஸ்வரன், ஸ்டெட்ளர்  ரப்பர இழந்த மாலிக்கு, அன்பரசிப் புள்ளையோட அத்தை மவன் பாரதி எல்லாரும் சேந்து பழுக்கக் காச்சி எடுத்துட்டங்கே மண்டைய.

காலம் உருண்டோட நாறுது என்கிற சுந்தர் என்னோட பத்தாவது வரைக்கும் ஒண்ணாப் படிச்சான், இடைப்பட்ட காலத்தில் சப் இன்ஸ்பெக்டரும், அவரது குடும்பமும் என்னோட இன்னொரு குடும்பம் போலானார்கள். அந்த சுந்தர் தான் இப்புடி திடு திப்புன்னு வந்து பெங்களுர் பஸ்ல நிக்கிறான், இவ்வளவு நாள் எங்கே போனான், இடையில் எத்தனை நாள் சூரியன் உதிச்சுச்சு, மழை வந்துச்சுன்னு எங்க ரெண்டு பேருகிட்டயும் கணக்கு இல்ல.

images (1)

"சுந்தரு, கல்யாணம் ஆயிருச்சா, எத்தனை குழந்தைங்க?" 

கேட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன், அந்தக் கேள்வியை நான் கேட்டிருக்கக் கூடாது, உடனடியான பதில் அவனிடத்தில் இருந்து வரவில்லை, "கல்யாணம் ஆச்சு அறிவழகா. பத்து வருசம் ஆச்சு,கொழந்த இல்ல, பொண்டாட்டியும் சேந்து வாழப் புடிக்காம அம்மா வீட்டுக்குப் போயிருச்சு, அப்பா, ஹார்ட் அட்டாக்ல விழுந்து வீ ஆர் எஸ் வாங்கிட்டாரு, அம்மாவுக்கும் ஒடம்பு முன்ன மாதிரி இல்லடா", என்று மெல்ல பேச்சின் திசையை மாற்றினான் சுந்தர்.

பிறகு என்ன நினைத்தானோ தெரியாது, தனது திருமண வாழ்க்கையின் தோல்வி குறித்து நீண்ட நேரம் பேசினான் சுந்தர், வழக்கமாக சுமைகளைப் பகிரும் எந்த மனிதருக்கும் ஆறுதல் சொல்லும் என்னிடம் சொற்கள் பஞ்சமாகிப் போயின. நான் ஒரு நீண்ட மௌனத்தின் நீர்க்குமிழ்களில் மூழ்கி விட்டிருந்தேன். எவ்வளவு நெருங்கின ஆட்களா இருந்தாலும் சொந்த வாழ்க்கை குறித்த கேள்விகளை இனிமேல் நாமாகக் கேட்கக் கூடாது என்று மனதுக்குள் குறிப்பெடுத்துக் கொண்டேன். மஜெஸ்டிக் பஸ் ஸ்டாண்டில் இறங்கினோம்.

"உனக்கு எத்தனை குழந்தைங்க அறிவழகா, என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" என்கிற சுந்தரின் கேள்விக்கு நான் "வா, சுந்தர், எதாச்சும் சாப்பிடுவோம்" என்று பதில் சொன்னேன்.

"இல்லடா, நான் ஒரு அவசர வேலையா கே.ஆர் புரம் போகணும். அங்கே தங்கச்சி வீட்டு நெலம் ஒன்னு இருக்கு, விக்கிற விஷயமா ஒரு பார்ட்டியப் பாக்கணும். அடிக்கடி வருவேண்டா, ஒருநாள் வீட்டுக்கு வறேன்". விடை பெற்று மாநகரின் நெரிசலில் இன்னொரு மனிதனாய் கரைகிறான் நாறுது என்கிற சுந்தர். "கல்யாணம் ஒரு நரக  வேதன அறிவு" கடைசியா சுந்தர் சொல்லி விட்டுப் போனான்.

"பாணி தா ரங்கு வேக்குக்கே" அலைபேசி ஒலிக்கிறது.  ஊரிலிருந்து மனைவி…….

எடுத்துக் காதில் பொருத்தினால், "அப்ப்ப்ப்பாபாபாபா" – நிறைமொழி.

"என்னம்மா"

"நாங்க கல்யாணத்துக்கு வந்திருக்கோம்" பின்புலத்தில் ஒலிபெருக்கிப் பாடல்கள் இரைகிறது.

"அப்பிடியா, எந்தக் கல்யாணம்"

"அதாம்பா, கல்யாணம்"

"அதான்மா, எந்தக் கல்யாணம்"

"ஐயோ, மேல பாட்டுக் கேக்குதா?"

"ஆமா"

"அதான், கல்யாணம்"

"அப்பிடியா,சரிம்மா"

"போட்டா எல்லாம் எடுக்கிறாங்க இங்க"

"சரிம்மா"

"ஒங்களுக்கு எப்பப்பா கல்யாணம் நடக்கும்"

"அம்மாகிட்டக் கேளும்மா"

ஸ்பீக்கரில் போட்டிருப்பார்கள் போல மொபைலை, "வாய மூடிட்டுக் போன குடு வாயாடி" என்கிற மனைவியின் குரல் மஜெஸ்டிக் பேருந்து நிலையத்தை வந்தடைகிறது.

images (2)

மாலையின் சுவடுகள் வனத்தில் மங்கலாய்த் தெரிகிறது, ஒரு நின்று கொண்டிருக்கிற பேருந்தின் பின்புறக் கண்ணாடிகளின் வழியாக தேய்ந்து மங்கிய நிலவு கண்களில் படுகிறது, ஒரு கிழவனும், கிழவியும் நெருக்கமாக அமர்ந்து சீப்பு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சீவி இருந்த முடியைக் கலைத்து விட்டபடி வேகமாய்ப் போகிறான் வால் பொருந்திய பையைத் தூக்கியபடி ஒரு மாணவன், கலகலவென்று சிரித்தபடி கூட்டமாய் சுகந்தமான வாசனையோடு கண்களைக் கவர்கிறார்கள் பெண்கள்.

மனித மனங்களில் இருந்து ஒய்யாரமாய்க் குதித்து வாழ்க்கை பேருந்து நிலையத்தின் பிளாட்பாரங்களில் ஒரு அனாதைக் குழந்தையைப் போல இங்குமங்குமாய் அலைகிறது. டவுசரின் நடுவில் நூல் பிரிந்திருந்த கவலைகளைத் தவிர வேறெந்தக் கவலையும் இல்லாத ஒரு நாளின் வகுப்பறையில் நானும் சுந்தரும் தொடர்ந்து படித்திருக்கலாம் போல இருந்தது. மனசென்கிற ஒரு முரட்டு முதலாளியை உப்பு மூட்டை தூக்கியபடி உடல் என்கிற காலத்தின் அடிமை வலியோடு நடந்து போவதைப் பார்க்க முடிந்தது. எனக்கென்ன கவலை என்றபடி இருட்டு வெளியை நிரப்பி வெளிச்சத்தை விரட்டுகிறது.

**********


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்