கை.அறிவழகன் எழுதியவை | ஏப்ரல் 26, 2012

முதலீட்டிய அரசியலில் அறமும், அறிவும்.

michael-hacker-capitalism

பல நாட்டுக்காரர்கள் அமர்ந்திருந்த ஒரு கூட்டத்தில் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, உங்களிடம் இரண்டு பசு மாடுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம், நீங்களும் உங்கள் அரசாங்கமும் அவற்றை வைத்து என்ன செய்வீர்கள்?, இதுதான் கேள்வி.

ஒரு மாட்டை நாங்கள் வைத்துக் கொள்ளலாம் என்றும் இன்னொன்றை பசு இல்லாத பக்கத்துக்கு வீட்டுக்காரர் வைத்துக் கொள்ளட்டும் என்றும் எங்கள் அரசாங்கம் சொல்லும் அதனை நாங்களும் ஒப்புக் கொள்வோம் என்று சீனர் சொன்னார்.

இரண்டு பசுக்களையும் எங்கள் அரசாங்கம் எடுத்துக் கொண்டு எங்களுக்குப் பால் கொடுக்கும் என்று ஒரு க்யுபாக்காரரும், வடகொரியரும் சொன்னார்கள்.

மூன்றாவது பசுவை எங்களுக்கு வழங்க வேண்டும் என்று நாங்கள் புரட்சி செய்வோம் என்று பிரெஞ்சுக்காரர் சொன்னார்.

மூன்றாவது பசுவை எங்களுக்கு வழங்க ஏராளமான கடனை வழங்கி வேறொரு நாட்டு விவசாயியின் பசு வளர்க்கும் உரிமையைப் பெற்று எங்கள் அரசாங்கம் அந்தக் கடனைச் சரி செய்யும் என்று ஒரு அமெரிக்கர் சொன்னார்.

பசுவின் உருவத்தைப் பத்தில் ஒன்றாகச் சுருக்கி அதன் பால் கொடுக்கும் திறனை இருபது மடங்காக உயர்த்தி கௌக்கிமேன் என்று ஒரு புதிய பசு இனத்தை எங்கள் அரசாங்கம் உருவாக்கும், அதற்கு நாங்கள் இரவு பகல் பாராது உழைப்போம் என்று ஒரு ஜப்பானியர் சொன்னார்.

எங்கள் அரசாங்கத்திடம் 50000000000 பசுக்கள் இருக்கிறது, அவற்றில் ஒன்றும் எங்களுக்குச் சொந்தமானதில்லை, அவற்றை வளர்ப்பதற்காக கிடைக்கும் பணத்தில் எங்களுக்கு எல்லாமே கிடைக்கும் என்று ஒரு ஸ்விஸ் நாட்டுக்காரர் சொன்னார்.

நீங்கள் பசு வைத்திருந்தால் புலி ஊருக்குள் வரக்கூடும் என்று இரண்டு பசுக்களையும் எங்கள் அரசாங்கம் எடுத்துக் கொண்டு பாலைக் கறந்து அதில் விஷம் கலந்து தமிழர்களிடம் விற்று விடும் என்று இலங்கையர் ஒருவர் சொன்னார்.

கடைசியாக இந்தியரின் முறை வந்தது, முதலில் எங்களிடம் இருக்கும் இரண்டு பசுக்களையும் நாங்கள் சரியாக வழிபடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பசுவுக்குச் சொந்தமான பாலை நாம் கறப்பது குற்றம் என்று அறிவித்து அமெரிக்காவில் இருந்து பாலை இறக்குமதி செய்ய சிறப்பு வரி விதித்து இது "புனிதப் பசுக்களின் நாடு" என்று எங்கள் அரசாங்கம் அறிவித்து விடும் என்று சொன்னார்.

நகைச்சுவையாக இருந்தாலும் சில திறப்புக்களைக் கொண்டிருந்த பொருளாதாரத் தத்துவங்கள் குறித்த வேடிக்கையான கதை இது.

அறம் சார்ந்த அரசியலும், அறிவு சார்ந்த அரசியலும் ஒரு மரத்தின் இருவேறு கிளைகள், ஆனால் அறமும், அறிவும் வெவ்வேறு மரங்கள், இப்படித்தான் நாம் அறம் சார்ந்த அரசியலையும், அறிவு சார்ந்த அரசியலையும் புரிந்து கொள்ள முடியும்.

அரசியலுக்குள் செல்வதற்கு முன்னராக நாம் அறம் குறித்தும், அறிவு குறித்தும் ஒரு தெளிவான முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது, அறிவு ஒரு மனிதனிடம் உள்ளீடு செய்யப்படுகிறது, மாறாக அறம் ஒரு மனிதனிடமிருந்து வெளியிடப்படுகிறது, அறம் ஒரு மனிதனின் உள்ளார்ந்த உணர்வாக தன்னை இன்னொரு உயிராக சிந்திக்க வைக்கிறது, மாறாக அறிவு ஒரு மனிதனின் சூழலில் இருந்தும், அவனது கல்வியில் இருந்தும் பெறப்படுகிறது.

பல நேரங்களில், அறத்தை அறிவு அடித்து விழுங்குகிறது, தன்னலம் சார்ந்த வாழ்வியலைக் கற்றுக் கொடுக்கிறது. இன்றைய முதலீட்டிய உலகின் கல்வி முறை முற்றிலுமாக விளிம்பு நிலை மனிதர்களைப் புறம் தள்ளி மேட்டுக் குடியினருக்கான உலகைப் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது, அறிவின் பெரும்பகுதியை இன்றைய கல்வி முறையும், வளர்ப்புச் சூழலும் முடிவு செய்யும் நிலையில், நாம் அரசியலில் அறிவு சார்ந்த நிலைப்பாட்டை எடுப்போமேயனால் அது இவ்வுலகின் நிலைத்தன்மையைக் குலைக்கும் என்பதில் ஐயமில்லை.

அரசியல் என்பது சமூகக் கட்டமைப்பின் குறைகளைக் களையவும், நீதியை நிலைநாட்டவும், அமைதியைப் பேணவுமே தோற்றப்பாடு கொள்கிறது, இந்த மூன்றின் திறவு கோலாக சமூக அறமே இருக்க முடியும், தனி மனித அறம் என்று சொல்லப்படுகிற எந்த சொல்லாடலும் தனி மனிதனின் அறிவு குறித்தே நிலை கொள்கிறது.

மாறாக அறம் ஒரு மனிதனுக்கும் (உயிருக்கும்), இன்னொரு மனிதனுக்கும் இடைப்பட்ட உறவிலேயே துவக்கம் கொள்கிறது, இன்னொரு மனிதனின் வாழ்வியலில் இருக்கும் சிக்கல்களை உணர்ந்து அவற்றைக் களைய முனையப்படும் எந்த ஒரு முயற்சியுமே சமூக அறம் எனப்படுகிறது, ஆகவே தனி மனித அறம் என்பது சமூக அறம் என்றே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

Capitalism-sell-ur-soul2

மிகச் சுருக்கமாக ஒரு எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டுமென்றால், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பல்லாண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மனிதர்களைத் தூக்கிலிட வேண்டும் என்று சொல்வது அறிவு சார்ந்த அரசியல் என்றால், சட்ட திட்டங்களைக் கடந்து அந்த மனித உயிர்களின் மீது அன்பு செலுத்தி அவர்களை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என்று சொல்வது அறம் சார்ந்த அரசியல்.

இன்றைய முதலாளித்துவ உலகின் அறிவு சார்ந்த அரசியல், அது செய்யும் கல்வி எல்லாம் சேர்ந்து ஒரு தனி மனிதனை என்ன செய்தேனும் பொருள் சேர்ப்பதில் முன்னிலை பெற்ற மனிதனாக மாற்றி விடக் கங்கணம் கட்டிச் செயல்படுகின்றன, இன்றைய சமூகத்தில் பெரும்பான்மையான பெற்றோரும், மாணவரும் மிகப் பெரும் பணக்காரனாக எந்தக் கல்வி சிறந்தது என்றே பயணம் செய்கிறார்கள்.

அறிவு சார்ந்த அரசியல் இப்படியான ஒரு முதலாளித்துவ உலகைக் கட்டமைப்பதில் தான் முனைப்புடன் செயல்படுகிறது, மாறாக அறம் சார்ந்த அரசியல் என்பதும், அது உருவாக்கும் கல்வி என்பதும் உணவும், உறைவிடமும் இல்லாமல் வாழ்க்கையை எதிர் கொள்ளும் எனது சக சமூக மனிதனுக்கு நானும், எனது கல்வியும், அரசியலும் எந்த விதத்தில் பயன்பட முடியும் என்று ஆழமாகச் சிந்திக்கிறது.

அறிவு சார்ந்த அரசியல் என்பது ஒரு புறம் பெரும் பணக்காரர்களை உருவாக்கிக் கொண்டே பயணிக்கிறது, அந்தப் பயணத்தின் கீழ் நசுக்கப்படும் விளிம்பு நிலை மக்களைக் குறித்த எண்ணங்களைத் தோற்றுவித்து அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பது அறம் சார்ந்த அரசியல். இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு உயிரும் நம்மைப் போலவே வாய்ப்புகளையும், வசதிகளையும் பெற்று வாழும் தகுதி உடையது என்கிற அடிப்படை அறத்தில் இருந்தே உலகம் தழைக்கிறது,

மாறாக இன்றைய அறிவு என்பது பொருள் ஈட்டி மற்றவரை முந்திச் சென்று வசதியாக வாழும் பண்ணை முதலாளிகளை உருவாக்கி விடுகிறது, அறிவு என்கிற சொல்லாடலின் புரிதலே மழுங்கிப் போய் வாழ்வதற்குப் பயன்படும் கருவியே அதுவென்று மாற்றம் கொண்டு விட்டது, மாறாக அறமே அறிவாக நமது குழந்தைகளுக்கு உணர்த்தப்படுமென்றால் சமநீதியும், சம வாழ்நிலையும் கொண்ட உயர் தனிச் சமூகத்தை நம்மால் படைக்க முடியும்.

ஒரு ஆப்ரிக்க நாட்டில் உள்ளரங்கு விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயம் நடந்து கொண்டிருந்தது, கடும் போட்டியாளர்கள் என்று சொல்லப்படுகிற இரு வீரர்கள் போட்டியிட்டார்கள், மிக நெருக்கமாக ஓடிக் கொண்டிருந்த போது முதலாவது வீரன் கம்பத்தினால் தடுக்கப்பட்டுக் கீழே விழுகிறான், பின்னால் வந்து கொண்டிருந்த இரண்டாவது வீரனுக்கான சரியான வாய்ப்பு அது, நீண்ட காலமாக முதல் வீரனை வெல்ல வேண்டுமென்ற வெறியைத் தனித்துக் கொள்ளலாம்.

ஆனாலும் பார்க்கிறான் இரண்டாமவன், கீழே விழுந்தவனின் தலையில் காயம்பட்டிருக்கிறது, கடும் ரத்தப் போக்கு உருவாக்கி இருக்கிறது என்பதை அறிகிறான், உடனடியாக நின்று தன்னுடைய கையுறைகளைக் கழற்றி அவனது தலையில் அழுத்திப் பிடித்துக் கொண்டு அவனது ரத்தப் போக்கைக் குறைக்கிறான், பிறகு காப்பாற்றப்படுகிறான்.

மருத்துவர்கள் ரத்தப் போக்கை உடனடியாக நிறுத்தி இருக்கவில்லை என்றால் அவன் மரணித்திருப்பான் என்று சொல்கிறார்கள், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவனையும், பதக்கம் வென்றவர்களையும் இந்த உலகம் நினைவில் கொள்ளவில்லை, இரண்டாம் விளையாட்டு வீரனுக்கு வழங்கப்பட்டிருந்த அறிவு தொடர்ந்து ஓடு, இலக்கைத் தவிர எதனையும் நோக்காதே என்கிறது, ஆனால் அவனுக்குள் கிடந்த அறம் சக மனிதனை மரணத்தில் இருந்து காப்பாற்று என்கிறது. இதுதான் அறிவுக்கும், அறத்துக்கும் என்றைக்கும் இருக்கிற வேறுபாடு. இது அரசியலுக்கும் பொருந்தும், சமூகவியலுக்கும் இன்னும் எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

பொருள், மனித சமூகத்தை முழுமையாகக் கட்டுப்படுத்தும் காரணியாக சிலரால் அறியப்படுகிறது, பொருளைத் தாண்டி அதனை நோக்கி மனிதனை உந்தும் இயல்புணர்ச்சிகள் இந்த மனித சமூகத்தை ஆளுமை செய்கிறது என்று சொல்பவர்களும் அதற்கான தங்கள் அழுத்தமான காரணங்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

மனித இயல்புணர்வுகளும், பொருளும் இன்பங்களையும், துன்பங்களையும் வழங்கும் இன்றியமையாத காரணிகள் என்பதை இருசாரரும் ஒப்புக் கொள்கிறார்கள். மார்க்சியம் பொருளை மையப்படுத்துகிறது, ஹேகலின் உணர்வுகளால் கட்டமைக்கப்படும் கோட்பாடுகள் பொருளை இரண்டாம் நிலையிலும், மனித இயல்புணர்வுகளை முதலாவதாகவும் சித்தரிக்க முயல்கிறது.

தத்துவங்களைக் கண்டறிய இயலாத, கோட்பாடுகளின் உட்பொருளை விளங்கிக் கொள்ள இயலாத தனிப் பொருளாக வாழ்க்கை சிலருக்கு அச்சத்தில் உறைந்து போய்க் கிடக்கிறது, அப்படித்தான் காரணங்கள் தெரியாமல் எதற்காக மரணிக்கிறோம் என்பது தெரியாமல் இந்த நாகரீக உலகில் குழந்தைகள் போரினால் இறந்து போகிறார்கள், குழந்தைகளின் இறப்பிலும் தத்துவங்களைத் தேடி அல்லது கோட்பாடுகளை உள்ளீடு செய்து நம்மைப் போன்றவர்களின் உலகம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டே இருக்கிறது.

காரணங்கள் எதுவும் தேவைப்படாத கள்ளமற்ற சிரிப்பையும், தாயின் மடிப் பாலுக்கு அழுகையையும் மட்டுமே அறிந்த குழந்தைகள் உலக அரசியலுக்காக, இனங்களின் வெற்றி முழக்கதிற்காக, நிலப்பரப்புகளின் எல்லை விரிவாக்கத்திற்காக, அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் அடங்கி இருக்கும் மதிப்புக்காகக் கொல்லப்படுகிறார்கள், அவர்களின் கொலை நிலங்களின் மீது கட்டமைக்கப்படும் கல்லறைகளில் எந்த வெட்கமும் இன்றி மனிதர்கள் பல நிறக் கொடிகளை நட்டு வைத்து நடனமாடுகிறார்கள்.

நாகரீகம் தழைத்து வாழ்கிறது என்று மேடைகளில் உலகத் தலைவர்கள் முழக்கமிடுகிறார்கள், முடிவில் ஆயுதங்களை வாங்குவதும், விற்பதுமான தங்கள் உயர் நாகரீகச் சந்தைகளை அறிமுகம் செய்வதற்கும், அவற்றில் நிகழும் மோதல்களைச் சரி செய்வதற்குமான உடன்பாடுகளின் பெயரில் சபைகளை அமைக்கிறார்கள்.

2779189650101688296S600x600Q85

உழைப்பும், அதன் மதிப்பும் பொருளாதாரத்தை உறுதி செய்கிற காரணிகளில் மிக இன்றியமையாதன. உழைப்பில் இருவேறு பக்கங்களாய் உடல் சார்ந்த உழைப்பும், மனம் சார்ந்த மூளை உழைப்பும் திகழ்கின்றன. பொருளாதாரக் கோட்பாடுகளில், சித்தாந்தங்களில் சொல்லப்படுவதைப் போல உடல் உழைப்பிற்கும், மூளை உழைப்பிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, இவை இரண்டுக்குமான சமநிலையில் மட்டுமே உலகம் இயங்க முடியும்.

மூளை உழைப்பாளர்களின் கொள்கை வகுப்புக்களை முன்னெடுக்க உடல் உழைப்பும், உடல் உழைப்பின் சிரமங்களைக் குறைக்க மூளை உழைப்பின் தேவையும் ஒன்றை ஒன்று சார்ந்தே இருக்க முடியும்.. ஆனால், பொருளாதார உலகமயமாக்கலில் இவ்விரு உழைப்பிற்குமான மதிப்பில் மிகப் பெரிய வேறுபாடு உருவாக்கப்பட்டது. அதாவது மூளை உழைப்பாளர்களின் மதிப்பு, உடல் உழைப்பாளர்களின் மதிப்பை எண்ணிப் பார்க்க இயலாத அளவிற்கு உயரத்தில் கொண்டு வைத்தது.

உயிரியக்க இயல்புணர்வுகளும், பொருளும் இணையும் போதே இரண்டுக்குமான தேவைகள் நிறைவடைகிறது, உயிரியக்க இயல்புணர்வுகளே தேவைகளை நோக்கி மனிதனைத் தள்ளி விடுகிறது, தேவைகளை நோக்கித் தள்ளப்பட்ட மனிதன் பொருளைத் தேடி ஓடுகிறான், வழியில் சந்திக்கும் இடர்களை எப்படி வெற்றிகரமாகச் சமாளிப்பது என்று பொருளீட்டலில் வெற்றி கண்ட முன்னோடி மனிதன் பாடம் சொல்கிறான்.

அறிவு அதற்கானதென்று அவனுக்கு முதலீட்டியக் கல்வி முறை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது, முடிவில் தனது விரிந்த எல்லைகளைக் காக்கவும், பரந்த தேசங்களை நிலை நிறுத்தவுமாய் கூட்டம் கூட்டமாய்க் கொலைகளைச் செய்யும் படையணிகளை நாகரீகத்தின் ஒரு பகுதி என்று மனிதன் நம்பும் அளவிற்கு முதலீட்டியம் அவனை அறத்தின் வழியிலிருந்து வெகு தொலைவு வழி நடத்தி இருக்கிறது.

மிகுந்த சினத்தின் காரணமாக உணர்வு வயப்பட்ட மனிதன் ஒருவன் நிகழ்த்தும் குழந்தைக் கொலை ஒன்றை மிகப்பெரிய குற்றமாகவும், தலைப்புச் செய்தியாகவும் சொல்லும் முதலீட்டிய அரசுகளும், ஊடகங்களும் சீருடை அணிந்த படைகளால் கூட்டம் கூட்டமாய்க் கொல்லப்படும் குழந்தைகளைக் கண்டு கொள்வதில்லை.

நில எல்லைகளும், பொருள் குவிப்பு மையங்களும் முதலீட்டியத்தின் மிகப் பெரிய பலமாக இருப்பதால், என்ன விலை கொடுத்தேனும் இவற்றைக் காத்துக் கொள்ள முதலீட்டிய அரசுகள் போர் புரிகின்றன. ஏனைய உயிரினங்களின் உயிரும், எளிய உழைக்கும் எளிய மக்களின் உயிரும் முதலீட்டியத்தின் உதிரிப் பாகங்களைப் போல இந்த உலகில் நிலை கொண்டிருப்பது தான் முதலீட்டியத்தில் நாம் கண்டடைகிற இறுதிச் சிக்கல்.

புவி வெம்மையடைதல், எரிபொருட்களின் இருப்புத் தீருதல், வளிமண்டலத்தில் ஓட்டை விழுதல், காடுகளைத் தொடர்ந்து அழித்தல், பல்வேறு ஆயுதங்களால் போர் நிகழ்த்தி பெண்களையும் குழந்தைகளையும் அழித்தொழித்தல், அறிவென்ற பெயரில் முதலீட்டியச் சிந்தனைகளை வளர்த்தெடுத்தல், சக மனிதன் அல்லது உயிர் குறித்த எந்தத் தீவிர உணர்வுகளும் இல்லாது தன் வழியில் பயணித்தல், தேவைக்கும் மிக அதிகமான சொத்துச் சேர்த்தல், அதையே வெற்றி என்று கொண்டாடும் அரசுகளை உருவாக்குதல் என்று முதலீட்டியம் தத்துவ விளக்கங்களில் இருந்தும், மனித அறத்தில் இருந்தும் வெளியேறி வெகு காலம் ஆகி விட்டது. முதலீட்டியக் கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாத மனிதக் குழுக்களையும் கூட தனது அசுர பலத்தால் வெற்றி கொண்டு வாகை சூடி இருக்கும் முதலீட்டிய அறிவில் இருந்து நமது குழந்தைகளைக் காக்க நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வியே இறுதியில் தொக்கி நிற்கிறது.

484px-Anti-capitalism_color

"சீனர்களும், இந்தியர்களும் அதிக அளவில் மகிழுந்துகளை வாங்கிக் குவிப்பதால் தான் உலகில் எரிபொருள் வேகமாகத் தீர்ந்து வருகிறது" என்று சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கக் அதிபர் "பாரக் ஒபாமா" சொன்னது ஏனோ இந்த நேரத்தில் நினைவுக்கு வருகிறது, முதலீட்டியம் இதே வேகத்தில் பயணிக்குமேயானால் இன்னும் சில நாட்களில் அவர் இப்படியும் சொல்லக் கூடும்.

"சீனர்களும், இந்தியர்களும் அதிக அளவில் உலகில் உயிர் வாழ்வதால் தான் எல்லாமே விரைவில் தீர்ந்து வருகிறது."

எவர் கண்டது, இதன் மறைமுகப் பொருள் இதுவாகவும் இருக்கலாம், "உபரி மனிதர்களை எல்லாம் போட்டுத் தள்ளு, முதலாளிகளுக்கான உலகத்தைக் காப்பாற்று."

                                          ***********


மறுவினைகள்

  1. எவர் கண்டது, இதன் மறைமுகப் பொருள் இதுவாகவும் இருக்கலாம், “உபரி மனிதர்களை எல்லாம் போட்டுத் தள்ளு, முதலாளிகளுக்கான உலகத்தைக் காப்பாற்று.” அட்டகாசம்.. உண்மைதான்..நல்ல காத்திரமான கட்டுரை..


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்