இரவுகளில் வெளியே செல்ல வேண்டும் என்றால் அப்பாவிடம் அனுமதி பெறுவது மிகக் கடினம், பெரும்பாலும் அனுமதி கிடைக்காது, ஆனால், ஒரே ஒரு சிறப்புச் சலுகை உண்டு, அது இசைக் கச்சேரிகளுக்குச் செல்வதற்கான அனுமதி, ஒரு நாளும் அப்பா கச்சேரிகளுக்குச் செல்வதைத் தடை செய்ததே இல்லை, இசையின் மீதான எனது காதலுக்கு அது ஒரு மிகப்பெரிய அங்கீகாரம் என்று நினைக்கிறேன், நட்சத்திரங்கள் கூடடைந்து கிடந்த ஒரு முன்னிரவில் அப்படித்தான் அனுமதி கேட்டேன். வழக்கம் போல அப்பா "கவனமாகச் சென்று வா" என்றார்கள்.
மிதிவண்டியில் பயணித்து இரவில் காரைக்குடி செல்ல வேண்டும். செஞ்சைப் பள்ளிவாசலுக்கு முன்பு தான் அன்றைய கச்சேரி, வழியில் எதிர்ப்புற ஊர்தியின் விளக்கு வெளிச்சம் கண்களைக் கூச சாலையின் விளிம்பில் சறுக்கிப் பள்ளத்தில் விழுந்து விட்டேன், மழை நீர் தேங்கிக் கிடந்த குட்டையில் கைகளில் சிராய்ப்புகளும், சேறுமாய் அந்த இரவு ஒரு வலி மிகுந்த இரவாக மாறிப்போனது, ஆனாலும் அந்தக் கச்சேரியை விட்டு விடுவதற்கு மனமில்லை, வலியோடு மிதிவண்டியை அழுத்தி பள்ளிவாசலை அடைந்து விட்டேன், அழுக்கான சட்டையோடும், காயங்களோடும் கூட்டத்தில் கலந்திருக்க மனமில்லாமல், ஒரு ஒலிபெருக்கிக்கு அருகில் அமர்ந்திருந்தேன். காலம் கடந்து கொண்டே இருந்தது,
படக்கென்று வெயிலூடே வருகிற கோடை மழையைப் போல அந்த ஒலிபெருக்கியின் உள்ளிருந்து மடை திறந்த வெள்ளமாய் வெளியில் பீறிடுகிறது அந்த சிம்மக் குரல் "இறைவனிடம் கையேந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை", வலி மறந்து, அழுக்கும் மறந்து மேடையின் முன்பாகச் சென்று அந்த வெண்தாடி நடுவே பொதிந்து கிடக்கிற கருத்த உதடுகளில் அந்தக் குரலின் கம்பீரத்தைத் தேடினேன், குரலுக்குள் மூழ்கிப் போகிற அதிசயத்தை முதன் முதலில் எனக்குள் நிகழ்த்தியவர் "இனமான இசைமுரசு நாகூர் ஹனீபா" அவர்கள்.
திரைப்படமும், கர்நாடக இசையும் கலக்காத தொடர்பு கொள்ளாத ஒரு இசையை எல்லா மேடைகளிலும் வழிய விட்டு இஸ்லாமிய இசைக்கான ஒரு பெருமிதத்தைக் உண்டாக்கியவர் அவர், அவருடைய கச்சேரிகளில் முதல் வரிசையில் பெருமளவில் மாற்று மதத்தினர் அமர்ந்திருப்பதைப் பார்த்திருக்கிறேன், தர்க்காக்களைக் குறித்த உயிர்ப்பையும், அறிவையும் பொது சமூகத்தின் இதயத்தில் இசை வழியாய் சேர்த்த பெருமகனார்.
மதங்களைத் தாண்டி திராவிட இயக்க அரசியல் பரப்புரைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட, பணியாற்றிய ஐயா நாகூர் ஹனீபா அவர்களின் குரல் வரலாற்றில் மதிக்கப்பட வேண்டிய குரல். அந்த இரவில் அவர் எழுப்பிய வெண்கலக் குரல் இசை மீதான மதிப்பீடுகளையும், உள்ளார்ந்த ஈடுபாட்டையும் கட்டி எழுப்பிய அற்புதக் குரல்.
அவர் இறந்த அன்று இரவு நிறைமொழிக்கு "இறைவனிடம் கையேந்துங்கள்" பாடலை போட்டுக் காட்டினேன், பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை, பிறகு திடீரென்று நினைவு வந்து "கடலிலே தனிமையில் போனாலும்" பாடலில் இளையராஜா இசைமுரசின் குரலை ஆவணப்படுத்தி இருந்தது நினைவுக்கு வந்தது. அதைக் கேட்டு விட்டு நிறைமொழி பூரிப்போடு சொன்னாள், அப்பா ரஹத்ஜி "மே ஜஹாரஹும்" தமிழில் பாடியது போலவே இருக்கிறது என்று சொல்லிச் சிரித்தாள்.
ரஹத் ஜீயோ, ஹனீபாஜியோ இசைஜி மகளுக்குள் பூத்து மலர்வதைப் பார்க்க மகிழ்ச்சியாய் இருந்தது. அப்பாவும் இப்படித்தான் ரசித்திருப்பார்கள் இல்லையா? நாகூர் ஹனீபாவின் உடல் அழிந்து போனது, அமைதி கொண்டு விட்டது, ஆனாலும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு அவரது குரல் தமிழ்ச் சமூகத்தின் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும், அவர் இசையை மதங்களுக்கு அப்பால் எளிய மக்களின் அரசியல் அரங்குகளில் முழங்கியவர். இஸ்லாமுக்கும், உழைக்கும் எளிய மக்களுக்கான அரசியலுக்குமான நுட்பமான பிணைப்பை தனது பாடல்களில் படம் பிடித்தவர்.
இனமான இசைமுரசு, ஐயா "நாகூர் ஹனீபா"வுக்கு அஞ்சலி.
சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்
By: yarlpavanan on ஏப்ரல் 11, 2015
at 11:11 முப
Thanks Yarl Pavanan, Its my Privilage…….
By: கை.அறிவழகன் on ஏப்ரல் 12, 2015
at 12:29 பிப
இனமான இசைமுரசு, ஐயா “நாகூர் ஹனீபா”வுக்கு அஞ்சலி.
வாழ்த்துக்கள் நண்பரே.உங்கள் தமிழ் மீதான பற்றுக்கு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
By: பிரபுவின் on ஏப்ரல் 13, 2015
at 3:44 முப
மிக அருமையான ஆக்கம்.
நாகூர் ஹனிபா வை தவற விட்டு விட்டோமேன்னு மீண்டும் மீண்டும் அழுகனும் போலுள்ளது .
By: Ismail on மார்ச் 13, 2018
at 11:10 பிப