கை.அறிவழகன் எழுதியவை | பிப்ரவரி 13, 2012

சாலமோன் மாமாவின் வீட்டில் சில ஸ்கூப் பறவைகள்……….

2290010-454586-a-car-on-the-mountain-road-in-valley-of-pamirs

இடம் பெயர்ந்து சென்ற பிறகு மூன்றாவது முறையாக நான் இங்கே வருகிறேன், மலைப்பாதையில் ரப்பர் சாலை அமைத்திருக்கிறார்கள், நாங்கள் பயணம் செய்த கார் எந்தச் சிரமமும் இல்லாமல் மலையேறிக் கொண்டிருந்தது, அல்லெனும், கிறிஸ்டியும் பின்னிருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் அவ்வப்போது கேட்கும் கேள்விகள் எனது சாலையின் மீதான கூர்மையைக் கொஞ்சம் திசை திருப்பினாலும் கூட நாங்கள் ஒற்றை வழிப் பாதையில் சென்று கொண்டிருந்ததால் எனக்குப் பெரிய அளவில் சிக்கல்கள் இருக்கவில்லை,

நாங்கள் முதல் முறையாக இந்த மலையில் இருந்து நிரந்தரமாக இறங்கிச் சென்ற நாட்கள் எனது நினைவில் இருந்து அழிக்க முடியாதபடிக்கு ஒரு இறுக்கமான சுண்ணாம்புப் பூச்சைப் போல மனதில் இன்னமும் ஒட்டிக் கிடப்பதை எனது பிள்ளைகள் உணர மாட்டார்கள். அந்த நிரந்தரப் பிரிவின் நாளில், அப்பா தனது மோட்டார் வண்டியின் பின்புறத்தில் நிறையப் பொருட்களைக் கட்டி பெருத்த கவலைகளோடு வண்டியை ஓட்டினார், நான் முன்புற எரிபொருள் டாங்கின் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி வந்தேன்.

அம்மாவும், அக்காவும் சாலமோன் மாமாவின் ஜீப்பில் மீதமிருந்த தட்டு முட்டுச் சாமான்களையும், அப்பாவின் விவசாயக் கருவிகளையும் ஏற்றிக் கொண்டு பின்னால் வருவார்கள், அது ஒரு ஒளி மங்கிய மாலைப் பொழுதாக இருந்தது, உயர்ந்த சிவப்புப் பைன் மரங்கள் எங்களைப் பிரிய முடியாதபடி முரண்டு பிடித்துத் தலை அசைத்துக் கொண்டிருப்பதைப் போல நான் உணர்ந்தேன், சென்னாரைகளும், ஸ்கூப் பறவைகளும் வழக்கமாகத் தாங்கள் அடையும் கூடுகளை நோக்கிப் பறந்து கொண்டிருந்ததை என்னால் பார்க்க முடிந்தது, அவை இன்னும் எத்தனை நாட்கள் அதே மரங்களில் அடைய முடியும் என்று யாருக்கும் தெரியாது.

எங்களைச் சுற்றி மரங்களும், குருவிகளும் எப்போதும் நிரம்பிக் கிடந்தன, எங்களுக்கு நிறையக் கிழங்குகளும் பழங்களும் எப்போதும் கிடைத்தன, உணவு குறித்த பெரிய கவலையெல்லாம் எனக்கும் அக்காவுக்கும் இருக்கவே இல்லை, அம்மாவும், அப்பாவும் தோட்டத்தில் பயிர்களுக்கிடையில் வேலை செய்யச் செல்லும் நீண்ட பகல் பொழுதில் நானும் அக்காவும் மரங்களின் மிகப்பெரிய தண்டுகளுக்கிடையே சுற்றித் திரிந்து மரவள்ளிக் கிழங்கு, போமட்டன் கிழங்கு, ஆரஞ்சுப் பழங்கள் என்று வயிறு நிறையச் சாப்பிட்டு ஓடையில் மீனைச் சுட்டுக் கூடத் தின்றிருக்கிறோம், எங்களோடு இன்னும் நிறையச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த அந்த பகல் பொழுதுகளில் வெயில் மட்டும் அரிதாக எங்கள் மலைக்குள் எப்போதாவது வந்து போய்க் கொண்டிருந்தது.

எனது நீண்ட மௌனத்தை அல்லென் தனது கேள்வி ஒன்றால் கலைத்துப் போட்டான், "நாம் எப்போது வீட்டுக்குத் திரும்பப் போகிறோம் அப்பா?" என்கிற அவனது கேள்விக்கு நான் இப்படிப் பதில் சொல்லி இருக்க வேண்டும், "நாம் இப்போது தானே வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறோம் அல்லென்". ஆனால் நான் அப்படிச் சொல்லாமல் "இன்று மாலையே நாம் திரும்பலாம் அல்லென்" என்று சுருக்கமாகச் சொன்னேன், அவன் அதிக ஆர்வமில்லாத ஒரு பயணத்தை மேற்கொண்டிருப்பதாய் நம்பினான்,

வழக்கமாக நகரத்தில் நாங்கள் பயணம் செய்யும் போது அவன் கேள்விக் கணைகளால் என்னைத் துளைத்தெடுப்பான், "இது என்ன கட்டிடம்?, இதற்குள் என்ன இருக்கிறது?, இந்தத் தெருவின் பெயர் என்ன? இங்கே என்ன மாதிரியான கடைகள் இருக்கிறது?" என்று தனது கேள்விகளால் விடுமுறை நாளின் பயணச் சாலைகளை தனது சொற்களால் நிரப்பியபடி வருவான், இரவு வெகு நேரம் கழித்து அவன் உறங்கிப் போன பின்பும் கூட அவனது கேள்விகள் சில என்னைச் சுற்றிக் கொண்டே இருக்கும்.

அவன் மிகுந்த புத்திசாலியாக இருந்தான், அவன் இந்த மலைப் பகுதியின் குழந்தைகளைப் போலவே மற்ற உயிர்களின் மீது அன்பு செலுத்தும் ஒரு பழங்குடி இனத்தின் சொத்து என்று மனதுக்குள் நினைத்தபடி எங்கள் பயணம் தொடர்ந்தது, தனது தங்கைக்கு சில வறுத்த சோளப் பருக்கைகளைக் கொடுத்து விட்டு அல்லென் ஜன்னல் வழியாகத் தெரியும் வெட்டப்பட்ட மரங்களின் தண்டுகளைப் பார்த்துக் கொண்டே வந்தான், மரங்களை ஏற்றிச் செல்வதற்காக தொலைவில் கிளைத்துக் கிடக்கும் பாறைகளை உடைத்து உண்டாக்கப்பட்ட மண் சாலைகளில் ஊர்ந்து செல்லும் லாரிகள், பெரிய டிப்பெர் வண்டிகள் என்று அதிக சுவாரசியம் இல்லாமல் எங்கள் பயணம் மலைப் பாதையில் தொடர்ந்தது.

child-with-rabbit-1305155588

நாங்கள் சொமார்ட் பள்ளத்தாக்கைக் கடந்து மேலேறும் போது மரங்களும், ஓடைகளும் நிரம்பிய வழக்கமான மலைப் பாதைகள் என் கண்களுக்கு வெகு தொலைவில் தென்பட்டது, இடையிடையே குறுக்கிடும் ராணுவ சோதனைச் சாவடிகளில் நான் இறங்கிப் பெயரையும், பயணத்துக்கான காரணத்தையும் குறிப்பிட்டு எனது அடையாள அட்டையைக் காட்ட வேண்டியிருந்தது, நான் இந்த மலையின் மிகப் பழமையான மனித இனத்தவன் என்கிற எனது ஆழ்மனக் கிடக்கையை அவர்கள் துடைக்க முயல்வதாக நான் பெரும் கோபத்துடன் இருந்தேன்.

இந்த மலையின் எல்லாப் பகுதிகளுக்கும் நான் செருப்புக் கூட இல்லாத வெறும் கால்களுடன் சுற்றித் திரிந்திருக்கிறேன், இவர்களை விடவும், இன்னும் யாரையும் விட இந்த மலைப் பாதைகளில் சுற்றித் திரிவதற்கு உரிமை உள்ளவன் நான் என்பதில் எனக்கு தீவிர நம்பிக்கை இருந்தது. இருப்பினும் என்னால் இப்போது ஒன்றும் செய்ய முடியாது, அமைதியாக அவர்கள் சொல்கிறபடி கேட்கும் ஒரு சாதாரண மனிதனாக நான் இருக்க வேண்டியிருந்ததன் வலியை வேறு வழியின்றி போத்தலில் இருந்து தொண்டைக்குள் செல்லும் ஒரு திரவத்தைப் போல விழுங்கிக் கொண்டேன், அது எப்போதும் கீழிறங்க மறுத்து என்னை ஒரு பதட்டமடைந்த மனிதனாகவே வைத்திருந்தது.

நாங்கள் ஒரு மிக நீண்ட மதில் சுவரை ஒட்டிய சாலையில் இப்போது பயணிக்கத் துவங்கி இருந்தோம், அல்லென் இப்போது கொஞ்சம் தனது இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தான், "இந்த மதில் சுவர்களின் பின்னே என்ன இருக்கிறது அப்பா?" என்று கேட்டவனிடம், "நாம் சாலமோன் தாத்தாவின் வீட்டுக்குச் சென்றவுடன் உனக்கு எல்லாவற்றையும் சொல்கிறேன், அதுவரைக்கும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டே வா அல்லென்" என்று சொன்னேன். ஒரு முறை இருக்கையில் முழங்காலிட்டு ஏறி மதில் சுவர்களுக்குப் பின்னே ஏதேனும் தெரிகிறதா என்று பார்க்க முயன்றான் அல்லென், "அல்லென், காரில் பயணம் செய்யும் போது இப்படியெல்லாம் செய்யக் கூடாதென்று உனக்குத் தெரியும் தானே" என்று கேட்டேன், பதில் சொல்லாமல் அமர்ந்து மீண்டும் தனது இடுப்புப் பட்டையைக் கட்டிக் கொண்டு அமர்ந்தான் அல்லென்.

சரியாக நாங்கள் ஒரு திருப்பத்தில் திரும்பிப் பயணிக்கத் துவங்கியபோது, அந்தக் குன்று எனது கண்ணில் பட்டது, எனது மனம் ஒரு சிறு குழந்தையைப் போல இப்போது பரபரக்கத் துவங்கியது, ஆம், ஆம், இதே குன்று தான், இங்கே தான் நானும், அக்காவும், அந்த முயல் குட்டியைக் கண்டெடுத்தோம், அது சாம்பல் நிறத்தில் நடக்க முடியாதபடி, முட்கள் நிரம்பிய ஈச்சஞ் செடியின் ஓரத்தில் கிடந்தது, அது பிறந்து நான்கைந்து நாட்களே ஆன இளம் முயல் குட்டி என்பதை அக்கா உணர்ந்திருந்தாள், நாங்கள் சுற்றிலும் அதன் தாயைத் தேடித் பார்த்தோம், முக்கால் மணி நேரத் தேடலுக்குப் பிறகும் எங்களால் அந்தக் குட்டி முயலின் தாயைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

பிறகு ஒரு வழியாய் அதனை வீட்டுக்கு எடுத்துச் செல்வது என்று முடிவு செய்து பழங்களைச் சேகரிக்க நாங்கள் எடுத்துச் சென்ற கூடையினுள் வைத்துக் கொண்டு நடந்தோம், அதனுடைய சிவப்பு நிறக் கண்கள் தாயைத் தேடும் வலியை உமிழ்ந்து கொண்டிருந்தது, அம்மா, எங்கள் கைகளில் இருந்த பழக்கூடையை ஒரு முறை பார்த்து விட்டு, குட்டி முயலை நாங்கள் அதன் தாயிடம் இருந்து பிரித்து எடுத்து வந்து விட்டதாகச் சொல்லிக் கடிந்து கொண்டார், பிறகு அக்காவின் நீண்ட விளக்கத்துக்குப் பிறகு அந்த முயல் குட்டியை எங்கள் வீட்டில் வளர்க்க அவர் ஒப்புக் கொண்டார்.

1165789102EbgvyQ

அந்த முயல் குட்டியின் கால்கள் உரமடைந்து அது எங்களோடு தாவித் திரிகிற காலம் வரையில் அம்மா, தனது இன்னொரு பிள்ளையைப் போல அந்த சாம்பல் நிற முயல் குட்டியை வளர்த்து எடுத்தார், அப்பாவும் சில நேரங்களில் தனது காய்த்துப் போன கைகளால் அந்த முயல் குட்டியின் மெத்து மெத்தன்ற ரோமங்களை வருடிக் கொடுப்பார். பிறகொருநாள் எங்கள் நிரந்தரப் பிரிவின் போது நாங்கள் அந்த முயல் குட்டியை மலை மேலேயே விட்டுப் வர வேண்டியிருந்தது.

சாலமோன் மாமா வீட்டில் அம்மா, முயல் குட்டியையும், சில கோழிகளையும் கொடுத்து விட்டு "நகரத்தில் இதுகளையெல்லாம் வளர்க்க முடியாது அண்ணா, இந்தப் பிள்ளைகள் தான் பாவம், என்ன செய்ய?" என்று முனகியபடி விடை பெற்றார், அக்காவின் கண்களில் பனித்திருந்த நீர்த் திவலைகள் எங்கள் பிரிவின் துயரை அன்று மாலையில் மலை முகடுகளில் மழையாகப் பெய்து எதிரொலித்தன.

மதில் சுவரின் நீளத்தைத் தாண்டி இப்போது அந்த மிகப் பெரிய கட்டிடத்தின் முகப்பு எனது கண்களில் தெரியத் துவங்கியது, இந்த தேசத்தின் பெருமைக்குரிய சின்னமாக அது விளங்கிக் கொண்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்னதாகத் தொலைக்காட்சியில் உரையாற்றிய அமைச்சர் ஒருவர் உளறிக் கொட்டியது என் நினைவில் வந்தது.

எத்தனை பெரிய கட்டிடமாக இருந்தாலும், அதற்குள்ளாக என்ன உருவாக்கினாலும் அக்காவின் கண்களில் இருந்து பறிக்கப்பட்ட அந்த மகிழ்ச்சியான தருணங்களைத் திருப்பிக் கொடுக்க முடியாது என்பது எனக்குத் தெரியும். அவளது இளமைக் காலங்களில் அக்காவிடம் மண்டிக் கிடந்த புன்னகையின் சுவடுகளை அன்றைய நாளின் இரவில் இருந்து திருமணமாகிப் போகும் வரையில் என்னால் திரும்பக் கண்டடையவே முடியாமல் போனது குறித்து அந்த சுருள் மண்டை அமைச்சனுக்குத் தெரியாது.

அல்லென் இப்போது கொஞ்சம் அவனுடைய இயல்பு நிலைக்குத் திரும்பி இருந்தான், நாங்கள் காட்டை அழித்து பள்ளத்தாக்கின் ஊடாகப் பொட்டலில் கட்டப்பட்டிருந்த அந்த பிரம்மாண்ட கட்டிட வளாகத்தையும், அதன் மதில் சுவற்றையும் கடந்து வெகு தூரத்தில் இருக்கும் சாலமோன் மாமாவின் வீட்டுக்கு வந்திருந்தோம், வெளி வாசலில் உயர்ந்து கொஞ்சம் உட்புறமாய்ச் சாய்ந்திருந்த நீலப் பூ மரத்தின் தண்டுக்கருகில் நாற்காலியைப் பரப்பி ஓய்வாக அமர்ந்திருந்த சாலமோன் மாமாவைப் பார்த்ததும் அடுப்பில் வைக்கப்பட்டிருக்கும் பால் சட்டியின் மேற்புறமாகப் பொங்கும் நுரையைப் போல எனக்குள் மகிழ்ச்சி பெருகியதை உணர முடிந்தது.

tribes

காரைப் பார்த்ததும் சாலமோன் மாமா எழுந்து தனது நடக்க இயலாத இடது காலை இழுத்தபடி எங்களை நோக்கி வந்தார், அல்லென் நின்று கொண்டிருந்த இடத்தில் நின்று முழங்காலிட்டு அமர்ந்தவர், குழந்தைகளை அணைத்து தனது தோளில் சாய்த்துக் கொண்டு இப்படிச் சொன்னார், "இந்தக் கிழவனைப் பாக்க இப்போதான் நேரம் வந்ததா பிள்ளைகளா?", அவர் பிள்ளைகளா என்று என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறார் என்பது எனக்குத் தெரியும், குழந்தைகளுக்குத் தெரியாது, இரை தேடிச் சென்று திரும்பி கூட்டுக்குள் இருக்கும் தனது குஞ்சுகளைப் பார்த்து மகிழும் ஒரு தாய்ப் பறவையின் சிறகுகளுக்குள் பொதிந்த வெம்மை அந்த மலைத் தோட்டத்தின் காற்றில் அப்போது பரவியது. மரவள்ளிக் கிழங்கோடு கொஞ்சம் திணைமாவும், பயறும் கலந்து சாலமோன் மாமாவின் வீட்டில் பரிமாறப்பட்ட பகல் உணவை ருசித்துச் சாப்பிட்ட அலெனை நான் வியப்போடு பார்த்தேன்.

நாங்கள் எல்லோரும் நிரந்தரமாய் இந்த மலையைப் பிரிந்த அந்தத் துன்ப நாளில் சாலமோன் மாமா பிடிவாதமாக நகரத்தில் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கும் மாற்றுக் குடியிருப்புக்கு வருவதை மறுத்து விட்டார், அரசின் மீது வழக்குத் தொடர்ந்து தான் தொடர்ந்து இந்த மலையின் மீது வாழும் உரிமையைத் தனக்கு அளிக்க வேண்டுமென அடம் பிடித்தார், பிறகு ஒரு வழியாய் அவர் பாதுகாப்பு எல்லைக்கு வெளியே இருக்கும் பகுதியில் வசிக்க அனுமதி அளித்தது அரசு. அன்றில் இருந்து இன்று வரையில் நகரத்தின் நியான் விளக்குகளில் கரைந்து காணாமல் போன இந்தப் பழங்குடிகளின் அடையாளமாய் சாலமோன் மாமா ஒருவரே இருக்கிறார்.

க்றிஸ்டியைத் தனது தோளில் தூக்கிக் கொண்டு, அல்லெனின் நடுவிரலைப் பற்றியபடி வீட்டின் பின்புறமாய் இருக்கும் ஆட்டுக்கிடை, கோழிக்கிடாப்புகள், முயல் வளைகள் என்று சந்தோசமாய் வெகு நேரம் சுற்றி அலைந்தார் சாலமோன் மாமா, வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் ஒரு வயதான கிழவரோடு அல்லென் ஒட்டிக் கொண்டு விட்டதை நான் கண்ணில் நீர் மலங்கப் பார்த்துக் கொண்டிருந்தேன், கருக்கலில் நாங்கள் வேறு வழியின்றி சாலமோன் மாமாவிடம் இருந்தும், அவர்களின் குடும்பத்தாரிடம் இருந்தும் விடைபெற வேண்டி இருந்தது.

எனது மண்ணையும், எனது மக்களையும் விடுத்து கண்காணாத இடத்தில் அளந்து கட்டப்பட்டிருக்கும் அந்த நகரத்துக்கு நாங்கள் திரும்ப வேண்டும், அல்லெனும், க்றிஸ்டியும் சாலமோன் மாமாவுக்கு முத்தங்கள் கொடுத்து விடை கொடுத்தார்கள், என்னையும் எனது பிள்ளைகளையும் நன்கு அறிந்து இந்த மலையில் வாழும் கடைசி மனிதர் சாலமோன் மாமா. இவருக்குப் பின்னால் இப்படி எங்களை வரவேற்கவும், உச்சி முகரவும் இனி ஒருவர் இருக்கப் போவதில்லை என்கிற நினைப்பு ஏனோ அந்த மாலையை மிகுந்த கனத்தோடு இருளாக்கியது.

nuclear-power-plant

நாங்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம், காரின் பின்புறமாய் உயர்ந்து எழுந்து இந்த நாட்டின் பெருமைக்குரிய சின்னமாய் விளங்கிக் கொண்டிருக்கும் எங்களை எங்கள் வீடுகளில் இருந்து துரத்திய, எங்கள் அன்பானவர்களைப் பிரித்த "மினேர்வா அணு மின் உற்பத்தி நிலையம்" கடந்து பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தது.

வழக்கம் போலவே எனது அமைதியை உடைத்து நொறுக்கினான் அல்லென், "அப்பா, நாம் எப்போது மீண்டும் இங்கே வருவோம்". காரை ஒரு முறை நிறுத்திப் பெருமூச்செறிந்து இப்படிச் சொன்னேன் நான், "நாம் எப்போதும் இங்கே தான் இருக்கிறோம் அல்லென்". அல்லெனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

************


மறுவினைகள்

  1. நன்றாக இருக்கிறது கதை.
    ஊரையும் உறவுகளையும் பிரிந்த ஏக்கங்கள் நிரந்தரமாய் எம்மிடையே உலாவ
    நிதர்சன உலகிற்குள் ஐக்கியமாகிவிட்டதாய் பொய்யாக நகர்கின்றது நம் வாழ்க்கை.

  2. தரமான படைப்பு, படித்து முடித்ததும் பெருமூச்சு விட வைத்தது, பிரிவு மனித வாழ்க்கையின் உறுதியான பிணைப்பல்லவா? என்ன செய்வது?

  3. The impact of this story is remarkable, Very rich language to understand easily, why dont you translate these in english and impress the western lobby. I dont think your writings will work out in Tamil literature world. I wish you to come in a great success.

    Regards
    Rangasamy Mati


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்