கை.அறிவழகன் எழுதியவை | நவம்பர் 20, 2010

தலித் என்பது தகுதியா? கழிவிரக்கமா?

1

இந்திய நாட்டின் சந்து பொந்துகளில் வசிக்கும் பெருச்சாளிகளும், மரக்கூடுகளில் வசிக்கும் பறவைகளும் கூடத் தொலைத்தொடர்புத் துறையில் நடந்த அல்லது நடந்ததாகச் சொல்லப்படுகிற ஊழல் குறித்தே இப்போது உரையாடிக் கொண்டிருக்கின்றன, ஆங்கிலச் செய்தி  ஊடகங்களில் வசிக்கும் கோஸ்வாமிகள் தங்களின் ஆங்கிலப் புலமையையும், அரசியல் நுணுக்கங்களையும் பிரதமர் முதற்கொண்டு நாட்டின் எல்லா அறிவு ஜீவிகளுக்கும் கற்றுக் கொடுக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு இந்த அலைக்கற்றை ஊழல் கூச்சல். ஏதோ ஊழல் பற்றிய அறிவே இல்லாத ஒரு நாட்டில் நாம் வசிப்பது போலவும், ராசா தான் ஊழலை மிகக் கடினமாக உழைத்துக் கண்டுபிடித்து இந்த நாட்டிற்கு அறிமுகம் செய்தது போலவும் இந்த நாட்டின் ஊடகங்கள் ஊளையிடுவது அருவருப்பாயும், அவமானமாயும் இருக்கிறது. ராசாவுக்கு வக்காலத்து வாங்கியோ, ராசாவை இயக்கிய இராசராச சோழருக்கு முட்டுக் கொடுத்தோ இதனை எழுதவில்லை. ஆனால், கண்டுபிடிக்கப்படாத ராசாக்களும், கண்டுபிடிக்கப்படாத மந்திரிகளும் ஒழுக்க சீலர்களாய் இந்த ஊழல் பற்றி நாடாளுமன்றங்களில், தொலைக்காட்சிகளில் முழக்கம் இடுகிறார்களே?

ராசாவின் ஊழலுக்குள் வருவதற்கு முன்பாக இந்த நாட்டின் அரசு குறித்து ஒரு சிறிய முன்னோட்டம், சில காலங்களுக்கு முன்பாக கர்நாடக அரசின் தொழில் மேம்பாட்டு அமைப்பின் கீழ் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிலம் வாங்கி அதில் ஒரு புதிய தொழிற்சாலை அமைப்பது என்று நான் வேலை செய்கிற நிறுவனம் முடிவு செய்தது, அந்தத் திட்டப் பணிகளுக்கான மேலாளராக நான் பணி செய்ய வேண்டியிருந்தது, ஒரு ஏக்கர் நிலத்துக்கு இத்தனை விழுக்காடு பணம் கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று அங்கிருக்கும் ஒற்றைச் சாளர அலுவலகத்தில் நடைமுறையில் இருக்கிறது, அது தவிர சரியான இடத்தில், அமைப்பில் நிலம் கிடைக்க வேண்டுமென்றால் அதற்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும். கொடுக்கப்படுகிற பணத்தில் மாநிலத் தொழில்துறை அமைச்சர் வரையில் பங்கு கொடுக்கப்படுகிறது என்பது வெளிப்படை, இந்த ஒற்றைச் சாளர அலுவலகத்தை நிர்வகிக்க இந்தியக் குடிமைப் பணிகள் தேர்வு எழுதி ஒரு அலுவலர் அமர்த்தப்பட்டிருக்கிறார், நிலம் வாங்குவதற்கான அனுமதி கொடுக்கப்பட்டவுடன் அது குறித்த கோப்புகள் தொடர்புடைய பகுதித் தொழில் மேம்பாட்டு நிறுவனத்திற்கு அனுப்பப்படுகின்றன, அங்கிருக்கும் மேம்பாட்டு அலுவலர் தன்னுடைய மேம்பாட்டை ஒவ்வொரு கோப்பின் நகர்த்தலிலும் உறுதி செய்து கொள்கிறார், இணை மேம்பாட்டு அலுவலர் நேரடியாகவே உறைக்குள் இடப்பட்ட இந்தப் பணம் போதாது என்று முகத்தில் அறைவது போலச் சொல்கிறார், அந்த அலுவலகத்தின் கடைநிலை எழுத்தர்

2

லஞ்சப் பணம் பெறுவது தன்னுடைய பிறப்புரிமை என்பது போன்ற மனநிலையில் இருக்கிறார், ஒரு ஆணைக் கடிதத்தின் நகலை தொடர்புடைய நிறுவனத்திடம் வழங்குவதற்கு அவர் இரண்டாயிரம் ரூபாய் பணம் என்று முடிவு செய்து அதை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துகிறார். மின்சார வாரியத்தில் இளநிலைப் பொறியாளர் தன்னுடைய மச்சானை ஒப்பந்தக்காரராக நியமித்து இணைப்புப் பெறுவதற்கு இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று எந்தக் கூச்சமும் இன்றிச் சொல்கிறார், தொழிற்சாலைகளுக்கான இயக்குனர் அலுவலக எழுத்தர் முப்பதாயிரம் கொடுத்தால் இரண்டு நாட்களில் எல்லா ஒப்புதல்களையும் உங்கள் இல்லத்துக்கே கொண்டு வருகிறேன் என்று சொல்கிறார்.

இவை எல்லாம் ஒரு பானை சோற்றில் ஒரு பருக்கை. பெரும்பாலான அரசு உயர் அலுவலர்களும் அமைச்சர் பெருமக்களும் இன்றைக்கு இந்திய நாட்டில் செய்கிற ஒரே வழக்கமான வேலை மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பது. குடிமைப் பணித் தேர்வு எழுதி அரசு அலுவலகங்களை நிர்வகிக்க வருகிற அனைவரும் இந்திய அரசியல் வர்க்கத்தின் காவலாளிகள். இவர்கள் அடிக்கிற கொள்ளை வெளியில் தெரியாமல் இருக்கவும், மக்களின் மனநிலையில் ஒரு விதமான மந்த நிலையை உண்டாக்கி வைப்பதுமே இவர்களால் அதிகப்படியாகச் செய்ய முடிகிற ஒரே குடிமைப் பணி. இந்த லட்சணத்தில் தான் நமது ஊடகங்களும், நாமும் ராசாவின் ஊழல் குறித்துப் புழுதி கிளப்பிக் கொண்டிருக்கிறோம்.

ராசாவின் அலைக்கற்றை ஊழல் வெளிக் கிளம்பியதில் இருந்தே இன்னொரு பக்கத்தில் தலித் பல்லவி ஒரு சிலரால் தொடர்ந்து பாடப்படுகிறது, அலுவலகத்தில் ஒரு சக பணியாளர் என்னிடம் இப்படிச் சொன்னார், "SC/ST ஆட்களை உயர் பதவிக்குக் கொண்டு வந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ராசாவே ஒரு எடுத்துக்காட்டு", அடப்பாவிகளா, இந்த நாட்டில் இதற்கு முன்பு ஊழலே இல்லையா? அல்லது வேறு எந்தச் சமூகத்தவனும் ஊழல் செய்யவில்லையா? அல்லது ஊழலுக்கும், குற்றங்களுக்கும்  சாதி முத்திரை குத்தும் பழக்கத்தை நாம் அனுமதித்துக் கொண்டிருக்கிறோமா?  இந்த நாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று தலித் பல்லவி பாடும் பழக்கம், அதுவும், தலித் இயக்கங்கள் மற்றும் தலைவர்களிடம் இருந்தே இந்தப் பல்லவி அதிகம் எழுப்பப்படுவது தான் இன்னும் சோகம், தேவைகள் இல்லாத போதும், உயர்வுகளைப் பெறும் போதும் நான் தலித் என்கிற மனநிலை வருவதில்லை, தேவைகள் உருவாகும் போதும், சிக்கலில் மாட்டிக் கொள்கிற போதும் நான் தலித் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள் என்று சொல்லும் ஒரு உளவியல் தாழ்நிலை அது. இந்த மனநிலை இளைய தலைமுறை ஒடுக்கப்பட்ட இளைஞர்களின் மனத் திரையில் படிந்து தப்பித்தலுக்கும், குற்றங்களை மூடி மறைப்பதற்குமான ஒரு ஆயுதமாக மாறிப் போகும் ஆபத்து இருக்கிறது.

3

அம்பேத்கரைப் போன்ற ஒரு சட்ட அறிவும், சமூக அறிவும் நிரம்பிய மனிதன் விடுதலை பெற்ற இந்தியாவில் இன்னும் பிறக்கவே இல்லை, ஆனால், அந்த மாமனிதனை அவரது அறிவை ஒரு ஊதா நிற மேலாடையில் போட்டு மூடி விட்டதும் இன்றி அவரது பெரும்பாலான அறிவு சார் கருத்துக்களை அந்த மேலாடைக்குள் போட்டு ஒளித்து விட்டதும் உயர்சாதிக் கூடாரங்களில் ஒளிந்திருக்கும் இதே தலித் தலைவர்கள் தான் என்பதை எந்தத் தயக்கமும் இன்றி என்னால் சொல்ல முடியும். அதே மாதிரியான ஒரு அடைப்பு வேலை தான் இங்கு காலம் காலமாய் செய்யப்படுகிறது. கே.ஆர்.நாராயணன் என்று ஒரு குடியரசுத் தலைவர் இருந்தார், எல்லாத் தகுதிகளும் ஒருங்கே பெற்ற ஒரு அறிவாளி மட்டுமன்றி அதற்கேற்ற அனுபவமும் கொண்டவர். வெளியுறவுத் துறையிலும், தூதரகங்களிலும் பல காலம் பணியாற்றிய அவர் தனது முழுமையான தகுதிகளால் மட்டுமே இந்த நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகும் வாய்ப்பைப் பெற்றார், ஆனால் அவரை தலித் சமூகத்தில் இருந்து வந்த குடியரசுத் தலைவர் என்று குறுக்கினோம். தலித் சமூகத்தில் இருந்து எந்தத் தகுதிகளும் இன்றியா அந்தப் பெரும் பொறுப்புக்கு அவர் வந்தார்? அது அவர் மீது மட்டுமே போர்த்தப்படுகிற போர்வை அல்ல, மாறாக ஒட்டு மொத்த ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் மீது வெகு நுட்பமாகக் கட்டப்படுகிற வேலி என்பதை நாம் உணர வேண்டும், அது அரசியல்வாதிகளின் வோட்டு வங்கிக்கு செய்யப்படும் முதலீடு.

மிகப் பெரும் பதவிகளும், பொறுப்புகளும் யாருக்கும் தலித் என்பதால் இந்த நாட்டில் இலவசமாக வழங்கப்படுவதில்லை, ஆண்டிமுத்து ராசா என்கிற மனிதன் தலித் என்பதால் மட்டும் அவருக்கு அமைச்சுப் பதவிகள் வந்து விடவில்லை, இளநிலை அறிவியல் படித்தவர், முதுகலை சட்டம் பயின்றவர், மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கட்சியில் பல காலங்கள் பணியாற்றி மக்களால் தேர்வு செய்யப்பட்டுப் பாராளுமன்ற உறுப்பினராகிப் பின் அமைச்சராகப் பரிந்துரைக்கப்பட்டவர், ஆகவே ராசா ஒரு தலித் என்கிற கோணத்தில் இருந்து இந்த ஊழலை அணுகுவது முட்டாள்தனமானது மட்டுமன்றி ஆபத்தானதும் கூட. ஊழல் செய்வதற்கு களங்கமான மனித மனம் மட்டுமே தேவையாக இருக்கிறதே அன்றி, சாதீய அடையாளங்களும், மத அடையாளங்களும் அல்ல. "எல்லா இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால், எல்லாத் தீவிரவாதிகளும் இஸ்லாமியர்களே" என்கிற வெகு நுட்பமான ஒரு இந்துத்துவ மன நிலை எப்படி இந்த நாட்டில் பரப்பப்பட்டதோ அதே போல வருணத் திருடர்களால் செய்யப்படுகிற ஒரு பரப்புரை ராசா ஒரு தலித் என்பது. அதை கருணாநிதியும், திருமாவளவனும் கையில் எடுத்திருப்பது இன்னும் கேவலமான அரசியல் ஆதாயங்களுக்காக என்பதை ஒடுக்கப்பட்ட மக்கள் விழித்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது. தலித் என்பது ஒரு தகுதியோ இல்லை கழிவிரக்கமோ அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை, இந்த தேசத்தில் பன்னெடுங்காலமாக புழக்கத்தில் இருக்கும் உழைக்கும் மக்களின் குறிச்சொல் அது. அந்தக் குறிச் சொல்லை ஊழலுக்கும், பதவிகளுக்கும் பயன்படுத்தும் உங்கள் அரசியலைத் தவிருங்கள், உங்களால் தொடர்ந்து ஏமாற்றப்படும் இந்த தேசத்தின் கடைநிலை விவசாயக் குடிமகனின் அடைமொழி "தலித்" என்கிற சொல்.

4

உமாசங்கர் மீது வீண் பழி சுமத்தப்பட்டு அவர் கட்டம் கட்டப்பட்ட போது கருணாநிதிக்கு தலித் மக்களின் கதிரவனைப் பற்றித் தெரியவில்லை, திருமாவளவனுக்கு ஒரு போராட்டம் நடத்த வேண்டும் என்று தோன்றவில்லை, ஆனால், ராசாவின் மீது பழி சுமத்தப்பட்ட உடன் இருவரும் பொங்கி எழுந்து விட்டார்கள், ஒருவர் கதிரவன், பகலவன், விடிவெள்ளி என்று ஊரை ஏமாற்றக் கிளம்பினார், இன்னொருவர் பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் ஜெயலலிதாவின் தலித் விரோதப் போக்கு என்று உலகை ஏமாற்றக் கிளம்பினார். ஒரு பக்காவான அரசியல் தலைவராக திருமாவளவன் உருவாகிக் கொண்டிருக்கிறார் என்பதை அவரது செயல்பாடுகள் உணர்த்துகின்றன, ஈழ மக்களுக்கான கூட்டங்களில் "நான்தான் புலி, சிங்கத்தின் குகைக்குச் சென்று அதன் பிடரியை உலுக்கினேன்" என்கிறார், கூட்டணிக் கட்சிகளின் நாடகத்தில் "தாயே, சோனியா, நீயே கதி" என்கிறார். வெளியிடங்களில் காங்கிரஸ் கட்சி தான் தமிழர்களை கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கத் துணை புரிந்தது என்கிறார், இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியுடனான தலித் மக்களின் உறவு நீண்ட வரலாற்றுப் பெருமைகள் கொண்டது என்றும் அதன் தலைவர்கள் மீது தான் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பதாக உளறுகிறார்.

இந்த ஊழலின் அடிநாதமாக இருப்பது இந்திய ஆட்சி அமைப்பின் சிக்கல் மட்டுமன்றி உழைக்கும் மக்களின் பணத்தில் எப்படியெல்லாம் அரசியல்வாதிகளும், அலுவலர்களும் உல்லாச வாழ்க்கை வாழலாம் என்பது குறித்த ஒரு முன்னோட்டம், இதே மாதிரியான கொள்ளை பிரமோத் மகாஜன் காலத்தில் இருந்தே நடைபெறுகிறது என்று திரும்பத் திரும்ப ராசா சொல்லி வருகிறார். அவர் சொல்ல வருவது வேறொன்றுமில்லை, "இதெல்லாம் இந்திய அரசியல்ல சகஜமப்பா" என்பது மாதிரியான ஒரு மேம்போக்கு வாதம், "அவன் செய்தான் நானும் செய்தேன்" என்கிற விதண்டாவாதம். அடுக்கடுக்கான அமைப்புகளும், கண்காணிப்புக் குழுக்களும் இருக்கும் ஒரு நாட்டில் இவ்வளவு பெரிய அளவில் ஊழல் நடைபெற வேண்டுமென்றால் நமது ஊடகங்கள் சொல்வதைப் போல அது ஒரு தனி மனிதனால் செய்யப்பட்ட தான் தோன்றியான ஊழல் அல்ல, பிரதமர், பிரதமர் அலுவலகம், நிதி அமைச்சர், நிதி அமைச்சகம், துறை அமைச்சர், துறை அலுவலகம், துறை அமைச்சர் சார்ந்திருக்கிற கட்சியின் தலைவர் என்று திட்டம் போட்டுத் தான் இந்த ஊழல் நடைபெற்றிருக்க வேண்டும், இடையில் இந்திய முதலாளிகளின் தரகுக் கூட்டமைப்பு வேலைகளும் தீவிரமாகச் செய்யப்பட்டிருக்கின்றன, அலைக்கற்றை ஒதுக்கீடு அதிகப் போட்டிகள் இன்றி இந்தியத் தொலைத்தொடர்பு முதலாளிகளால் உண்டாக்கப்பட்ட டுபாக்கூர் நிறுவனங்களின் பெயரில் எடுக்கப்பட்டுப் பின்னர் அதன் மதிப்பைப் பகிர்ந்து எடுத்துக் கொள்வது மாதிரியான ஒரு திட்டம் ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்றே நிகழ்ந்திருக்க வேண்டும்.

5

அது தவிர காங்கிரஸ் கட்சியின் திரை மறைவு வேலைகள் பலவும் இந்த ஊழலில் நிகழ்ந்தேறி இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற சண்டிக் குதிரைக்குக் கடிவாளம் போடுவதற்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாக காங்கிரஸ் மேலிடம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. பிரதமரின் கருத்துக்களை ராசா கவனத்தில் கொள்ளவில்லை என்று C A G இப்போது அறிக்கை கொடுக்கிறது, ஒரு துறை அமைச்சரின் கொள்கை சார்ந்த முடிவுகளைக் கண்காணிக்கவும், சீரமைக்கவும் இந்த நாட்டின் பிரதமருக்கு முழு அதிகாரங்களும், திறனும் இருக்கிறது. அப்படியானால் பிரதமர் தனக்குப் பிடித்தமில்லாத நாட்டுக்குத் தீங்கும், வருமான இழப்பும் கொடுக்கிற ஒரு ஒதுக்கீட்டை ஏன் ஒப்புக் கொண்டார் என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடை எதாவது ஒரு விசாரணைக் குழுவின் காலடிகளில் போட்டு நசுக்கப்படலாம். பல காலம் இழுத்தடிக்கப்பட்டுக் கடைசியில் வழக்குப் போட்ட அனைவருக்கும் சரி பங்காகப் பிரித்துக் கொடுக்கப்படலாம், அல்லது காலம் காலமாய் இந்தியாவில் இருந்து வரும் நம்பிக்கைகளின் அடிப்படையில் ஒரு தலித் தான் இப்படிச் செய்திருப்பான் என்று தீர்ப்பு வழங்கப்படலாம்.

6

இந்திய தேசத்தின் ஒவ்வொரு அரசு அலுவலகமும், அதன் கதவுகளும் ஊழல் செய்து பழகி விட்டன, ஊழல் செய்வதற்கும், லஞ்சம் பெறுவதற்குமான அதிகாரப் பூர்வ மையங்களாக அரசியல்வாதிகளை நாம் மாற்றி வைத்திருக்கிறோம், கடைநிலை எழுத்தர் துவங்கி இந்த நாட்டின் உயர் அதிகாரிகள், மாநில அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மைய அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் என்று அனைவரும் ஊழல் புரிபவர்களாக அல்லது ஊழலுக்குத் துணை போகிறவர்களாக இருக்கிறார்கள் என்றால் ஒரு நாட்டில் இந்த மனநிலை எங்கிருந்து துவங்கி வளர்கிறது என்கிற அடிப்படை உளவியல் குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் நெருங்கி விட்டது என்று நினைக்கிறேன், இருநூறு ரூபாய்களுக்கும், கட்டிங் போதைக்காகவும், ஒரு பொட்டணம் பிரியாணிக்காகவும் ஓட்டைப் பணயம் வைப்பதில் இருந்தும், எப்படியேனும் பொருள் ஈட்டிச் சமூகத்தின் உயர்வான பகுதியில் இருக்க வேண்டும் என்கிற முதலாளித்துவச் சிந்தனைகளில் இருந்தும் தான் துவங்குகிறது இந்த ஊழலின் ஊற்றுக்கண்.

நாம் எதிர்க்க வேண்டியது ராசாவின் ஊழலை அல்ல, முதலாளித்துவச் சிந்தனைகள் படிந்து அழுகி நாற்றம் எடுக்கிற சமூக மனநிலையை, நாம் எதிர்க்க வேண்டியது அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலை அல்ல, இந்த நாட்டு மக்களின் மட்கிப் போன மனக்கற்றை அலைவரிசைகளை. அப்படி நாம் செய்யாத பட்சத்தில் இரவோடு இரவாக இந்த நாடும், அதன் மக்களும் ஒரு நாளில் பன்னாட்டு முதலாளிகளின் அடிமைகளாக விற்கப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி.

7

"இப்ப மட்டும் என்ன வாழுதாம்" என்று உங்களில் யாரோ சொல்வது என் காதில் விழுகிறது.

********


மறுவினைகள்

  1. டெலிபோன் வளர்ச்சியை ஏற்படுத்தி புரட்ச்சியை உண்டாக்கியவர் ராஜா. இவரின் அணுகுமுறையால் தான் இவரின் பதவி காலத்தில் இந்திய டெலிஃபோன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 300 மில்லியனிலிருந்து 700 மில்லியனாக உயர்ந்துள்ளது. டெலிஃபோன் கட்டணம் 160 பைசாவிலிருந்து 46 பைசாவாக குறைந்துள்ளது.
    குறைந்த விலையில் டெலிபோன் சேவை கிடைக்க வழிவகுத்தவர் . ராஜா .

    இந்த குற்றச்சாட்டுகளுக்கு காரணம் இரண்டு பெரும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் என்று சொல்லப் படுகிறது. காரணம் அந்த நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் உள்ள அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் வேறு யாரும் இதில் நுழையாமல் அவர்களே அனைத்தையும் அனுபவிக்கலாம் என்று நினைத்திருந்த கனவை ராஜா தகர்த்து விட்டு சிறிய நிவனங்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டதால் கோபமடைந்து அரசியல் வாதிகளை தூண்டி விட்டு வசமாக கவனிப்பதாகவும் செய்தி. உண்மைகள் விரைவில் வெளிவந்தாலும் வரலாம். இந்தியத் தலைமைக் கணக்காயர் தமது அறிக்கையில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்த நடைமுறையினால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தோராயமான ஒரு மதிப்பீட்டைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அமைச்சரின் முடிவால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பைத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறாரே தவிர, அமைச்சர் ஊழலில் ஈடுபட்டிருக்கிறார் என்று சுட்டிக்காட்டவில்லை.

  2. miga miga arumaiyana katturai.Dalithal endra varthiaiyae ethirgavendum.


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்