கை.அறிவழகன் எழுதியவை | ஓகஸ்ட் 19, 2010

ஒரு மாண்டலினும், சில பறைகளும்.

ONE

புவி அமைப்பியல் படிக்கையில் கல்விச் சுற்றுலா ஒன்றுக்காக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் சரிவுகளில் பயணம் செய்து கொண்டிருந்தோம், குன்னூருக்கு அருகில் ஒரு விடுதியில் தங்கி இருந்தோம், விடுதியின் கதவுகள் எங்கள் இளமைக் காலத்தைச் சிறை வைப்பது போல உணர்ந்து வெளியேறி நண்பர்கள் நால்வர் நடக்கத் துவங்கினோம், பனிச் சாரலின் துளிகள் மரங்களில் இறங்கிக் கீழே சொட்டிக் கொண்டிருந்த ஒரு இரவு அது, கால்போன போக்கில் சிரிப்பும் பாட்டுமாய் அலைந்து திரிகின்றன வலியறியாத கால்கள். தூரத்தில் அந்த இரவின் செறிந்த கருமை நிறத்தைத் துளைத்துக் கொண்டு காதுகளில் படிகிறது பறையிசை. கூடவே ரசித்தபடி பின்தொடர்ந்து வருகிறது நிலவும் சில நட்சத்திரங்களும், இசை வந்த திசையை நோக்கி எங்களை அழைக்கிறது சில வெளிச்சப் புள்ளிகள். பாதை நீண்டு கொண்டே செல்கையில் இசை மட்டும் நெருக்கமாகவும், துல்லியமாகவும் அருகில் வருகிறது, ஊருக்கு ஒதுக்குப்புறமான நகரப் பூச்சுக்கள் அதிகம் இல்லாத மக்கள் வட்ட வடிவில் சுற்றி நிற்க நடுவில் நின்றபடி ஆடி இசைக்கிறது ஆறு பேர் கொண்ட பறையிசைக் குழு ஒன்று. கோவிலொன்றின் விழா நிகழ்ந்து கொண்டிருக்கிறது, விழுகிற ஒவ்வொரு அடியிலும் குருதி கொப்பளிக்கிறது இசைப்பவர் கண்களில், சுற்றி இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் மனதில் நர்த்தனம் ஆடுகிறது அந்த இசை, மேற்குத் தொடர்ச்சி மலையின் சிகரங்களும், மரங்களும் அந்த மக்களின் கூடவே ஆடிக் கொண்டிருப்பது போலவே இருக்கிறது, வரையப்பட்ட ஓவியம் போல அந்தக் காட்சி இன்னும் என் நினைவில் தங்கி இருக்கிறது, இரவை விரட்டிப் பகலாக்கிய பறையிசையின் வீச்சு சிவப்பணுக்களில் தங்கி இருக்கிறது என்றும் அழியாமல்.

இசை எல்லா மனிதர்களையும் என்றாவது ஒரு நாளில் ஆட்கொண்டு விடுகிறது, இசையை விரும்பாத மனிதர்கள் அனேகமாக இல்லை என்று நினைக்கிறேன். இசை மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இன்றும் இருக்கிறது. தங்கள் வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ற இசையை ஒவ்வொரு மனிதனும் ரசித்துக் கொண்டே இருக்கிறான், இசை மனிதர்களைக் கடந்து மொழிகளையும், மொழிகளைக் கடந்து மனிதர்களையும் இணைக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இசை கேட்பது என்பது வாழ்க்கையின் அன்றாட நிகழ்வில் நம்மை ஆற்றுப்படுத்தும் எந்த ஓசையையும் உற்று நோக்குவது. எல்லா இடங்களிலும் ஒரு இசை இருக்கிறது, அலுவலகத்தில் இருக்கும் போது பின்னணியில் சிலிர்த்துக் கொள்கிற மரங்களின் காற்றில் ஒரு இசையும் ராகமும் பொதிந்து கிடக்கிறது, குழந்தைகளின் அழுகையில் ஒரு இசை இருக்கிறது, சில நேரம் அவர்கள் அழுவதன் பின்னணியில் அவர்களின் தேவைக்கான இசை பின்னிப் பிணைந்து கிடக்கும், அதிகாலைப் பொழுதின் பறவைக் குரல்களும், மாலையில் அவை மரங்களில் அடையும் குரல்களும் புதிய புதிய இசை வடிவங்களாக இந்தப் பூமியில் நிறைந்து கிடக்கிறது.

TWO

இசை, இரவுகளோடு தொடர்புடையதா இல்லையா என்று எனக்குத் தெரியாது, ஆனால், என்னுடைய இரவுகள் இசையோடு மிக நெருங்கிய தொடர்புடையவை, நமது இயந்திர வாழ்க்கையின் இயக்கங்கள் எல்லாம் நிறைவுற்று மிகத் தளர்வாக அமர்ந்து கொள்கிற நேரம் இரவு என்பதாலேயே எனது இரவுகள் இசையோடு நெருங்கிய தொடர்பு கொண்டவை. இரவுகளில் இசை கேட்பது ஒரு பேரண்டப் பயணம், சில இசை வடிவங்கள் நம்மை தூரத்து நட்சத்திரங்களின் அருகில் கொண்டு போய் விடும், இசை நின்ற பிறகே பூமிக்குத் திரும்ப முடியும், இசை மனிதனின் புற உலகையும், அக உலகையும் ஒரே புள்ளியில் நிறுத்தி விடும் வல்லமை கொண்டது, இடைவெளிகள் அகன்று நம்மைச் சுற்றி இருக்கும் எல்லாப் பொருட்களும் நமக்கு நெருக்கமானவையாகத் தோன்றும் சில கணங்களை இசை நமக்கு வழங்குகிறது. ஒருமுறை தனியாகக் கன்னியாகுமரிக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது, பணிகளை முடித்துக் கொண்டு, மாலை முழுதும் கடற்கரையில் நடந்து பின்னர் முக்கடலும் சங்கமிக்கும் காந்தி மண்டபத்துக்கு அருகில் அமர்கிறேன், கம்பிகளின் இசை கடல் காற்றோடு கலந்து வந்து முக்கூடலில் இணைந்து கொள்கிறது. மாண்டலின் இசை, அதுவும் அத்தனை நுட்பமாக கம்பிகளில் குழையப்பட்டுக் காற்றில் அள்ளி எறியப்பட்ட தேன்குழல்களைப் போலச் சூழலோடு பொருந்துகிறது. கடல் அலைகளின் அசைவை, படகுகளின் இரவு நேரத் தள்ளாட்டத்தை, மனிதர்களின் நடமாட்டத்தை, கடைகளில் பரப்பி வைக்கப்பட்டிருந்த சங்குகளை, இயற்கையின் எல்லையில்லாத ஆற்றலை எல்லாம் அந்தக் கம்பிகள் கொஞ்ச நேரம் தனது கம்பி அசைவுகளால் கட்டிப் போட்டது மாதிரி ஒரு உணர்வு, வாழ்க்கையின் முழுமையை அந்தச் சில கணங்கள் உணர்த்தி விட்டது போன்றதொரு பிரம்மிப்பு, ஏதோ கோவில் நிகழ்வுக்காக நேரடியாக மாண்டலின் ஸ்ரீனிவாஸ் அங்கு இசைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைப் பின்பு அறிந்து கொண்டேன்.

parai_kavimathi

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கேட்ட பறையிசைக்கும், கன்னியாகுமரியில் கேட்ட மாண்டலின் இசைக்கும் ஒரே ஒரு வேறுபாடு இருக்கிறது, அங்கு பறையிசைத்தவரின் பெயர் தெரியாது, இங்கு மாண்டலின் இசைத்தவரின் பெயர் தெரியும். அந்த இரவு மறக்க முடியாத ஒரு இசை இரவாக இன்றும் என்னுள் உறங்கிக் கிடக்கிறது. இசை உடலியக்கத்தையும், உணர்வுகளையும் ஒருங்கிணைத்து சில நேரங்களில் ஒரு சமநிலையைக் கொடுக்கிறது, சில நேரங்களில் எதையோ தேடித் தவிக்க விடுகிறது.மாணவப் பருவத்தில் இருந்தே இசையின் மீதான காதல் கூடவே வளர்ந்து கொண்டிருந்தது, ஒரு கணத்தில் அது இசை மீதான முறையான பயிற்சியை நோக்கி என்னைத் தள்ளியது, கூடவே அதற்கொரு காரணமும் இருந்தது. அது தமிழ் வகுப்பின் ஒரு ஆசிரியர் வழியாக என்னை வந்தடைந்தது. அவர் பெயர் குருமூர்த்தி, பாடங்களைத் தவிர அவற்றோடு தொடர்புடைய உலக விஷயங்களையும் தனது வகுப்பில் அவர் விளக்குவார், அன்றைய இறுக்கமான வகுப்பறைகளில் அவரது வகுப்புகள் ஒரு வகையான ஆர்வத்தையும், நிறைவையும் அளிக்கும். ஒரு நாள் செய்யுள் வரிசைகளில் "குற்றாலக் குறவஞ்சி"யை நடத்திக் கொண்டிருந்தார் அன்று, "இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழி எரியுங் கொண்டையாள்" என்று தொடங்கும் பாடலை அவர் வாசிக்கத் துவங்கிய பிறகு என்ன நினைத்தாரோ தெரியாது, இந்தப் பாடலை கர்நாடக இசையின் எந்த ராகத்திலும் உள்ளடக்கம் செய்து பாட யாரேனும் பாட இயலுமா? என்று வகுப்பை நோக்கி ஒரு அறைகூவல் விடுத்தார், யாரும் இல்லை, அவர் ஒரு விதமான எதிர் பார்ப்போடு வகுப்பு முடிவடையும் போது சொன்னார், நாளை வகுப்பில் யாரேனும் இந்தப் பாடலை வகுப்பில் பாடினால் மகிழ்வடைவேன் என்று சொல்லி விடை பெற்றார்.

SRI KL2 144

திரும்பத் திரும்ப அந்தக் கேள்வி எனக்குள் எதிரொலித்துக் கொண்டே இருந்தது, எனக்கு கர்நாடக இசை என்றால் என்னவென்று கூட அப்போது தெரியாது. இருப்பினும், இந்தப் பாடலை நாளைய வகுப்பில் பாடியே தீருவது என்று முடிவு செய்து கொண்டு விட்டேன்.முடிவு செய்தாயிற்று, முடிவைச் செயல் வடிவம் ஆக்க வேண்டுமென்றால் அதற்கு உழைக்க வேண்டுமே? பள்ளி முடிந்து சில வேறு வகுப்பு நண்பர்களிடம் கேட்டுப் பார்த்தேன், அவர்களும் கை விரித்தார்கள். மிதிவண்டியை மெதுவாக ஓட்டியவாறு கடும் யோசனையில் இருந்தேன். படக்கென்று ஒரு மின்னல், "அட, நம்ம அக்ரகாரத்துல காலைல பிள்ளைக எல்லாம் நோட்டு புக்கு வச்சுக்கிட்டு ச, ரி க, ம பாடுங்களே, அங்கேயே போய் விடுவோம்" என்று ஒரு அசட்டு நம்பிக்கை உள்ளுக்குள் சுடர் விட பார்ப்பனர்கள் வசிக்கும் அந்தத் தெருவுக்குள் நுழைந்து ஒரு வீட்டின் வாசலில் நின்று பார்த்தேன், மணி ஏறத்தாழ ஒன்பது இருக்கும், வீட்டில் வேறு தேடுவார்கள், இரவில் இப்படி அலைந்து திரிவது கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கிறது, அந்த வீட்டின் ஓரத்தில் மாடுகள் கட்டிக் கிடந்தது, இசை அந்த வீட்டில் அதிகப்படியாகப் புழங்குவதற்கான எந்த அறிகுறியும் இல்லை, இப்படியே இரண்டு மூன்று வீடுகள் பார்த்து முடித்த பிறகு கடைசியாக ஒரு வீட்டில் இசை வழிவதற்கான குறியீடுகள் இருந்தது. அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தேன், இரண்டு மூன்று பெரியவர்கள், சில பெண்கள், குழந்தைகள் என்று ஒரு கூட்டமாக இருந்தார்கள், ஒருவர் இருவராக இருந்தால் எளிதாகக் கேட்டு விடலாம் என்று நினைத்தால் ஊரே இருக்கிறது இங்கே, ஒருவழியாகத் கதவைத் திறந்த அம்மாவின் வயதை ஒத்த பெண்ணிடம் திக்கினேன், வகுப்பில் நாளை கட்டாயம் பாட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று பொய் சொன்னேன், என்னுடைய ஆர்வத்தைப் பார்த்தோ இல்லை, நேரத்தைப் பார்த்தோ அந்த அம்மா என்னை "வீட்டுக்குள் வாப்பா" என்றார்கள், அப்பொழுதே நம்பிக்கை வந்து விட்டது, நாளைய வகுப்பில் பாடி விடலாம் என்று.

dalit_350

கல்யாணி ராகத்தில் அந்தப் பாடலை எப்படிப் பாடுவது என்று ஏறத்தாழ ஒரு அரை மணிநேரம் எனக்கு வகுப்பெடுத்தார்கள் அந்த அம்மா, இடை இடையே அவர்கள் வீட்டுக் குழந்தைகளும் எனக்கு உதவினார்கள், வெறும் வார்த்தைகளை எப்படி இசையாக்குகிறார்கள் என்கிற வித்தையை அவர்களிடம் தான் முதன் முதலில் கண்டு கொண்டேன், ஒரு வழியாக என்னுடைய பாடலில் அவர்கள் நிறைவடைந்து என்னை வாழ்த்தி அனுப்பினார்கள், மறுநாள் வகுப்பில் மிகுந்த சிரத்தையோடு அந்தப் பாடலைப் பாடினேன், குருமூர்த்தி சாரும், சக மாணவர்களும் கைதட்டி ஆர்ப்பரித்து என்னை அங்கீகரித்தார்கள், அது என்னுடைய இசை பற்றிய தேடலின் முதல் பக்கமானது. இந்த நிகழ்வுக்குப் பிறகு கர்நாடக இசை ஏன் அனைவருக்கும் பொதுவானதாக இல்லை என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது, கர்நாடக இசையைக் கற்றுத் தேர்வது என்று முடிவு செய்தேன், தொடர்ந்து நான்கு ஆண்டுகள் வேறு ஒரு இசை ஆசிரியையிடம் முறையான பயிற்சி பெற்று கல்லூரி விழா ஒன்றில் அதனை அரங்கேற்றம் செய்தேன். கர்நாடக இசையை நான் கற்றுக் கொள்வதற்காகப் பல இடங்களில் தேடி அலைந்திருக்கிறேன், குரல் வளமும், ஆர்வமும் தவிர வேறு ஏதோ ஒரு கூடுதல் தகுதி அதற்குத் தேவைப்படுகிறது என்பது பின்னாட்களில் எனக்குத் தெரிந்தது. பிறகொரு நாளில் சென்னை M I T இல் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான கர்நாடக இசைப் போட்டியில் இன்றைய சில முன்னணிக் கர்நாடக இசைக் கலைஞர்களோடு பாடி இருக்கிறேன்.

கர்நாடக இசை ஒரு குறிப்பிட்ட அடையாளம் கொண்ட மக்களுக்கானது என்கிற பரவலான கருத்தியலை அவர்களே உருவாக்கி வைத்திருக்கிறார்கள், தமிழிசை வடிவத்தின் மொழிமாற்றுத் தான் கர்நாடக இசை என்பது எனக்குத் தெரிய நீண்ட காலம் பிடித்தது, கர்நாடக இசை என்பதன் அடிப்படைப் பாடங்கள் அனைத்தும் சங்க காலம் தொட்டு நமது நூல்களிலும், இலக்கியத்திலும் நிரம்பி வழிவதை இன்று வரை நாம் அறிந்து கொள்ள விரும்பவில்லை. பண்பாட்டு வழியிலான நமது இசைக் கருவிகள் தெருவுக்கு விரட்டப்பட்டிருக்கின்றன, மனிதர்களை வைத்து இசையை எடை போடும் ஒரு இழிவான சமூகச் சூழலுக்குள் நமது இசையும் தள்ளப்பட்டிருக்கிறது. இன்று தமிழர்களின் கலை கலாச்சாரத்தை மீட்டெடுத்தவர்கள் என்று உரிமை கொண்டாடுகின்ற தமிழினத் தலைவர்கள் கூடப் பறையிசையை கோவிலுக்குள் நுழைக்க முடியாத இழிவிசை என்று தள்ளி வைக்கிறார்கள், பரத நாட்டியம் மேடையில் நடைபெறும் என்றும், தெருவில் பறை இசைக்கப்படும் என்று நூற்றாண்டுகளின் வர்ணக் கொடியை மேலேற்றுகிறார்கள். ஏனெனில் பறையிசை உழைக்கும் மக்களின் வியர்வையை நிலத்தில் வடிக்கிறது, வியர்வையும் அழுக்கும் படிந்த கரங்களால் இசைக்கப்படும் இசைக்கு மேடை ஏறுகிற தகுதி நமது சமூகத்தில் மறுக்கப்படுகிறது, உறுமி இசை, கொம்பிசை, உடுக்கிசை, தவிலிசை இன்னும் பல்வேறு பாரம்பரிய இசைக் கருவிகள் அனைத்தும் வீதிக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இன்றளவும் கிராமங்களில் நிகழும் விழாக்களில் இத்தகைய இசை வடிவங்கள் காணக் கிடைத்தாலும் இவை அனைத்தும் மேடை ஏற்றப்படும் வாய்ப்பும், ஊடகங்களில் முன்வைக்கப்படும் வாய்ப்பும் குறைவாகவே இருக்கிறது. இவற்றை நாம் எப்படி மீட்கப் போகிறோம் என்கிற கேள்விக்கான விடை என்னிடத்தில் இல்லை.

Mridangam

இவை அனைத்தையும் கடந்து இசை ஒவ்வொரு நாளும் புதிய புதிய கருவிகளோடும், திரைப்படங்களோடும் நம்மைச் சுற்றி உலவிக் கொண்டே இருக்கிறது. இசை என்பதை சுருக்கமாக திரைப்பட இசை என்ற அளவில் தமிழர்களாகிய நாம் சுருக்கிக் கொண்டு விட்டோம், திரைப்படப் பாடல்கள் தவிர்த்த இசை என்பது நம்மைப் பொறுத்த வரையில் கர்நாடக இசை அல்லது மேற்கத்திய இசை. நமது சமூகத்தில் நமது பாரம்பரிய இசை வடிவங்களை மீட்டெடுக்கும் எந்த ஒரு புதிய இசை முயற்சியும் அண்மைக்காலங்களில் இல்லை. அரிதாக சில தமிழிசையின் வெளிப்பாடுகளை நாம் அங்கீகரித்து இருக்கிறோம், இவை தவிர்த்து நமக்கான இசை என்பது ஒரு வெற்றிடத்தை நோக்கிச் செல்வது போலவே எனக்குத் தெரிகிறது. நான் நமக்கான இசை என்று குறிப்பிடுவது பாரம்பரியமான நமது பண்பாட்டு இசைகருவிகளின் இசையையும், தமிழிசையையும். நமது குழந்தைகளுக்கும், புதிய தலைமுறைக்கும் திரை இசை தவிர்த்த உலகின் ஏனைய இசை வடிவங்களை அறிமுகம் செய்ய வேண்டிய ஒரு தேவை இருக்கிறது, கூச்சலும் குழப்பமுமாக இருக்கும் ஒரு சமூகத்தில் இசையும் அப்படியே இருக்கிறது, இசை மனித மனங்களை ஆற்றுப்படுத்துகிற வடிகால், நல்ல இசையை உண்டாக்குகிற சமூகம் நல்ல மனிதர்களைக் கொண்டிருக்கிறது. அமைதியும், தெளிவும் நிரம்பிய மனிதர்கள் வாழும் வீதிகளில் இனிமையான இசை வழிந்து கொண்டே இருக்கும்.

இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் ஒரு நள்ளிரவில் மின்சாரம் தடைப்படுகிறது, நான் படுக்கையில் இருந்து எழுந்து வீட்டின் வாசலுக்கு வருகிறேன், வெண்பஞ்சு மேகப் பொதிகள் இரண்டு வேகமாய் வீட்டைக் கடக்கின்றன, அவற்றின் பின்னால் நான்கைந்து நட்சத்திரங்கள், முன்னறை வழியே கசிந்து வரும் தென்னாப்பிரிக்காவின் நாட்டுப்புறக் குழல் இசை ஒன்று என் பின்னணியில் ஒலிக்கிறது, அது நண்பரும் இசைக் கலைஞருமான "கோகுல் சலவாடி" எனக்கு அறிமுகம் செய்த   ஒரு இணையத் தளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட இசை.கூடவே ஒரு கேள்விக் குறி? இசை உலகின் பொது மொழி அல்லவா, பிறகென்ன கர்நாடக இசை, மேற்கத்திய இசை என்று உனக்குள் பிளவுகள் என்று ஒரு காற்றில் சுற்றி அலைகிறது அந்தக் கேள்விக் குறி.

night-sky-over-church-800

ஆம், இசை உலகின் பொது மொழிதான், அதைப் போலவே மனிதர்களும் உலகில் பொதுவானவர்களாய் இருக்கும் போது, வர்ணமும், வர்க்கமும் இணைந்து எனக்கான இசையை முடிவு செய்யும் வரையில் இசை உலகின் பொது மொழியாக இருக்க முடியாது, பறை இசைப்பவனை வீதியிலும், வேறொன்றை இசைப்பவனை மேடையிலும் அமர்த்தும் சமூகம் இங்கிருக்கும் வரையில் இசை உலகின் பொது மொழியாக இருக்க முடியாது. நான் இசையை விடவும், இசைக் கருவிகளை விடவும் மனிதர்களை மதிக்கிறேன், இசையே இல்லாத உலகிலும் என்னால் வாழ முடியும், ஏனெனில் உணவே இல்லாத மனிதர்கள் என்னைச் சுற்றிலும் நிறைந்து கிடக்கிறார்கள். நான் இசையை நேசிக்கிறேன், அது வெளிப்படும் மனிதர்களை வைத்து, நான் இசையைப் போற்றுகிறேன், அது சமூகத்தில் யாருக்காக இசைக்கப்படுகிறது என்பதை வைத்து………………………

************


மறுவினைகள்

  1. Excellent topic

    Reg,
    Shivakumar

  2. nice
    “Parai yadithalukaga viralkal vettapadum pothu
    parai adithale porrattam”

  3. மிகவும் அழகாக அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள், தவறுதலாக 
    இரண்டு வரிகளை படித்தேன் ஆனால் உங்கள் எழுத்துக்கள் 
    எல்லாவற்றையும் படிக்க வைத்தது அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  4. நன்றி சிவகுமார்.

  5. நன்றி அரிகர சுதன்.

  6. உங்களைத் தவறுதலாகப் படிக்க வைத்த அந்தப் பக்கத்துக்கு நன்றி ஆல்வின் சாம்.


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்