கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 8, 2012

பிணங்களைத் தாண்டி………

what_if_we_really_loved_all_humanity

வேலைகள் ஏதுமின்றி ஓய்வாகவும், கொஞ்சம் கவலையோடும் அமர்ந்திருந்தான் மாறன், இரண்டு மூன்று நாட்களாகப் பிணங்கள் இல்லாமல் காலியாகக் கிடந்தது பிணவறை, பிணங்கள் பல மனிதர்களின் நீக்க முடியாத பெருந்துயராய் இருக்கிற போது மாறனுக்கு அவை மகிழ்ச்சி தரக்கூடியவை, உள்ளூர அவன் இறப்பை நேசிக்கவில்லை என்றாலும் கூட அவனது வாழ்க்கை பிணங்களோடு தொடர்புடையதாய்ப் போனது, பிணங்களை எதிர் நோக்கி வாழும் ஒரு பாவியாக துவக்க காலங்களில் கொஞ்சம் கலக்கமடைந்தாலும் பிறகு அதுவே வாழ்க்கையாகிப் பழகிப் போனான் மாறன்.

இரவு கொஞ்சம் கொஞ்சமாய் அடர்த்தியாய்க் கிளைத்துக் கொண்டிருந்தது, மிகச் சன்னமான காற்று காதுக்கருகில் உரசியபடியே கட்டிடங்களின் உடைந்த சாளரங்களை கொஞ்சமாய் அசைத்துப் பார்த்தது, நிமிர்ந்து எதிரில் நின்றிருந்த மரத்தைப் பார்த்தான் மாறன், அது தான் என்னமாய் வளர்ந்து பெருத்து விட்டிருக்கிறது, இந்தக் கட்டிடத்தையே முழுமையாக இன்னும் கொஞ்ச காலங்களில் மறைத்து விடும் போலிருக்கிறது, பகலில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சிலரும், அவர்களோடு கூட வருபவர்கள் பலரும் இந்த மரத்தின் கீழே அமர்ந்து ஓய்வு கொள்வார்கள்.

மனிதர்களின் கதையை அவர்கள் ஒருவரோடு ஒருவர் பகிர்ந்து கொண்டு இளைப்பாறுவார்கள், கவலைகளைக் கேட்டும், நோயாளிகளை மடியும் அமர்த்தியுமே வளர்ந்த மரமென்பதால் இது வழக்கமான ஆல மரங்களை விடவும் கொஞ்சம் மெல்லியதாகவும், பழுப்பு இலைகளைக் கொண்டதாகவும் இருப்பதாக மாறன் சில நேரங்களில் நினைத்திருக்கிறான். நிலவு வானத்தின் மையத்தில் உலவித் திரிந்த போது ஊதா நிறத்தில் சுழல் விளக்குப் பொருத்தப்பட்ட ஒரு வண்டி மருத்துவமனைக்குள் நுழைந்தது.

அதன் ஓசையைக் கேட்ட மாறன் இப்போது சுறு சுறுப்பானான், வண்டி நேராக பின்புற வாயிலைக் கடந்து வந்து கொண்டிருந்தது, அந்த வண்டியின் முகப்பு விளக்குகள் இப்போது மாறனின் கண்களைக் கூசச் செய்யும் அளவுக்கு நெருங்கி வந்து விட்டது, அந்த நீண்ட இரவின் அடர் இருள் முடிவுக்கு வந்து விட்டதைப் போலவே மாறன் உணர்ந்தான், இரண்டு மூன்று மனிதர்கள் மட்டுமே அமர முடியும் அந்த வண்டியின் பின்புறத்திலிருந்து ஏழெட்டுப் பேர் இறங்கினார்கள், இப்போது உள்விளக்கின் வெளிச்சத்தில் அந்தப் பிணம் கிடத்தப்பட்டிருந்தது.

மாறன் மெல்ல நடந்து சென்று வண்டியின் பின்புற இருக்கைகளில் கையை அழுத்தியபடி பிணத்தின் முகத்தைப் பார்த்தான், வாய் முழுக்க வெற்றிலைக் கறையோடும், கொஞ்சமாய் வலியின் சுவடுகளோடும் எந்தக் கவலைகளும் இன்றிப் படுத்திருந்தது பிணம். பிணவறைக் கட்டிடத்தின் கதவுகளைத் திறந்து மாறன் உள்ளே சென்ற போது காற்று முன்னிலும் பலமாக வீசத் துவங்கியது, முன்புறக் கதவுகள் ஒரு முறை படீரென்று சாத்திக் கொண்டதைக் கண்டு நின்றிருந்த பிணத்தின் உறவினர்கள் அனைவரும் ஒரு முறை துணுக்குற்றார்கள், ஒருவரோடு ஒருவர் நெருங்கி நின்று கொள்வதற்கு முயன்றபடி அந்த இரவில் மரணம் குறித்த தங்கள் அனுபவங்களை உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

மாறன் வெகு நிதானமாக பிணங்களைத் தூக்கிச் செல்லும் இரும்புப் பலகை ஒன்றை விளக்குகள் இல்லாத அறையொன்றில் இருந்து எடுத்து வந்திருந்தான், "யாராச்சும் ஒருத்தர் மட்டும் வாங்க, காலைப் பிடிச்சுப் பலகையில் கிடத்தணும்" என்று சொல்லியபடியே வண்டியின் உட்புறம் ஏறிச் சென்று பிணத்தின் தலையை தனது இரண்டு கைகளிலும் தாங்கிப் பிடித்துக் கொண்டான் மாறன், நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் கால்களைக் கொஞ்சம் தயக்கத்தோடு பிடித்துக் கொண்டு இழுத்தார்.

"இழுக்காதீங்க அப்பு, சதை எல்லாம் பிஞ்சிரும்" என்கிற மாறனின் குரல் அந்தக் கணங்களின் கனத்தை அதிகப் படுத்திக் கொண்டிருந்தது, ஆலமரம் மீண்டும் கூடியிருந்த மனிதர்களின் வாயிலிருந்து பல மரணக் கதைகளைக் கேட்டபடி சலிப்பாய்க் காற்றில் சலசலத்தது. இனி தலைமை மருத்துவர் வரும் வரை யாவரும் காத்திருக்க வேண்டும், பிணம் உட்பட, கூட வேலை செய்யும் சிற்றம்பலம் இல்லாதது மாறனுக்குப் பெரிய தலைவலியாய் இருக்கவில்லை, ஒரே நாளில் நான்கைந்து பிணங்கள் வருகை தரும்போது தான் சிற்றம்பலம் கட்டாயத் தேவையாய் இருந்தான்.

near-death-experience

மாறன் இப்போது உள்ளே பிணம் கிடத்தப்பட்டிருக்கும் மேடைக்கு மிக நெருக்கமாக வந்து நின்றான், அரை இருட்டில் அழுக்கடைந்த குண்டு விளக்கு ஒன்று அழுது வடிந்தபடி வெளிச்சம் பரப்ப, லேசாய்ப் புன்னகைப்பதைப் போலப் படுத்திருந்தது பிணம், பிணத்தின் ஆடைகளைக் கழற்றி படிந்திருந்த அழுக்கை வெள்ளை நிறப் பஞ்சுத் துண்டால் அழுந்தித் துடைத்துச் சுத்தம் செய்தான் மாறன், இடுப்புக்கு மேலே மார்புப் பகுதியில் காயம் கொஞ்சம் அதிகமாய் இருந்தது, வெள்ளைக் களிம்பை எடுத்துப் பூசி படிந்திருந்த குருதிக் கறைகளை நீக்கி விட்டு மீண்டும் ஒருமுறை துண்டால் அழுந்தத் துடைத்து விட்டு பிணங்களுக்கான தனியான ஆடையொன்றை எடுத்து இன்றைய பிணத்துக்கு அணிவித்தான் மாறன்.

பிணத்தின் கைகள் கொஞ்சம் இறுக்கமடைந்து கைகளை அணிவிக்க இயலாதபடி முரண்டு பிடித்தன, "நாங்க பாக்காத பிணமா?" என்று முணுமுணுத்தபடி மாறன் வாசலைப் பார்த்த போது தலைமை மருத்துவரின் கார் வாசலை அடைந்திருந்தது. மருத்துவர் தனது அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டு காத்திருந்த காவல்துறை எழுத்தரை உள்ளே அழைத்து உரையாடத் துவங்கினார், வழக்கமான அவர்களது அலுவலகப் பூர்வமான உரையாடல் சில குறிப்புகளை இருவரும் எழுதிக் கொள்வதில் முடியும், இப்போது மாறன் பிணவறைக்கு வெளியே நின்றிருந்தான்.

“சொந்தக் காரங்க யாருப்பா?, டாக்டர் உள்ள கூப்பிடுவாரு, தலை, வயிறெல்லாம் ரொம்ப சேதம் பண்ண வேணாம்னு சொல்லுங்க, அவருக்கு குடுக்குறதக் குடுங்க" என்று விட்டு அமைதியானான், வயது முதிர்ந்தவரும், அழுது முகம் வீங்கியவருமாய் அருகில் வந்து நின்ற மனிதரைப் பார்த்த போது பிணத்தின் தந்தையைப் போன்று இருந்தது, “எப்பா, வேற யாரும் இல்லையா?” என்று கேட்டு முன்னே நடந்த போது மெல்ல அருகில் வந்து "டாக்டருக்கு எவ்வளவு குடுக்கனும்னே?" என்று முனகினான் ஒரு இளைஞன்.

2258879883_44c0d4c17b

"ரொம்ப வெட்ட வேணாம்னு சொன்னா அவருக்கு ஒரு இரண்டாயிரமாவது குடுக்கணும்". என்று சொல்லி விட்டு பின்னால் திரும்பிப் பார்த்தபோது காவல்துறை எழுத்தர் வெளியே நின்றிருந்தார், இளைஞன் என்னைத் தனியாக அழைத்துச் சென்று என் கையில் பணக் கற்றைகளைத் திணித்தான், எவ்வளவு இருக்குப்பா? என்கிற எனது கேள்விக்கு மூவாயிரம் என்று பதில் சொல்லி விட்டு நகர்ந்து முன்னே சென்றவன் திரும்பி என்னிடம் வந்து "அண்ணே, கொஞ்சம் நல்லா துணி கிணி போட்டு நல்லா பண்ணீருங்க, நாளைக்கு மத்தியானம் வரைக்கும் தாங்கணும்" என்றான்.

ஆயிரம் ரூபாய் எதிர் பார்க்காத ஒன்று தான், ஐநூறு ரூபாய் தேறும் என்று நினைத்திருந்த இடத்தில் கூட ஐநூறு ரூபாய் என்பது மகிழ்ச்சியாய் இருந்தது, அப்பாவுக்கு மருந்து வாங்கிரலாம், சுந்தருக்கு தேர்வுக் கட்டணம் கட்டி விடலாம், வார வட்டி இருநூறு ரூபாயும் இளங்கோவுக்குக் கட்டி விடலாம் என்று நினைத்தபடி உள்ளே நடந்தான் மாறன்.

மருத்துவர் எழுந்து வெளி வாசலுக்கு வந்து "என்ன மாறா, அம்பலம் வரலையா இன்னைக்கு? சுத்தம் பண்ணீட்டியா? காசு வாங்கீட்டியா?" என்று பணத்தில் கண்ணும் கருத்துமாய் இருந்தார், வாங்கீட்டேன்யா, சுத்தம் எல்லாம் பண்ணி டிரஸ் பண்ணி இருக்கேன், தலை மட்டும் உடைச்சுக் கட்டீர வேண்டியதுதாய்யா". அடுத்த ஒரு மணி நேரத்தில் பிணத்தின் தலையையும், வயிற்றையும் உடைத்தும், பிதுக்கியுமாய் தனது ஆய்வை முடித்துக் கொண்டார் தலைமை மருத்துவர்.

விடிந்து விட்டிருந்தது, கொஞ்ச நேரம் சில அறிக்கைகளைத் தயார் செய்வதில் கவனம் செலுத்திய தலைமை மருத்துவர், ஐந்தரை மணிவாக்கில் கிளம்பிச் சென்றார், மாறன் அறையைச் சுத்தம் செய்து விட்டு கதவைப் பூட்டினான், மெல்ல நடந்தபடி ஒரு முறை ஆலமரத்தின் கிளைகளைப் பார்த்தபடி குனிந்த மாறனின் கண்களில் அரையிருட்டில் கருப்பாய் ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.

கொஞ்சம் முன்னே நகர்ந்து அருகில் சென்றபோது செத்துக் கிடந்தது கருப்பு நிறக் குட்டி நாயொன்று. நேற்று வரை இதே இடத்தில் மூன்று குட்டிகள் துள்ளிக் குதித்தபடி தங்கள் தாயின் மடியைச் சுற்றிச் சுற்றி வந்ததை மாறன் நீண்ட நேரமாய் ரசித்துப் பார்த்திருந்தான், மூன்று நாட்களாய்த் தேநீர் குடிக்கும் போது அந்த நாய்க்குட்டிகளுக்கும் கொஞ்சம் ரொட்டித் துண்டுகளைப் போட்டு அவற்றோடு விளையாடிப் பொழுது போக்கினான் மாறன்.

அதில் ஒரு நாய்க்குட்டி தான் இதுவாய் இருக்க வேண்டும், மாறனின் கால்கள் இப்போது தடுமாறியது, சொல்ல முடியாத துக்கம் அவனது தொண்டையில் உருள இறுக்கமாய் யாரோ கயிற்றால் கட்டுவதைப் போல உணர வைத்தது, இரண்டு அடிகள் முன்னே நகர்ந்த மாறனின் எதிரே இப்போது இறந்து போன அந்தக் குட்டியின் தாய் தென்பட்டது, தனது குட்டியின் இறப்பைத் தாங்க முடியாத துயரத்தில் அதன் அழுக்கடைந்த கண்களில் ஈரம் கசிந்து கொண்டிருந்தது.

tears10

மாறனைப் பார்த்து அவனருகில் வந்த அந்த நாய் தலையை உயர்த்தி வாலை ஆட்டியபடி ஒரு முறை ஊவென்று ஊளையிடத் துவங்கியது, தனது குட்டியின் உடலைச் சுற்றியபடி திரும்பத் திரும்ப ஊளையிட்டபடி அழுது கொண்டிருந்தது இருந்தது அந்த நாய், இனம் புரியாத வேதனையில் சிக்கி மாறன், மெல்ல நடந்து உயர்ந்து பருத்த ஆலமரத்தின் தண்டுப் பகுதியைப் பிடித்தபடி குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினான். அப்போது இரவு முற்றிலும் களைந்து வெளிச்சம் எங்கும் பரவி இருந்தது.

*************


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்