கை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 23, 2010

மலையுச்சியில் எரியும் விளக்குகள்.

Katmandu

திருபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் உங்களை வரவேற்கிறது என்கிற நேபாளத் தலைநகர் காட்மாண்டுவின் பலகையில் கொஞ்சம் பனி ஒட்டிக் கிடக்கிறது, அதன் முனைகளில் இருந்து உருகி வழிந்தோடிக் கொண்டிருக்கிறது இரவில் தேங்கிய குளிர். நேபாள் இன்னுமொரு இந்திய மாநிலம், நேபாளத்தின் வாழ்க்கையில் இந்தியக் கலாசாரத்தின் நெடியை என்னால் உணர முடிகிறது, அதாவது இந்தியாவின் நவீன மேற்க்கத்திய உள்வாங்கல்களை, தங்கும் விடுதியின் அறைகளில் கதகதப்பை மூட்டும் வெம்மை வழிகிறது, வெம்மையை வழங்கும் அடுப்பொன்றும் ஓரத்தில் கனன்று கொண்டிருக்கிறது, அந்த அடுப்பு நம் வீடுகளின் அடுக்களைகளில் ஒட்டு மொத்தக் குடும்பத்திற்காகவும் காலம் காலமாய் சமைத்துக் கொண்டிருக்கும் அம்மாவை ஏனோ எனக்கு நினைவுபடுத்தியது, வழக்கமான வாழ்க்கையின் அடிப்படைக் கடமைகளை ஒழுங்கு செய்வதற்கு ஒரு விடுதி தேவைப்படுகிறது, இல்லையென்றால் காட்மாண்டுவின் வீதிகளில் கூடத் தூங்கி விடலாம், சோழ மன்னனின் காலத்தில் இருப்பது போல ஒரு மாயத் தோற்றம் அது, குதிரைகளும் யானைகளும் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியவில்லை, அடுக்கடுக்காய் ஓடுகள் வைத்து வேயப்பட்ட கட்டிடங்கள், அரண்மனை மண்டபங்களைப் போலவே உயர்ந்து நிற்கும் மாடங்கள் நிறைந்த கோபுரங்கள், கல் மண்டபங்களில் உள்ளிருக்கும் பீடாக் கடைகள், சீனர்களை நினைவுறுத்தும் நேபாள மனிதர்கள், விடுதியின் சாளரங்களில் பனிப் புகையோடு இயங்கும் உலகம் மிக அழகாகவும், கண்களை உறுத்தாமலும் விரிகிறது. தூரத்தில் வெள்ளையும் பச்சையும் கலந்து எழில் கொஞ்சும் மலைச் சிகரங்கள் உலக இயக்கத்தின் உயர்ந்த உறுப்பினர்களைப் போல புன்னகை புரிந்த படி விழிகளின் கருமை நிற ஆடிகளைக் குறுக்குகிறது. குறுகி விரியும் கண்களில் செங்கொடிகளும் பட்டொளி வீசுவது கூடுதல் அழகு.

விடுதியில் இருக்கும் போதே ஒரு அழைப்பு, சீன தேசத்தின் நுழைவுச் சீட்டைப் பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அனேகமாக அது நாளை தான் கிடைக்கும் என்றும் பயணத் துணையாளர் சொல்கிறார், ஒரு நாள் தள்ளிப் போவது பயணத் திட்டத்தில் மிகப் பெரிய மாறுதல்களை உண்டாக்கும் என்பதால் என்ன செய்வது என்று அவரிடமே ஆலோசனை கேட்டேன், அவர் காத்மாண்டுவில் சில பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது அவற்றை நாம் சுற்றிப் பார்க்கலாம் என்றும் சொல்கிறார் நண்பர், இது நிரலில் கடைசி இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு வந்து விட்டது.சுயம்புநாத் கோவில் காட்மாண்டுவின் ஒரு மலைக்குன்றின் மேலிருக்கிறது, இந்தக் மலைக் கோவிலின் மீது நின்று பார்த்தால் ஒட்டு மொத்தமாக நேபாள நாட்டையே பார்த்து விடலாம் போலிருக்கிறது, பௌத்த மதம் சார்ந்த மக்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள் இந்த மலையில், சுற்றிலும் விண்ணையும் மண்ணையும் இணைக்கும் மழைத் தொடர்கள் சூழ நேபாள மக்களின் வாழ்க்கை தொலைவில் அழகாகத் தெரிகிறது.

nepali-girl

தொலைவு மனிதர்களின் இயக்கத்தில் இருக்கும் சிக்கலான பொருட்தேவைகளை மறைக்கிறது, அருகில் செல்லச் செல்ல வலி நிறைந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கையும், விவசாயிகளின் வாழ்க்கையும் திரை போல் விரிகிறது, கந்தல் உடைகளை அணிந்து கொண்டு தங்களின் அன்றாட உணவுத் தேவைக்காக நமது சுமைகளைச் சுமக்கக் காத்திருக்கும் எளியவர்கள், எந்த மூலதனமும் இல்லாத தங்களின் உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாய்க் கொண்ட மனிதர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறார்கள், இவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் தாங்கள் தான் இவர்களுக்கு உணவளிப்பதாகவும், வேலை வாய்ப்பளிப்பதாகவும் உணர்கிறார்கள், இந்த உடல் உழைப்பின் கொடுக்கப்படாத கூலிப் பணம் பல நாட்டு வங்கிகளில் எந்தப் பயனும் அற்று உறங்கிக் கிடக்கிறது, இந்திய தேசத்தின் உணவுக் கிடங்குகளில் அழுகி நாற்றமெடுக்கும் பயனற்ற உணவைப் போலவே. அங்கே இன்னும் பல கோவில்கள் இருக்கிறது, கோவில்களின் அருகே வாழும் பூக்காரப் பெண்கள் இருக்கிறார்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள், ஏமாற்றும் பூசாரிகளும், கள்ளமற்ற சிரிப்பைத் தன பொக்கை வாயில் அள்ளி வழங்கும் கிழவிகளும், சில ஆடுகளும், மரங்களும், மலர்களும், வயிறு பெருத்த ஒரு பூனையும், பழைய கடையொன்றின் இடைச்சுவற்றில் ஓடும் அணிலும் எல்லாமுமாய் அவர் அவருக்கான உலகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உலகம், நான் காண்கிற இந்த மழைக் கோவிலின் காட்சிப் பிம்பம், என் பக்கத்தில் நின்று ரசிக்கிற ஜெர்மானியனுக்கு எப்படித் தெரியும்? இந்தக் கேள்விக்கான விடை கிடைத்து விட்டால் பின்னர் மனிதன் ஏன் கோவில் வாசல்களில் திரிந்தலைகிறான். தனக்குத் தெரியாத விஷயங்களை மனிதன் கடவுள் என்கிற ஒரு பிம்பத்தின் காலடியில் கொட்டி விடுகிறான், தனது குழப்பங்களை எளிதாகக் கடக்க மனிதன் ஒரு புதிய குழப்பத்தை உருவாக்கி விட்டு அதன் பின்னே ஒளிந்து கொள்கிறான்.

எனக்கு வாழ்க்கையைப் பற்றிய குழப்பங்கள் இல்லை, மனிதர்களைப் பற்றிய குழப்பங்கள் தான் நிறைய, ஆகவே எனது பயணங்களில் எப்போதும் கோவில் கருவறைகள் மனித உள்ளங்களில் நிறைவு கொண்டு விடுகிறது.

என்னோடு கூட வந்த நண்பர்கள் கோவிலுக்குள் என்னை அழைக்கையில் நான் பல இதுவரை பார்க்காத மனிதர்களைக் கண்டு ரசித்திருந்தேன், ஏறக்குறைய முகம் சதுரமாய் இருக்கிற நேபாளியர்கள், கண்களில் இருந்து துவங்கி வாய் வரை கோடு போல் வரையப்பட்ட தோல் சுருக்கம் கொண்ட பௌத்தத் துறவிகள், இப்படி மனிதர்களை அருகில் பார்ப்பது ஒரு அளப்பரிய கலை, பறவை பார்த்தல் என்று விலங்கியலில் சொல்வார்கள், அது போல மனிதர்களைப் பார்ப்பதும், அவர்களின் முக அசைவுகளை, உணர்வுகளை உற்று நோக்குவதும் ஒரு அழகிய கலைதான். அன்பு, இரக்கம், கோபம் என்று உணர்வுகள் எல்லா மனிதர்களின் முகங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் வெளியாகிறது.

Nepal Nim

பக்கத்துக்கு இறக்கத்தில் ஒரு குடில், அதன் அருகே ஒரு தோட்டம், மஞ்சள் மலர்கள் நிரம்பிக் கிடக்கும் அந்தத் தோட்டத்தின் நடுவே தனியாக ஒரு குவளையை வைத்துக் கொண்டு எதையோ சேகரிக்கிறாள் ஒரு குட்டிப் பெண், அருகே சென்று அவளை உற்று நோக்குகிறேன் நான், அவள் மஞ்சள் மலர்களிடையே மலர்ந்திருக்கும் சிவப்பு நிறப் பூக்களின் மொட்டுக்களை மட்டும் அந்தக் குவளையில் சேகரிக்கிறாள், படிய நடு வகுப்பு எடுத்து சீவித் தன் கூந்தலைப் பின்னி இருக்கிறாள் அந்தச் சுட்டிப் பெண், பல வண்ணங்களில் வரி வரியாய் ஒரு குளிர்ச் சட்டை, கத்தரிப்பூ நிறத்தில் ஒரு சால்வை என்று அந்த மலர்த் தோட்டத்தில் அவள் மகிழ்ச்சியோடு மலர் பறிப்பது எத்தனை அழகாக இருக்கிறது, சுற்றிலும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள், அருவிகள், ஆறுகள், மனிதர்கள் என்று இயங்கிக் கொண்டிருக்கும் அந்தக் கணத்தில் எனது நண்பர்கள் கோவிலுக்குள் கண்டு வந்த இறையை நான் நேரில் கண்டு விட்டேன், அவளது சிரிப்பில் வாழ்க்கையின் பொருளும், நிறைவும் அடங்கிக் கிடக்கிறது. பெயர் தெரியாத அந்தக் குழந்தையின் மீது அப்போது எனக்குப் பொங்கிப் பெருகிய எல்லைகளற்ற அன்பைத் தானே நீங்கள் கடவுள் என்கிறீர்கள், உங்களுக்கு ஒன்றிரண்டு கடவுள், எனக்கோ ஊரெங்கும் கடவுளர்கள், புன்னகையோடும், உயிர்ப்போடும். என்ன உங்கள் கடவுளர்க்கு மதங்களும் சாதிகளும் உண்டு, எனது கடவுளர்க்கு அவை யாவும் இல்லை.

சரி, இனி பயணத்துக்கு வந்து விடுவோம், மனக்கமணா கோவில் என்று காத்மாண்டுவில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருக்கிறது, ஏழு கடல், ஏழு மலை தாண்டிப் போவதைப் போலவே சாலை வழியாக ஐந்து மணி நேரம் பயணம் செய்ய வேண்டும், ஒரு குறுக்கு வழி உண்டு, கம்பிகளில் ஓடும் வண்டியில் (CABLE CAR) பயணித்தால் ஒரு மணி நேரத்தில் போய் விடலாம் என்று சொன்னார்கள், குறுக்கு வழி மட்டுமில்லை, அழகான காட்சிகளுக்கு நீங்கள் சாட்சியாய் இருக்கலாம் என்றும் சொன்னதால் கம்பி வழிப் பயணம் என்று முடிவாகி விட்டது. உலகின் மிகக் கடினமான பயணமும், உலகின் மிக அழகான பயணமும் ஒன்றாகிப் போனதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான். ஏறி அமரும் வரையில் ஒன்றும் தெரியவில்லை, ஆறு பேர் பயணிக்கும் அளவில் ஒரு சிறிய உலோகமும், கண்ணாடியும் கலந்த பெட்டி என்று சொல்லலாம், இரண்டு இளம்பெண்கள், ஒரு முதியவர், நான், எனது நண்பன் ஒருவன், இன்னொருவர் நடத்துனரா? ஓட்டுனரா? தெரியாது, ஆனால் அவர் கையில் ஒரு கம்பியில்லாத் தொடர்பு சாதனம் இருக்கிறது, ஒரு ஐந்து ஆறு நிமிடங்களில் குனிந்து கீழே பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி உயரம் இருக்கும், தலை கீழே பயணிப்பது போல இருக்கிறது, இரண்டாயிரம் அடி உயரத்தில் கீழே ஒரு காட்டாறு ஓடிக் கொண்டிருக்கிறது, அதன் இரு மருங்குகளிலும் மனிதர்கள் நின்று கொண்டிருப்பது ஏதோ நமது வீட்டுச் சுவற்றில் எறும்பு ஊர்வது போலத் தெரிகிறது, பக்கத்தில் ஒரு சாலை, அதில் பயணிக்கும் மனிதர்கள் எத்தனை பாதுகாப்பானவர்கள் என்று தோன்றுகிறது, மெல்ல ஊர்ந்தபடி நகர்கிறது எங்கள் பறவை, "வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி" என்று வைரமுத்து இந்த வண்டியில் போகும் போது தான் எழுதி இருப்பரோ என்னவோ, அடுக்கடுக்கான புல்வெளிகள், எப்போதாவது தென்படும் வீடுகள், குழந்தையின் கைகளால் வரையப்பட்ட கோடுகளைப் போல வளைந்தும், நெளிந்தும் கிடக்கும் சாலைகள், குறுக்கிடும் பிடிக்க முடியாத மேகங்கள், தூரத்தில் தென்படுவதாகச் சொல்லப்பட்ட சென்றடையும் இடம், இவை யாவும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் உறுதியாகக் காணப்பெற வேண்டிய அழகிய காட்சிகள், அந்த ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய வைரமுத்துவும், அவரது அந்த வரிகளும் ஒரு நூறு முறையாவது நினைவுக்கு வந்திருக்கும். ஒரு வழியாக வைரமுத்து விடை பெறவும், நாங்கள் இறங்கவும் சரியாக இருந்தது.

nepal_headerfull

வழக்கம் போலவே, நிறைந்து வழியும் உழைக்கும் மக்கள், ஓய்வெடுக்க வந்திருக்கும் முதலாளிகள், அவர்களின் சொகுசு மகிழுந்துகள், அரக்கு நிறத்தில் உடை அணிந்து ஆராதனை செய்யும் பூசாரிகள், பக்தர்களின் பையை நோட்டமிடும் அவர்களின் கண்கள், மந்திர தந்திரங்கள், தாயித்து வைத்தியங்கள், நமது மக்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை போலத் தெரிகிறது நேபாளியர்கள், அன்றைய பொழுதும் கழிந்து இரவில் மீண்டும் விடுதி, வெந்நீரில் ஒரு குளியல் முடித்து உலகின் உயரமான நாடொன்றில் இன்றைய இரவின் கனவுகள் உலா வரப் போவதை நினைத்தபடி கண்கள் ஓய்வை விரும்புகின்றன. உறக்கம் காத்மாண்டுவைச் சுற்றி இருந்த பனியைப் போலவே உடலைத் தழுவிக் கொள்கிறது.மறுநாள் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பயணம் துவக்க வேண்டும், ஐந்து முப்பதுக்கு எங்களுடைய பேருந்து வந்து விடும் என்று பயணத் துணையாளர் சொல்லி இருந்தார், அந்தக் குளிர்க் காலை நேரத்தில் எழுந்து குளிப்பது அல்லது பயணிப்பது என்பது மிகக் கடினமானது, சாளரத்தின் திரைகளை விலக்கிக் கீழே பார்த்தால் மிதிவண்டிகளில் செய்தித் தாள் போடும் சிறுவர்கள், கடைகளுக்குப் பால் கொண்டு செல்லும் முதியவர்கள் என்று ஒரு உலகம் அந்த அதிகாலையில் தங்கள் உழைப்பைத் துவங்கி இருக்கிறது, உழைக்கும் மனிதர்களைப் பார்த்ததும் சொல்ல முடியாத ஒரு உறுதி உடலுக்கு வந்து விடுகிறது, குறிப்பாக முதிய மனிதர்கள், விறைப்போடும், வீரியத்தோடும் வாழ்க்கையை எதிர் கொள்ளும் அந்த அழகில் நம்மைப் போன்றவர்களின் சோம்பல் முறிக்கப்படுகிறது, அடுத்த முக்கால் மணி நேரத்தில் முழுக்கத் தயாராகி தேநீர் குடிக்கையில் இரவு படுக்கப் போகும் போது உறங்கி இருந்த காத்மாண்டு விழித்துக் கொண்டு விட்டது. பயணம் துவங்கி விட்டது.

baden-manasarovar

பேருந்துப் பயணம், காத்மாண்டுவில் இருந்து கோதாரி என்று ஒரு நேபாள-சீன எல்லைக் கிராமம் நோக்கிய பயணம், ஏறத்தாழ ஆறு மணி நேரப் பயணம், இன்னும் சில நேரம் நீடிக்கக் கூடாதா என்கிற அளவுக்கு ஏக்கம் தருகிற, இயற்கையின் வனப்பை விழிகளில் அள்ளித் தெளிக்கிற இமயமலைத் தொடர்களின் மீதான பயணம் அது. மந்தையாய் நகரும் பஞ்சு முடி கொண்ட ஆட்டுக் கூட்டமொன்றில் இருந்து ஒரு ஆடு மட்டும் நிமிர்ந்து பார்க்கிறது என்னை, என்னைப் பார்த்து அது வியந்திருக்க வேண்டும், தலையை ஒரு முறை சிலுப்பிக் கொண்டு காதுகளை ஆட்டி அது என்னை அலைக்கழிப்பது போல இருக்கிறது எனக்கு, அந்த ஆடு என்ன நினைத்திருக்கும், இந்த மனிதர்கள் எங்கே போகிறார்கள்? இவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே? நம்மை மேய்க்கிற மனிதனைப் போலவே இருக்கிறானே? இப்படி ஏதாவது நினைத்திருக்கும் அந்த ஆடு? மறக்க முடியாத அந்த ஆட்டின் கண்கள் கொஞ்ச நேரம் கூடவே வருகிறது.

வழக்கமான சில எல்லைப்புற நடைமுறைகளைக் கடந்து நாங்கள் நியாலம் என்கிற இடத்தை அடைகிறோம், இது பயணிகளின் உடல் தகுதிகளைச் சோதிக்கிற ஒரு இடம், ஏறத்தாழ கடல் மட்டத்திலிருந்து பதினான்காயிரம் அடி உயரத்தில் இருக்கிறது, தங்கும் விடுதி இருக்கிறது, இரவு இங்கே தங்கிப் பிறகு பயணத்தைத் தொடர வேண்டும், இரவு அருகில் இருக்கும் ஒரு மலைச் சிகரத்துக்கு வந்து விட்டது, அது மெல்ல நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி மேகங்களோடு நகர்ந்து வருகிறது, அறையில் சாளரத்தில் மெல்ல ஒரு மலையுச்சியில் நகரும் ஏதோ ஒரு வண்டியின் விளக்குகள் ஒரு மலைப்பையும், வியப்பையும் அள்ளித் தெளிக்கிறது, சில நட்சத்திரங்களோடு பேசிக் கொண்டிருக்கும் மலை முகடுகள், குளிருக்குப் பனியைப் போர்த்திக் கொண்டு விட்ட சிகரங்கள், மனிதன் ஒரு சிறு துகளைப் போல அறைகளில் அடைந்து கிடக்கிறான், இயற்கை எப்போதும் திறந்தபடி மனிதனை ஆட்கொள்கிறது, இந்த பிரம்மாண்ட மலைகளையும், ஆறுகளையும் அவற்றின் மொழிகளையும் மனிதனால் கண்டறிய முடியாது, அவை பேரண்டத்தின் ஏதோ ஒரு இனம் புரியாத இயங்கியலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது, இந்தச் சாளரங்கள், அதன் பின்னே இருக்கும் எனது கண்கள், கண்களின் பிம்பங்களை உணர்த்தும் அறிவு எல்லாம் இல்லாமல் போகலாம், இந்த மலைகளும், ஆறுகளும் அப்படியே இருக்கும், அவற்றின் அழகை, அவற்றின் தேவையை நாம் உணர்ந்து பாதுகாக்கும் வரையில்.

nepal

வழியில் குறுக்கிடும் சமதளப்பரப்பு தார்ப் பாலைவனத்தின் நடுவில் நின்று கொண்டிருப்பது போலிருக்கிறது, எந்தத் தாவரங்களும் இல்லை, கொஞ்ச தூரத்தில் பிரம்மபுத்திரா நதி அமைதியாய் தன்னைத்தானே தாலாட்டியபடி நடந்து போகிறது, கரையெங்கும் மலர்ந்து கிடக்கும் வண்ண மலர்களை நலம் விசாரித்தபடி விரையும் அந்த நதி எங்கே போகிறது? அதன் பாதையை யார் வகுத்தார்கள், குறுக்கிடும் காட்டாறுகள், விசித்திரமான சில பறவைகள், மானைப் போலக் காட்சி தரும் ஆடுகள் என்று தொடர்ந்த பயணம் சாகாவில் நிலை பெறுகிறது, சாகாவில் இருந்து இன்னும் நூற்று எண்பத்து ஐந்து கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும், சாகாவில் இரவு கண்களில் படவே இல்லை, பனியும், மேகமும் இரவை மூடிக் கொண்டு விட்டன, சாகாவின் வாழ்க்கையையும், மனிதர்களையும் என்னால் எத்தனை முயான்றும் கண்டு கொள்ளவே இயலவில்லை. மறுநாளில் துவங்கி நகர்கிறது பேருந்து, மணிக்கு அனேகமாக பத்துக் கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க முடிகிறது, மிகக் குறுகலான, ஆபத்தான வளைவுகள் நிரம்பிய சாலை. நகர்ந்து நகர்ந்து ஒரு வழியாக பர்யாங் என்னும் இடத்தை அடைய மாலை மூன்று மணியாகிறது, மானசரோவர் ஏரியின் ஒரு பக்கக் கரைகளை அடைந்து தெளிந்த பளிங்கு மாதிரியான அதன் நீர்ப்பரப்பைப் பார்த்தபோது ஏனோ, மழையில் தேங்கிக் கிடக்கும் குட்டை நீரில் குளித்துத் துவைத்துக் கொண்டிருந்த காரையூர் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் நினைவில் வந்து போனார்கள், இயற்கை யாரும் பயன்படுத்த முடியாத மலை உச்சியில் தூய்மையான நீரைக் கொட்டி வைத்திருக்கிறது, தேவைப்படுகிற பல தேசங்களில் அழுக்கும், கிருமிகளும் கலந்த குட்டை நீரைக் குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுக்கிறது, நீருக்காகக் காத்துக் கிடக்கும் ஈழத்துக் குழந்தைகளின் வரிசை, உகாண்டாவில், சோமாலியாவில் வறண்டு காய்ந்து போன நிலங்களின் கண்ணீரால் இந்த ஏரி நிரம்பிக் கிடக்கிறதோ என்று ஒரு அச்சம் வருகிறது, இருப்பினும் இயற்கை அன்னையின் மடியில் கிடந்து தவழும் அந்தத் தூய்மையான நீர் இமயமலைத் தொடர்களின் மீதான வெண்ணிற விரிப்பைப் போலவே அலையடிக்கும் காட்சியைக் காண இரண்டு கண்கள் நிச்சயம் போதாது.

lake-manasarovar-3

பயணத்தின் இறுதிக் கணங்கள் கடுமையானவை, கூடாரங்களில் தங்கி இளைப்பாற வேண்டும், கொண்டு வந்திருக்கும் உணவும், நீரும் தீர்ந்தால் கடும் சிக்கல், நாங்கள் மவுண்ட் கைலாஷ் என்று சொல்லப்படும் இமயமலைத் தொடர்களில் வீற்றிருக்கும் ஒரு உயர்ந்த சிகரத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறோம், ஆனால், அது எங்கள் கண்களில் படவே இல்லை, மேகங்கள் சூழ்ந்த அந்த மாலையில் அந்த இடத்தில அப்படி ஒரு சிகரம் இருப்பதற்கான அறிகுறியே இல்லை, ஏமாற்றம் மேகங்களைப் போலவும், பனியைப் போலவும் எங்களைச் சூழ்ந்து கொள்ள கூடாரங்களுக்குத் திரும்புகிறோம், உலகின் மிக உயரமான பகுதிகளில் கூடாரங்களில் தங்குவது ஒரு அழகான நிகழ்வு, அங்கு நாங்கள் அனைவரும் மனிதர்கள் என்கிற உணர்வு மட்டுமே மேலோங்கி இருக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்கும் அருகில் படுத்திருக்கும் இன்னொரு மனிதன் மட்டுமே துணை, சாதி அமைப்புகளும், அதன் தலைவர்களும் இங்கே துணைக்கு வர மாட்டார்கள், எங்கள் பயணத் துணையாளர் ஒரு இஸ்லாமியர் என்று சொல்லப்படுகிற மனிதர், என்னருகில் அவர் தான் படுத்திருக்கிறார், இந்து மதத்தின் கடவுள் வாழும் இடம் என்று சொல்லப்படுகிற ஒரு இத்தனை உயரமான இடத்தில் எனக்குப் பாதுகாப்பாக ஒரு இஸ்லாமியரை நான் பெற்றிருப்பதை எந்த மரபில் சேர்ப்பது என்கிற குழப்பம் அந்தக் குளிரையும் கடந்து எனக்குள் ஊடுருவியது ஒன்றும் வியப்பில்லை.

மறுநாள் காலையில் காலம் கடந்தே துவங்குகிறது எங்கள் விடியல், கதிரவனைக் காணவில்லை, எங்கேனும் ஒரு சிகரத்தின் பின்புறத்தில் அவன் ஒளிந்திருக்கலாம், அவனைத் தேடி அலைகிறது மனமும், உடலும். வியப்பான மனித நம்பிக்கைகளின் பல்வேறு காட்சிகள் என் கண்களின் முன்னாள் காணக் கிடைக்கிறது, சிலர் அங்கிருக்கும் கற்களைப் பொருக்கி எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் தாவரங்களின் இலைகளைச் சேகரிக்கிறார்கள், குளிருக்கான தோலாடைகளையும், குல்லாக்களையும் அணிந்து கொண்டு சிலர் பூஜைகள் செய்கிறார்கள், காலம் கடந்து கொண்டே செல்கிறது.

Kailash-Himalayas-Field

படக்கென்று நிழலைத் துரத்தியபடி விரைந்து வந்த ஒளியின் சுவடுகள் கண்களில் படிகிறது, மேகங்கள் விலகிக் கதிரவன் தனது கதிர்களை வலிமையோடு பாய்ச்சுகிறான், எதிரில் மிகப் பிரம்மாண்டமாய் தாடி அணிந்து படித்துக் கொண்டிருக்கும் பெரியாரைப் போல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார் மவுண்ட் கைலாஷ். குளிருக்குக் குல்லா அணிந்த மனிதரைப் போல பனியால் தனது முகடுகளை மூடிக் கொண்டிக் கொண்டு ஒய்யாரமாய் வீற்றிருக்கும் அந்த மலைச் சிகரம் இதுவரையில் நான் பார்த்த இயற்கையின் காட்சி வடிவங்களில் முதன்மையானது. அந்த மலைச் சிகரம் மனித வாழ்க்கையை மிக எளிமையானதாக எனக்கு உணர்த்தியது, பக்கத்தில் இருக்கும் மனிதர்களை மிக நெருக்கமாகப் பார்க்கச் சொல்லிக் கொடுத்தது அந்த மலைச்சிகரம். மனிதர்களின் முரண்பாடுகளை படிந்து கிடக்கிற தூசியைப் போல உணர வைக்கிறது அந்த மலைச்சிகரம். சாதிகள், மதங்கள், இனங்கள், மொழிகள், தேசங்கள், எல்லைகள் இவை எல்லாவற்றையும் இங்கே தொலைத்து விட்டு ஒரு புதிய மனிதர்களாய் உங்கள் இல்லம் திரும்புங்கள் என்று என் காதுகளில் சில மந்திரங்களை உச்சரித்தது. அந்த மந்திரங்களும் எனது தாய்மொழியிலேயே இருந்தது வியப்பானதுதான், வேறு மொழிகளில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்த என்னைச் சுற்றி இருந்த மனிதர்களுக்குப் அது புரிந்ததா என்று எனக்குத் தெரியவில்லை??

***********

 


மறுவினைகள்

  1. vanakkam…nandru.

  2. இந்த மழைக் கோவிலின் காட்சிப் பிம்பம், என் பக்கத்தில் நின்று ரசிக்கிற ஜெர்மானியனுக்கு எப்படித் தெரியும்? a rain temple?????


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்