கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 12, 2010

“அங்கோர்வாட்” – ஒரு கனவின் பயணம்.

ANGKOR-WAT23

வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் ஒரு பயணம் மீதம் இருக்கிறது, பயணங்களை நான் நேசிக்கிறேன், பயணங்கள் புதிய மனிதர்களை, புதிய உயிர்களை, புதிய நிலப்பரப்புக்களை, புதிய பொருட்களை நமக்கு அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது, உறவுகளைத் தேடிய பயணங்கள், பொருளைத் தேடிய பயணங்கள் என்று நமது வாழ்க்கையில் முடிவுறாத தண்டவாளங்களைப் போலப் அவை நம்மைத் தொடர்ந்து வருகின்றன. பேருந்துகள் இல்லாத காலத்தில் பயணித்த மாட்டு வண்டிப் பயணம் இன்னும் எனது நினைவுகளோடு பயணிக்கிறது. முதல் மிதிவண்டிப் பயணம், முதல் ரயில் பயணம், முதல் விமானப் பயணம் இவை எல்லாம் ஒரு நேரத்தில் எனக்குள் கனவுப் பயணமாக இருந்து உயிர் பெற்றவை.

சில காலங்களுக்கு முன்னாள், ஒரு செய்திப் படம் பார்த்தேன், அது ஒரு கோவிலைப் பற்றிய பி.பி.சி யின் செய்திப் படம், ஏதோ ஒன்றைத் தேடும் போது கிடைத்த செய்திப் படம் அது, அந்தக் கோவில் அங்கோர்வாட் கோவிலைப் பற்றியது, கம்போடியா நாட்டின் அங்கோர் என்ற இடத்தில கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவில் பயணம் குறித்த கனவுகளை எனக்குள் எப்போதும் அழியாமல் வைத்திருக்கிறது, பல நாட்கள் என் கனவுகளை அங்கோர்வாட் கோவில் ஆட்கொண்டிருக்கிறது, அந்தக் கோவிலைச் சுற்றி இருக்கும் ஏரிகளில் படகுப் பயணம் செய்து நான் அங்கு செல்வது போலவும், அந்தக் கோவிலைச் சுற்றி இருக்கும் காடுகளில் நான் தனித்து அலைவதைப் போலவும் காட்சிகள் விரியும், அது என்னுடைய ஆழமான மன விருப்பின் காரணமாக நிகழ்கிற ஒரு அனிச்சைச் செயல் என்பதை நான் அறிவேன், இருப்பினும் அங்கோர்வாட்டின் பிரம்மாண்டமான கட்டிடங்களும், சுற்றுச் சுவர்களும், காடுகளுக்கு நடுவில் உயர்ந்து வளர்ந்து கிடக்கும் உயரமான கோபுரமும் ஒரு விதமான நடுக்கத்தை உருவாக்கி சில நாள் உறக்கத்தையும் கூட விழுங்கி இருக்கிறது.

ஒரு மாலை நேரத்தில் நான் வீட்டில் இருந்து விடை பெறுகிறேன், பல நாள் பயணம் செய்து அங்கோர் நகரின் காடுகளுக்குள் நுழைகிறேன், அது ஒரு முழு நிலவு நாள், நிலவு மரங்களுக்குள் சில நேரங்களில் ஒளிந்து கொள்கிறது, சுற்றிலும் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு செயற்கை அகழி சதுர வடிவத்தில் நீண்டு கிடக்கிறது, கரைகளில் கற்களால் கட்டப்பட்ட சில படிக்கட்டுகள், அரிதாகத் தென்படும் படகுகள், படிக்கட்டுகளில் தெளிந்த அகழி நீர் தனது அலைகளால் நிலவைத் தாலாட்டுகிறது, கணுக்கால் நனைய அகழி நீரின் அழகை ரசிக்க முடியும், தெளிந்த நீரின் உள்ளோடும் கெழுத்தி மீன்கள், சில நேரங்களில் துள்ளிக் குதித்து நீரைத் தெளிக்கும், அந்த அகழி முழுவதும் சின்னச் சின்னச் சதுரக் கற்கள் பதித்துக் கட்டப்பட்ட குழிகள் இருக்கிறது, அருகில் இருக்கும் குழிகளில் ஒன்று தெளிவாக என் கண்களுக்குத் தெரிகிறது, கைகளால் அதைத் தொட்டு விட முடியும் என்று நம்பி குனிந்து நீருக்குள் கைவிடும் பொழுதில் ஆழம் அதிகமாய் இருப்பதை என்னால் உணர முடிகிறது, அடுத்த சதுரக் கல் கட்டுமானத்தில் ஒரு கூம்பு வடிவம் துருத்திக் கொண்டிருக்கிறது, அது “சிவலிங்கம்” என்று சொல்லப்படுவதை என்னால் நம்ப முடியவில்லை, அகழிக்குள் கட்டப்பட்டிருக்கும் அந்த வடிவங்கள் வேறு ஏதோ ஒரு நோக்கிற்காகக் கட்டப்பட்டிருப்பதாக என் அறிவியல் மனம் சொல்கிறது.

 

 

Angkor_Wat

அகழியை பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த படிக்கரையில் நிழலாடுகிறது, ஒரு பௌத்தத் துறவி குளித்துக் கரையேறுகிறார், மெல்ல நடந்து அவரிடம் செல்கிறேன் நான். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார், அந்தப் புன்னகை என்னிடம் ஏதோ சொல்ல முயல்கிறது, தொலைவில் தெரியும் அங்கோர் வாட்டின் உயர் கோபுரத்தைக் காட்டி எப்படிச் செல்வது? என்று நான் அவரிடம் கேட்கிறேன், தன்னைப் பின் தொடருமாறு என்னிடம் சைகை காட்டி விட்டு அவர் முன்னே நடக்கிறார், முதலாளியின் பின்னால் நடக்கும் ஒரு நாய்க்குட்டியைப் போல எனது மனம் அவர் பின்னே பயணம் செய்கிறது, அவர் ஒரு குடிலுக்கு என்னை அழைத்துச் செல்கிறார், அந்தக் குடிலில் அவரைப் போலவே இன்னும் சிலர் அமர்ந்து இருக்கிறார்கள், அங்கிருக்கும் ஒரு மரக்கட்டிலில் என்னை அவர் அமரச் சொல்கிறார், இன்னொரு துறவி என்னருகில் வந்து புன்னகைக்கிறார், பதிலுக்கு நானும் புன்னகைக்கிறேன். தேங்காய் கலந்த அவித்த பயறு நிரம்பிய தட்டொன்றை என் கைகளில் தருகிறார் அந்த இளம் துறவி, என் பசியை அவர் எப்படி இனம் கண்டு கொண்டார் என்பது எனக்குத் தெரியாது, ஆயினும் அந்த உணவு சுவை நிரம்பியதாகவும், என் பயணக் களைப்பைப் போக்குவதாகவும் இருக்கிறது. உரையாடுவதற்கு உண்டான எந்த அறிகுறியும், காரணிகளும் என் கனவில் இருக்கவில்லை. நான் உறங்கத் துவங்குகிறேன்.

மறுநாள் அதிகாலைப் பொழுதில் நான் கண் விழிக்கிறேன், இருட்டு இன்னும் விடை பெற்றிருக்கவில்லை, ஆயினும் விடியலுக்கான அத்தனை சமிக்ஞைகளும் அந்தக் காட்டின் நடுவே புலப்படுகிறது, உயரமான நீள் கழுத்துப் பறவைகள் சிலவற்றை மரங்களில் என்னால் காண முடிகிறது, அவை நான் கேட்டுப் பழகி இருக்காத மாறுபட்ட குரலில் சத்தமிடுகின்றன.சில்வண்டுகளின் கீச்சிடும் ஒலியும், சில குயில்களின் குரலும் கொஞ்சம் அச்சத்தைப் போக்குகின்றன. துறவிகள் எனக்கு முன்னாள் எழுந்து குடிலின் வாசலில் நெருப்பு மூட்டிக் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களில் இருவர் தொலைவில் இருக்கும் படித்துறையில் குளித்துக் கொண்டிருக்க வேண்டும், அவர்கள் அங்கோர்வாட் கோவிலுக்கு என்னை அழைத்துச் செல்பவர்கள், என்னுடைய வழிகாட்டிகள். அந்தக் குளிர் பனிக் காலையில் அப்படி ஒரு அகழி நீரில் குளிப்பது முன்னெப்போதும் இல்லாத ஒரு முழுமையான குளியலாக இருந்ததை நான் சொல்ல வேண்டியதில்லை.

rtwbackwards07_1205376900_inside-angkor-wat

நாங்கள் அனைவரும் தயாராகி விட்டோம், என்னுடைய கனவின் முழுப் பரிமாணமும் எனக்குக் கிடைக்கப் போகிற ஒரு பயணம் அது, நான் அந்த அதிகாலையில் அங்கோர்வாட் கோபுரங்களைப் பார்க்கிறேன், அதிகாலை வெளிச்சத்தில் மங்கலாய்த் தெரிந்தாலும் அதன் பிரம்மாண்டம் மனிதர்களைத் தன்னிடத்தில் ஈர்த்துக் கொள்ளும் அளவுக்கு இன்னும் வலிமையுடையதாய் இருக்கிறது. வழக்கமான சாலைப் பாதையில் எண்கள் பயணம் இன்றி அகழியின் ஊடாகப் படகில் நிகழ்கிறது, சலனமற்று இருக்கும் அகழி நீரில் பிளவுகளை உண்டாக்கியவாறு பயணிக்கும் படகின் ஓசையைத் தவிர வேறு ஓசைகள் இல்லாத உலகம் அது. அவ்வப்போது குறுக்கிடும் சில தாமரை மலர்கள், அளவில் பெரியதாக இருக்கிறது, படகின் ஒரு முனையில் அமர்ந்து பயணம் செய்கையில் கைக்கு எட்டி விடும் தூரத்தில் நீர். கைகளை நனைத்துக் கொண்டே துறவிகளோடு பயணம் செய்து கரையை அடைகிறோம் நாங்கள், கரை சேறு நிரம்பியதாய் இருக்கிறது, சிவப்பு நிற மண்ணில் பொதிந்து இருக்கும் அங்கோர்வாட் கோவில் வளாகத்தில் என் கால்கள் முதல் முறையாய்ப் படுகின்றன.அது ஒரு அளப்பரிய மகிழ்ச்சியை எனக்கு வழங்குகிறது, அகழிக்கு உள்ளே காணப்பட்ட சதுரக் கல் திண்டுகளைப் போலவே அகழிக்கு வெளியே இருக்கும் ஒரு திண்டில் சேறு படிந்திருக்கும் எனது கால்களைக் கழுவிக் கொள்ளுமாறு துறவி கைகாட்டுகிறார். நானும் அப்படியே செய்கிறேன்.

கதிரவன் எழும்பி மேலே வருகிறான், கண்களுக்கு எதிரே கற்களால் கட்டப்பட்ட உயரமான படிக்கட்டுகள் மஞ்சள் வண்ணத்தில் பளிச்சிடுகின்றன, இருமுனைகளிலும் உறுமும் சிங்கங்கள் கைப்பிடிச் சுவராக நின்று கொண்டிருக்கின்றன. சிங்கங்களின் பற்களைத் தடவிப் பார்த்தவாறே நானும் துறவிகளும் படிகளில் ஏறுகிறோம், ஒரு உயரமான கடைசிப் படிக்கட்டுகளில் நின்ற போது அங்கோர்வாட் என்னும் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்ட அந்தக் கோவிலின் முழு வடிவமும் கண்களில் உறைகிறது, அடுக்கடுக்கான சுற்றுச் சுவர்கள் நிரம்பிய கோபுரங்கள், இடையிடைத் தென்படும் மனித முக வடிவிலான கற்கள், நீண்ட சுற்று வெளி ஒன்று என்று கண்களால் காண இயலாத வண்ணம் அந்தக் கோவில் நிரம்பி வழிகிறது. சுற்றி இருக்கும் அகழியின் கோபுரங்கள் பட்டு எதிரொலிக்கும் அந்தத் தருணம் மிக அற்புதமானது. மனிதர்களால் கட்டப்பட்ட ஒரு மிகப் பெரிய வியப்பு இந்தக் கோவில். படங்களில் பார்த்திருக்கிற பிரமிடு போலத் தோற்றமளிக்கும் அங்கோர்வாட் எனக்கு மிக அருகில் விரிந்து கிடக்கிறது.

Inside_Angkor_Wat_Siem_Reap_Cambodia

துறவிகளின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை, அவர்கள் தினந்தோறும் பார்த்துப் பழகி இருப்பதால் கிடைத்த முழுமையாய் இருக்கலாம். என்னுடைய ஆர்வமோ அளவின்றிப் பெருகிக் கிடக்கிறது, நான் என்னுடைய நடக்கும் வேகத்தை அதிகப் படுத்துகிறேன். துறவிகளில் ஒருவர் என்னைப் பார்த்துச் சிரிக்கிறார். அந்தச் சிரிப்பில் ஒரு ஒப்புதல் கிடைக்கிறது, நான் முன்னதாக நடக்கத் துவங்குகிறேன். ஐந்து நிமிட நடையில் கோவிலின் முகப்பை அடைகிறேன் நான். கருமையும், வெள்ளையும் கலந்து கிடக்கும் அதன் பழமையான கட்டுக் கற்களை வருடிப் பார்க்கிறேன். சூரியவர்மனின் உடலைத் தொட்டுத் தழுவியது போன்ற ஒரு மலர்ச்சி என்னிடத்தில் பெருகி வழிகிறது. அந்த மன்னன் எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்ற பொருள் நிரம்பிய மன்னனாக இருப்பினும் இந்தக் கோவிலை இத்தனை பிரம்மாண்டமாக ஒரு காட்டுக்குள் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏன் அவனுக்கு மட்டும் வர வேண்டும்? என்கிற கேள்வி எனக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. துறவிகள் வரும் வரை காத்திருக்கிறேன், காத்திருப்பில் எல்லாத் திசைகளிலும் திரும்பித் திரும்பி அந்தக் கோவிலின் பிரம்மாண்டம் முழுவதையும் உள்வாங்கிக் கொள்ள விழைகிறேன்.

துறவிகள் வந்த பிறகு, என்னை முக்கிய நுழைவாயிலின் வழியாக அழைத்துச் செல்கிறார்கள், நாங்கள் ஒரு மிகப் பெரிய மண்டபத்துக்குள் நுழைகிறோம், அந்த மண்டபத்தின் கூரைகள் மனிதர்களால் தொட முடியாத உயரத்தில் இருக்கிறது, ஆயினும் மனிதர்கள் தான் இதனைக் கட்டி எழுப்பி இருக்கிறார்கள் என்பதை நான் உணர்கிறேன், இதனைக் கட்டிய மனிதர்கள் அப்போது என்ன செய்து கொண்டிருந்தார்கள், அவர்கள் என்ன சாப்பிட்டார்கள், அவர்களின் கூலி என்ன? இவை அந்த நேரத்தில் தேவையற்ற கேள்விகளாக இருப்பினும் எனக்குள் விடை தேடி அலைகின்றன. அந்த மண்டபத்தின் சுவர்களில் பல ஓவியங்கள் நிறைந்து கிடக்கின்றன, அந்த ஓவியங்களை எத்தனை சிற்பிகள் வடித்திருப்பார்கள்? சிற்பிகள் இவற்றை வடிக்கும் பொது சூரியவர்மன் அந்த இடத்தில இருந்தானா? அவர்களில் யாரையேனும் பாராட்டி இருப்பானா? பரிசு கொடுத்திருப்பானா?

sunrise-angkor-wat-500

அந்த உயர்ந்த மண்டபத்தைச் சுற்றி முடிக்கவே ஒரு நாள் பிடிக்கும் போலிருந்தது, இருப்பினும் அவசரம் அவசரமாக நான் சுற்றி வருகிறேன், துறவிகள் நின்று என்னை வேடிக்கை பார்க்கிறார்கள், என்னைப் போலவே சில மனிதர்கள் அவ்வப்போது குறுக்கிடுகிறார்கள், அவர்கள் ஏதோ ஒரு புரியாத மொழியில் பேசிக் கொள்கிறார்கள், ஆயினும், அவர்களும் என்னைப் போலவே இந்தக் கோவிலின் பிரம்மாண்டத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள் என்பது மட்டும் அவர்களின் கண்களில் தெரிகிறது. நான் துறவிகளை நெருங்குகிறேன், அவர்கள் மீண்டும் நடக்கத் துவங்குகிறார்கள், மீண்டும் உயரமான படிக்கட்டுகள் ஏறி ஒரு சுற்று வெளிக்கு வருகிறோம் நாங்கள், அந்தச் சுற்று வெளி மிகப் பெரியதாகவும், மறுமுனையில் என்ன இருக்கிறது என்பது தெரியாத அளவுக்கு நீளமானதாகவும் இருக்கிறது, அந்தச் சுற்று வெளியில் அவ்வப்போது இடைவெளிகளில் தென்படுகிற சூரிய ஒளியைத் தவிர வேறு ஒளி ஏதும் இல்லாததால் இருட்டு என்னைப் பின்தொடர்ந்து வருவது போலவே இருக்கிறது, இரண்டு பக்கங்களிலும் எண்ணற்ற ஓவியங்கள், கல்லில் வடிக்கப்பட்ட சிற்பங்கள், புராணக் கதைகளைச் சொல்லும் ஓவியங்களின் நுட்பத்தை ஆய்வு செய்தால் ஒரு மாத காலத்திற்கு மேலாக அந்தச் சுற்று மணடபத்தில் தங்கி இருக்க வேண்டும். மனிதர்கள் அற்ற அந்தச் சுற்று வெளியில் எப்போதாவது மனிதர்கள் நிறைந்து இருந்திருப்பார்களா? அங்கே ஏதேனும் விழாக்கள் நிகழ்ந்திருக்குமா?

 

 

பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த துறவிகள் என்னை அழைக்கிறார்கள், வேறு ஒரு இடை வழியில் அவர்கள் பயணப்பட வேண்டும் என்பது அவர்களின் திட்டமாக இருக்க வேண்டும், திரும்பி வந்து அவர்களோடு சேர்ந்து கொள்கிறேன். சில இருட்டறைகளைக் கடந்து மீண்டும் ஒரு சுற்று வெளி வருகிறது, ஆனால், இந்தச் சுற்று வெளி உயரத்தில் இருக்கிறது, நீண்ட படிகளில் ஏறி அந்தச் சுற்றி அடைகிறார்கள் துறவிகள், ஒரு நெருக்கமான குறுகிய அறையைக் கடந்ததும் அந்த அதிசயம் நிகழ்கிறது, அங்கோர்வாட்டின் உயரமான கோபுரத்தின் குடைவறையில் நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம், மொத்த மண்டபத்திற்கும் கோபுரத்திற்கும் கொடுக்கப்பட்ட ஒரு இடைவெளி தெரிகிறது, அந்த இடைவெளியில் நிமிர்ந்து பார்க்க முடியாத உயரத்தில் கோபுரத்தின் உச்சி. அதன் அருகே சிறு எறும்புகளைப் போல நானும் துறவிகளும் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு சிறுவன் என்னைக் கடந்து போகிறான், அவன் சட்டை ஏதும் அணிந்திருக்கவில்லை, அவன் உடலில் ஒரு அளவுக்கு மீறிய உறுதியும், கண்களில் ஒளியும் தெரிகிறது, அது யாரையும் பின்தொடராத ஒரு மன உறுதி, ஒரு வலிமையான மிகப் பெரிய கட்டிடத்தின் சொந்தக்காரன் போன்ற கர்வம் அவன் கண்களில் தெரிகிறது.

819295978_1039f6e460_b

துறவிகள் இடைவெளியைக் கடந்து ஒரு இறுக்கமான உள்ளறையை அடைகிறார்கள், அங்கே புத்தரின் மிகப்பெரிய உருவச் சிலை ஒன்று கம்பீரமாக வீற்றிருக்கிறது, அது உலோகத்தால் செய்யப்பட்டது, மிக நுட்பமான கலைஞன் ஒருவனால் அது உருவாக்கப் பட்டிருக்க வேண்டும். துறவிகள் அந்தச் சிலையில் கீழே அமர்கிறார்கள். நானும் அவர்களுக்கு அருகில் அமர்கிறேன். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நான் வேடிக்கை பார்க்கிறேன், எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, ஆயினும் அந்தக் கணத்தில் சில மனிதர்கள் என் மனதில் தோன்றுகிறார்கள், ஒருவர் தந்தை பெரியார், இப்படியான ஒரு பயண வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அவர்தான், ஆடு, மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த எனது தலைமுறையைப் படிக்கச் சொல்லி மூத்திரப் பையைத் தூக்கிக் கொண்டு சாகும் வரை அலைந்தவர் அவர், இன்னொருவர் என் தந்தையார், “அங்கோர்வாட்டைப் பார்த்தது போதுமடா அருமை மகனே, கிளம்பு” என்று அவர் சொல்வது என் காதில் விழுகிறது, துறவிகள் தங்கள் மொழியில் ஏதோ மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே விளக்குகளை ஏற்றி வழிபடுகிறார்கள், நான் உயர உயர எழும்புகிறேன், எனக்கு அங்கிருக்கும் கடவுளர்களின் உருவங்களை விடவும் அதைக் கட்டிய சூரியவர்மனின் உருவம் மிகப் பெரிதாகவும், வியப்பாகவும் தெரிகிறது, துறவிகளைப் பிரிகிறேன், என் உடல் அங்கோர்வாட் கோவிலின் உச்சியில் பறக்கிறது, நான் இன்னும் மேலே மேலே பறக்கிறேன், அங்கோர் வாட் கோவிலின் மிக உயர்ந்த கோபுரம் சிறு புள்ளியாய் என் கண்களில் இருந்து மறைகிறது.

************

 

 

 

 

 

 

 


மறுவினைகள்

  1. mikavum nantri. vanakkam. There are lot of similarities between Ankor Wat and Chola architecture…esp the Thanjavur periya kovil and the like.

  2. நீங்கள் சொல்வது உண்மைதான், இருப்பினும், சோழர்களுக்கும் இந்தக் கோவிலுக்கும் தொடர்பில்லை என்று ஆய்வுகள் சொல்கிறது, இருப்பினும், கட்டிடக் கலை ஒன்றாக இருப்பதை மறுக்க முடியாது.

  3. அறிவழகன்

    அடுத்த ஏப்ரலில் நண்பர்கள் ஆங்கோர்வாட் செல்வதாக இருக்கிறோம்

    உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது

    ஜெயமோகன்

  4. மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

    அங்கோர்வாட் செல்வது என்னுடைய கனவாகக் கூட நீண்ட நாட்களாக இருக்கிறது, அந்த இடத்தின் ஒரு இனம் புரியாத அமைதியும், பிரம்மாண்டமும் அங்கோர்வாட் பயணத்தை விரைவில் மேற்கொள்ள வைக்கும் என்று நம்புகிறேன். புனைவிலக்கியத்தின் ஒரு சிறந்த முன்னோடியிடம் இருந்து கிடைக்கப் பெற்ற வாழ்த்தாகவும் அங்கீகாரமாகவும் உங்கள் பின்னூட்டத்தை உணர்கிறேன்.

    நன்றியும், அன்பும்

    கை.அறிவழகன்

  5. Even I am interested in joining with you all for “Ankor Wat ” trip. Do let me know the tour plan.. Catch me at satheesh.jey@gmail.com (9901200778


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்