ஆரியக் குடியேற்றம் அல்லது படையெடுப்பு குறித்த பல்வேறு விவாதங்கள் இன்றளவும் தொடர்ந்து நடைபெறுகிறது, தமிழ்ச் சமூகத்தில் ஆரிய திராவிடக் கோட்பாடுகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அரசியல் வெற்றிகரமாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை மேன்மைப்படுத்தியது, தந்தை பெரியார் திராவிட அரசியல் கோட்பாட்டை முன்னிறுத்தியது, ஆரியம் என்கிற இனக்குழுப் பெயரில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய அரசியல் மயமாக்களைத்தான் என்பதை அவரே பல முறை விளக்கி இருக்கிறார். அறிவியல் வழியிலான விவாதங்களில் இனக்குழு வரலாற்றை அணுகும் போது ஒரு எளிய உண்மையை நாம் திரும்பாத திரும்பச் சொல்ல வேண்டியிருக்கிறது. அது, "ஆரியம் என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு இனவெறிக்கு குறியீடு, அது எளிய உழைக்கும் மக்களின் வாழ்வியலை மதம் மற்றும் பிறப்பின் வழியாகச் சுரண்ட நினைக்கும் மேட்டிமைக் கூட்டத்தின் அடையாளம்".
பெரியார் ஆரிய திராவிடக் கோட்பாட்டை மையமாக வைத்துத் தனது அரசியலை முன்னெடுத்தபோது அவர் தெளிவாகப் பல இடங்களில் சொல்லி இருப்பதைப் போல இந்த கோட்பாட்டுப் போர் மானுட வரலாற்றின் க்ரோமோசோம்களையும், உயிரியல் வழித் தோற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக கலாச்சாரம், பண்பாட்டுக் கூறுகள், தொன்று தொட்டுக் கடைபிடிக்கப் படும் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது.
மானுட வரலாற்றில் அறிவியலும், அதன் விளைபொருட்களும் உயிரியல் வழியான இனக்குழுக் கோட்பாடுகளுக்கும், அகப்பொருள் சிந்தனைகளுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறது, நிலவியல் சார்ந்த உயிரியல் கட்டமைப்பு மானுட உயிர் வரலாற்றில் தகவமைப்பு தொடர்புடையது என்று உயிரியல் வல்லுநர்கள் ஆய்வுகளால் உறுதி செய்திருக்கிறார்கள்.
ஆனாலும், ஏன், இங்கே நாம் ஆரியம் – திராவிடம் போன்ற உள்ளீடுகளை முன்வைத்துத் தொடர்ந்து அரசியல் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது? என்றொரு கேள்வி இயல்பாக எழக்கூடும்.
ஆரியம் அறிவியல் வழியாக முற்றிலும் ஒரு பொய்யான கோட்பாடாகவே இருந்து விட்டுப் போகட்டும், அது குறித்து நமக்கு கவலை இல்லை, ஆரியப் படையெடுப்பு என்கிற ஒரு கோட்பாடு முற்றிலும் கற்பனையாகவே இருந்து விட்டுப் போகட்டும், அது குறித்து நமக்குத் பெரிய அளவில் கவலை இல்லை, ஆனால், தொடர்ந்து திராவிட இயக்க அரசியலில் குறிக்கப்படுகிற ஆரியம் என்கிற கோட்பாடு ஒரு குறியீடு, எளிய உழைக்கும் மக்களின் வாழ்வியலைச் சிதைக்கும், அவர்களின் பிறப்பைக் கேலி செய்யும் ஒரு மேட்டிமைக் கோட்ப்பாட்டின் வடிவமாகவே இங்கே ஆரியம் மேற்கோள் காட்டப்படுகிறது, ஆரியம் என்கிற இந்த அரசியல் இயங்கியல் இங்கே, ஒரு மதத்தைக் வளர்த்தெடுத்தது, அந்த மதத்தின் பெயரில் எழுதப்பட்ட நம்பிக்கையின் மீது கட்டப்பட்ட சட்டங்கள் நான்கு வர்ணங்களைக் கொண்டு சேர்த்தது, அரசவை துவங்கி அரச மரங்கள் வரையில் பிறப்பால் உயர்ந்த பார்ப்பனன் என்றும் பிறப்பால் தாழ்ந்த பஞ்சமன் என்றும் கிளை பரப்பியது. கடந்த பல நூற்றாண்டுகளில் இந்தப் புரட்டு மானுட வாழ்க்கையை, மானுட மனத்தை ஆகப்பெரும் அழுத்தங்களை நோக்கித் தள்ளியது, இந்தப் பிறவிக் கோட்பாடே இந்தக் கணம் வரை இந்திய தேசத்தின் பள்ளிக்கு கூடங்களில் ஆசிரியர்களால் நிகழ்த்தப்படும் சாதிய வன்மம் முதற்கொண்டு இஸ்லாமியர்களின் மீது வெறுப்பு வரையில் ஒரு தொடர் வன்முறையாக நீண்டு பரவுகிறது. இத்தகைய கோட்பாட்டு வன்முறையின் குறியீடாகத்தான் ஆரியம் என்கிற ஒற்றைச் சொல்லை நாம் இங்கே கையாள்கிறோம்.
நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மானுடத்தின் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறுகிறது, மதம் என்கிற கோட்பாட்டின் தலைமைப் பொறுப்பில் கடவுளை மனிதன் அமர்த்துகிறான், அந்தக் கடவுளின் இருப்பிடமாகக் கோவில் வடிவமைக்கப்படுகிறது, கோவிலின் புத்தகங்கள் மனிதனின் சமூக நிலைப்பாடுகளை வரிசைப்படுத்துகின்றன, எடுத்துக்காட்டாக இந்து மதத்தின் மனு தர்மமும், கீதையும் வர்ணங்களை வரிசைப்படுத்தி அவற்றை மனிதனின் தலையில் ஏற்றுகின்றன, கோவிலின் கருவறையில் நுழையத் தகுதியானவன், தகுதியற்றவன் என்கிற வேறுபாடுகளை இந்த மத நம்பிக்கை எளிய மனிதர்களையும் நம்ப வைக்கிறது. குழந்தைகளின் ஆழ் மனதை கடும் அழுத்தத்துக்கு உள்ளாகும் மடமையை இந்த மத நம்பிக்கைகளே உள்ளீடு செய்கின்றன.
சமூகத்தின் அவலமான சாதிக் கட்டமைப்புகளை உருவாக்கிய முதல் அமைப்பு மதம், இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய தேசத்தில் மதத்தின் பெயரால் உழைப்புச் சுரண்டல் துவங்கி அரசியல் அதிகாரம் வரையில் ஊடுருவிச் செல்லும் மறைமுகச் சுரண்டல் அமைப்பே மதம், மதம் குறித்த அறிவியல் பூர்வமான சிந்தனைத் திறப்புகளை உருவாக்கும் கல்வி முறை தொடர்ந்து இங்கே மறுக்கப்பட்டு வருகிறது, மாறாக அமைப்பு ரீதியாக மதத்தின் கட்டுமானங்களை உறுதி செய்யும் எல்லா வேலைகளையும் பார்ப்பனீயச் சிந்தனை கொண்ட அரசுகளும், அதன் உறுப்புகளும் தொடர்ந்து நிலை நாட்டி வருகின்றன.
மதங்களின் வரலாறும், மதம் மானுடத்தின் ஆழ்மனதில் நிகழ்த்தும் நம்பிக்கை சார்ந்த கற்பிதங்களும் இந்தியக் கல்வி முறையில் உடனடியாகக் கற்பிக்கப்பட வேண்டும், மதம் உருவாக்கிய சாதிக் கட்டமைப்பின் வேர்கள் அறிவியல் வழியாக நமது மாணவர்களுக்கு ஊட்டப்பட்ட வேண்டும், மதம் இந்திய தேசத்தில் உருவாக்கி இருக்கும் நம்பிக்கை சார்ந்த கற்பிதங்களை அழிக்காமல் சாதியையோ, வர்ண பேதங்களையோ நம்மால் ஒழிக்கவே இயலாது. மதம் குறித்த அடிப்படை நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் சிந்தனையே இல்லாத ஒரு சமூகத்தில் சாதி ஒழிப்பு குறித்த விளம்பரங்களால் எந்தப் பயனும் உருவாகி விடப் போவதில்லை.
காலம் காலமாக நமது குழந்தைகள் மதத்தின் பெயரால், இனக்குழுக்களின் பெயரால் அறிவில் தாழ்ந்தவர்கள், ஒழுக்கத்திலும், பல்வேறு ஆற்றல்களிலும் திறன் குறைந்தவர்கள் என்கிற ஒரு கற்பித்தத்தால் மனச் சிதைவுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள், ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனையில் ஒரே மாதிரியான உயிரியல் தகுதிகளோடு பிறக்கும் குழந்தைகளில் ஒன்று உயர் குலத்தில் பிறந்ததென்றும், மற்றொன்று கீழானது என்றும் சான்றளிக்கப்படுகிறது, இந்த வேறுபாடு தொடர்ந்து மதத்தின் பெயரால் நிலை நிறுத்தப்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத இந்த அழுத்தமான வேறுபாட்டை பல்வேறு சமூக நிலைப்பாடுகளில் எதிர் கொள்ளும் குழந்தைகள் தங்கள் மேன்மையான வாழ்க்கைப் பயணத்தில் இந்தத் தடையை உடைக்கும் வலிமை கொண்டவர்களாக மாற்றுவதற்குக் கல்வியும், வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்கிற உயர் நோக்கிலேயே இட ஒதுக்கீட்டு முறையை அண்ணல் அம்பேத்கார் நடைமுறைப்படுத்த முனைந்தார், அரசியல் அதிகாரம் பெறுவதற்கும் தடையாக இருக்கும் சமூகக் காரணிகளை மையமாக வைத்தே இந்திய அரசியலமைப்பில் இரட்டை வாக்குரிமை முறையை அறிமுகப்படுத்த முயன்றார்.
தமிழ்ச் சமூகத்தில் இந்தத் தடைகளை உடைக்கும் முதல் படியாகவே தந்தை பெரியார் ஆரியம் – திராவிடம் என்கிற கோட்பாட்டு அரசியல் நடத்தினார், அது மரபு வழியானது இல்லை என்று அவரே தனது பல்வேறு உரைகளிலிலும், எழுத்துக்களிலும் விளக்கினார். ஆனாலும், அவர் மரபு வழி இனக்குழு வாதத்தை வைத்து அரசியல் செய்தார் என்கிற புரட்டு இன்றளவும் பார்ப்பனீயத்தால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.
இன்றைய நவீன உலகின் மானுடம் அறிவியல் வழியாக ஒரு புள்ளியில் இருந்து பிரிந்து பல்வேறு நிலவியல் மற்றும் உயிரியல் சார்ந்த கிளைகளாகப் பரவியது என்பதுதான் நிலைத்த உண்மை, அறிவும், திறன்களும் எந்த ஒரு மானுடப் பிரிவிலும் பிறப்பால் கிடைத்து விடவில்லை, சூழலும், வாய்ப்புகளும், கல்வியும், பொருளாதாரமும் மானுடத்தின் அறிவையும், திறன்களையும் நிர்ணயம் செய்யும் காரணிகள் என்பது அறிவியல் சார்ந்து சிந்திக்கிற எந்த ஒரு நவீன மனிதனுக்கும் புலப்படும்.
ஆரியம் அல்லது பார்ப்பனீயம் என்பது ஒரு இனவெறிக் குறியீடு, அது இன்றைய இந்தியாவின் அரசியல், பொருளாதாரம். கல்வி, வேலை வாய்ப்பு என்று எல்லா நிலைகளிலும் தனது கிளைகளை பரப்பி மதத்தின் பெயரால் செய்த வேலைகளை இப்போது தேசியத்தின் பெயரால் முன்னெடுக்க விரும்புகிறது. தனது உணவுப் பழக்கத்தை மிக உயர்ந்ததென்று சொல்லி உழைக்கும் எளிய மனிதனின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது, மதம் சார்ந்த அரசியலை உணர்வுக் குவியலாய் மாற்றி இந்து – முஸ்லீம் பிரிவினையைத் தூண்டுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உணவில் கைவைத்து அவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது.
இந்திய சமூகத்தில் வேரூன்றி இருக்கும் இந்த ஆரிய இனக்குழு அரசியலை உடைத்து உயர் மானுட சமூகத்தின் எல்லைகளுக்குள் நாம் நுழைய வேண்டுமானால், திராவிட இயக்க சிந்தனைகளால் உரமூட்டப்பட்ட நமது அரசியல் இயக்கங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தொடர்ந்து மதம் மற்றும் சாதி குறித்த அறிவியல் சிந்தனைகள் அடங்கிய கல்வித் திட்டத்தை நோக்கி நகர வேண்டும், அதன் முதல் படியாக மதம் சாதி குறித்த உள்ளார்ந்த அறிவியல் பயிலரங்குகளையும், விழிப்புணர்வையும் உருவாக்க முன்வர வேண்டும்.
இறுதியாகப், பிறவியிலேயே நான் தகுதி பெற்றவன் என்று சொல்கிற எவனும் நேர்மையாக இந்த உலகை அணுகும் மனநிலையில் இல்லாத மனஅழுத்தம் கொண்டவன், அத்தனை எளிதாக அவனால் பிறவித் தகுதியை விட்டு விலகி ஒரு வெளிப்படையான போட்டியைச் சந்திக்க இயலாது. ஆகவே அவனோடு மல்லுக்கட்டும் முட்டாள்தனமான விளையாட்டை நம்மால் செய்ய முடியாது.
மாறாக நமது குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் திறன்களையும், அழகையும் போற்றும் கலையை நாம் கற்றுக் கொடுக்க வேண்டியிருக்கிறது. நல்ல நூல்களை வாசிக்கவும், நல்ல மனிதர்களோடு அவர்கள் உரையாடும் வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுங்கள். சிறந்த நண்பர்களை உருவாக்கிக் கொடுத்து தேவைகளுக்கான வாழ்க்கை முறையை அறிமுகம் செய்யுங்கள். வாழ்க்கையின் கடுமையான சூழல்களை அவர்கள் எதிர் கொள்ளும் துணிவையும், வழிமுறைகளையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
சமூக ஏற்றத்தாழ்வுகளை உடைத்து நமது குழந்தைகள் முன்னேற ஒழுக்கமான வாழ்க்கை முறை ஒரு மிக முக்கியமான தேவை, தரமான, சிறந்த உணவு முறைகளையும், உடற்பயிற்சி முறைகளையும் அவர்கள் கற்றுக் கொள்ள வழி வகை செய்யுங்கள், தாங்கள் சிறந்தவர்கள் என்கிற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குங்கள், எந்த நிலையிலும் தம்மை விடப் பிறப்பால் உயர்ந்த ஒருவன் உண்டென்று அவர்களை நம்ப விடாதீர்கள். அந்த மனஅழுத்தம் அவர்களை அணுக விடாமல் அவர்களைப் பாதுகாப்பது மிக மிக அவசியமான ஒன்று.
உரிமைகளுக்காகப் போராடும் பழக்கத்தை வளர்ப்பதும், தடையின்றித் தங்கள் அரசியல் பிரதிநிதிகளை சந்திப்பதும் அவர்களின் உரிமை என்கிற அடிப்படை அரசியலை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள், அவர்களின் உரிமைகளுக்காக நீங்கள் குரல் கொடுப்பதை நிறுத்தி அது அவரவர் வேலை என்று உணர்ச்சி செய்யுங்கள், பள்ளிகளில் துவங்கி, வேலையிடங்கள் வரை அவர்களின் உரிமைகளுக்காக அவர்கள் பேசும் வலிமையை அவர்களுக்கு வழங்குங்கள். உரிமைக்கான போராட்டங்களும், திட்டங்களும் தான் இன்றைய நவீன உலகில் பல்வேறு வேறுபாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த ஆயுதங்கள், ஆகவே, உணர்ச்சிப் பெருக்கோடு உங்கள் உரிமையைப் போராடி வெல்லுங்கள் என்று குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.
மூர்க்கத்தனமாகப் போராடுவதும், திட்டமிட்டுப் போராடுவதும் வெவ்வேறானவை, மூர்க்கமான போராட்டங்கள் இழப்புகளை வழங்கக் கூடும், தெளிவான திட்டங்களோடு உங்களால் என்ன செய்ய முடியும் என்கிற உள்ளார்ந்த சீராய்வுகளை மேற்கொள்ளுங்கள். தனியாகப் போராடுவதற்கும், குழுக்களாய், இயக்கங்களாய் நின்று போராடுவதற்குமான வேறுபாடு மிக முக்கியமானது, நண்பர்களையும், குடும்பத்தினரையும் இணைத்துக் கொள்ளுங்கள், ஒற்றைச் சாதியையும் மதத்தையும் உயர்த்திப் பிடிக்கும் எந்த மனிதரின் கருத்தையும் உடனடியாக எதிர் கொண்டு அவர் சொல்வது உண்மைக்கு மாறானது, குற்றச் செயல் என்று முகத்திற்கு எதிரே சொல்லும் வலிமையைக் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.
காலம் காலமாய் எந்த மத நம்பிக்கைகளை நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோமோ அந்த நம்பிக்கைகள் தான் நம்மை இன்னும் அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்கிற அடிப்படை உண்மையை உணர்ந்து அதிலிருந்து வெளியேறும் வலிமையை அவர்களுக்கு வழங்குங்கள். மானுட வாழ்க்கை ஒப்பற்றது, புவிப்பந்தில் வாழும் வாய்ப்பு உயிர்களுக்குக் கிடைத்திருக்கிற இந்த அரிய வாய்ப்பை இனக்குழு வாதங்களோடும், மதக்குழு வாதங்களோடும், சாதிய, பாலின வேறுபாடுகளையும் கடைபிடிப்பதன் மூலம் வீணாக்குவது மடமைத்தனம். இன்னும் அழகான உலகை உருவாக்குவது வேறுபாடுகளைக் களைவதன் மூலமாகவே நிகழ்த்தப்படும்.
அண்ணல் அம்பேத்கர் சொன்னதைப் போல, "நமது இந்தப் போராட்டம், பொருளுக்கானது அல்ல, அதிகாரத்துக்கானதல்ல, மானுட குலத்தின் மேன்மைக்கானது".
மறுமொழியொன்றை இடுங்கள்